செவ்வாய், 26 ஏப்ரல், 2016

அறுவடைக்குக் காத்திருக்கும் "சேலம் சன்னா': இயற்கை விவசாயத்தில் களமிறங்கிய பட்டதாரி இளைஞர்

பட்டதாரி இளைஞரின் இயற்கை விவசாயத்தில் முதல் முயற்சியாக பாரம்பரிய நெல் ரகமான "சேலம் சன்னா' தற்போது கதிர் முற்றி அறுவடைக்காகக் காத்திருக்கிறது.
 தருமபுரி மாவட்டம், மாதேமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட குட்டூரைச் சேர்ந்தவர் அரங்கு. திருமாவளவன் (25). மின்னணுவியல் மற்றும் தொடர்பியலில் Dip (ECE)பட்டயம் பெற்று, இளங்கலை ஆங்கில இலக்கியம் BA(ENG) முடித்தவர்.
 சுற்றுச்சூழலில் ஆர்வம் கொண்ட இளைஞரான இவர், தனக்குச் சொந்தமான அரை ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய நெல் ரகமான "சேலம் சன்னா'வை கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் விதைத்தார். தருமபுரி மாவட்டத்துக்கு "சேலம் சன்னா' புதியது.
 இப்போது சிறப்பாக கதிர் முற்றி அறுவடைக்காகக் காத்திருக்கிறது "சேலம் சன்னா'. ரசாயன உரங்களை முற்றிலும் தவிர்த்த திருமாவளவன், சாகுபடிக்கு நடுவே இயற்கைப் பூச்சி விரட்டியையும்கூடப் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடும்படியான விஷயம்.
 அடுத்த வாரத்தில் அறுவடை செய்ய இருப்பதாகக் கூறும் திருமாவளவன் தற்போது தருமபுரியில் பாரம்பரிய அரிசி, சிறு தானியங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் சிறிய கடையையும் திறந்திருக்கிறார்.
 இது குறித்து அவர் மேலும் கூறியது:
 மறைந்த எனது தந்தை தமிழாசிரியர் அரங்கநாதன்தான் எனது விவசாய ஆர்வத்துக்குக் காரணம். எங்கள் குடும்பத்துக்கு இங்கே இரண்டரை ஏக்கர் நிலம் இருக்கிறது. முதல் முயற்சியாக "சேலம் சன்னா'வை அரை ஏக்கரில் மட்டும் சாகுபடி செய்து முடித்திருக்கிறேன்.
 திருச்சியைச் சேர்ந்த சம்பத் என்பவர்தான் விதை நெல்லைத் தந்தவர். இயற்கை விவசாய முறைப்படியே சாகுபடி செய்வீர்களா? எனப் பல முறை உறுதி செய்த பிறகே 5 கிலோ விதை நெல்லைக் கொடுத்தார்.
 தனது நிலத்தில் 100 நாள்கள் பயிராக அதை விளைவித்தவர் அவர். எனக்கு தற்போது ஏறத்தாழ 120 நாள்களைக் கடந்திருக்கிறது. கழனியைத் தயார் செய்வதற்காக எருக்கு, ஆத்தஅரளி போன்ற பால் வரும் செடிகளைப் போட்டு தழையுரமாக மிதித்ததுடன் சரி.
 நாற்றுவிட்டு, பயிர் விட்டதும் நட்டு முடித்தோம். தண்ணீர் விடுதலிலும் வழக்கத்தைவிட சிறப்பாக எதுவும் செய்யவில்லை. எங்கள் நிலத்தைச் சுற்றிலும் உள்ள நிலத்தில், ரசாயனப் பூச்சிகொல்லி மருந்துகளை வாரி இறைத்தபோது லேசான அச்சம் எழுந்தது.
 பூச்சிகளெல்லாம் நமது நிலத்துக்கு வந்துவிட்டால் என்ன செய்வது? என அச்சப்பட்டு, இயற்கை முறைப்படி சாணம், கோமியம், நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை ஊற வைத்து பூச்சி விரட்டி தயார் செய்யவும் முற்பட்டேன். அதற்குள் பயிர் முற்றியது. என்ன ஆனாலும் பரவாயில்லை என விட்டு விட்டேன்.
 எந்தப் பாதிப்பும் இன்றி "சேலம் சன்னா' நன்றாக விளைந்து தலை சாய்த்திருக்கிறது. பாரம்பரிய நெல் ரகங்கள், சிறு தானியங்கள் தேவைக்கேற்ப விளைச்சல் இல்லாததால் மட்டுமே விலை அதிகமாக விற்கப்படுகிறது. எனது முயற்சி சிறிதேனும் மாற்றத்தைக் கொண்டு வரலாம்' என்கிறார் அரங்கு. திருமாவளவன் நம்பிக்கையுடன்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka