புதன், 18 மே, 2016

தேர்ச்சி சதவீதம்: +2 தேர்வில் திருவாரூர் மாவட்டத்துக்கு எந்த இடம் ?

File:Sad-face.jpg
  • பிளஸ் 2 தேர்வில் 96.92 % பேர் தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் முதலிடம் ., நம் மாவட்டத்துக்கு கடைசி (க்கு முதல் ) இடம் !!!???











SI.NO மாவட்டம் சதவீதம்
1  ஈரோடு  96.92
2  பெரம்பலூர்  96.73
3  விருதுநகர்  95.73
4  கன்னியாகுமரி  95.7
5  தூத்துக்குடி  95.47
6  திருப்பூர்  95.2
7  தேனி  95.11
8  சிவகங்கை  95.07
9  ராமநாதபுரம்  95.04
10  திருநெல்வேலி  94.76
11  திருச்சி  94.65
12  நாமக்கல்  94.37
13  கோவை  94.15
14  கரூர்  93.52
15  மதுரை  93.19
16  புதுக்கோட்டை  93.01
17  சென்னை  91.81
18  ஊட்டி  91.29
19  சேலம்  90.9
20  காஞ்சிபுரம்  90.72
21  திருவண்ணாமலை  90.67
22  அரியலூர்  90.53
23  திண்டுக்கல்  90.48
24  தர்மபுரி  90.42
25  தஞ்சாவூர்  90.14
26  விழுப்புரம்  89.47
27  பாண்டிச்சேரி  87.74
28  திருவள்ளூர்  87.44
29  நாகப்பட்டினம்  86.8
30  கிருஷ்ணகிரி  85.99
31  கூடலூர்  84.63
32  திருவாரூர்  84.18
33  வேலூர்  83.13

திங்கள், 16 மே, 2016

திருத்துறைப்பூண்டி தொகுதி அனைத்து வேட்பாளர்களும் வாக்களித்தனர்

திருத்துறைப்பூண்டி : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள குன்னலூர் குடிசேத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திருத்துறைப்பூண்டி தொகுதி திமுக வேட்பாளர் ஆடரலசன் வாக்களித்தார். இந்திய கம்னியூஸ்ட் கட்சி வேட்பாளர் உலகநாதன் சிங்களாந்தி விக்டரி உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் வாக்களித்தார். அதிமுக வேட்பாளர் உமாமகேஸ்வரி புனித தெரசாள் தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார்.

முன்னாள் எம்எல்ஏ.பழனிச்சாமி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், முன்னாள் நகரமன்ற தலைவர் ராஜேஸ்வரி செல்வராஜ், திமுக நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன் ஆகியோர் புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தனர். அதிமுக நகர செயலாளர் சண்முகசுந்தரம்  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார். பாஜக. வேட்பாளர் உதயகுமார் இருள்நீக்கி அரசு நடுநிலைப்பள்ளியில் வாக்களித்தார்.

திருத்துறைபூண்டியில் நேற்று முன்தினம் தொடங்கிய மழை இரவு பெய்தும் நேற்று காலை முதலும் பலத்த மழை பெய்தது. மதியம் 12 மணிக்கு மேல் மழை குறைந்து விட்டது. நேற்று முன்தினம் இரவு முதல் மின்தடை இருந்து வந்தது. நேற்று காலை 9 மணி வரை மின்தடை இருந்ததால் வாக்களிக்க வந்த வேட்பாளர்கள், வாக்காளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. நேற்று முழுவதும் மின்தடை அடிக்கடி ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் ஓடாச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மதிவாணன் தன் வாக்கை பதிவு செய்தார்.

வாக்குப்பதிவு சதவீதம் - 78.27.: மாவட்டத்தில் இரண்டாம் இடம்

திருவாரூர் மாவட்டத்திலுள்ள 4 பேரவைத் தொகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தலில் 78.04 சதவீதம் வாக்குகள் பதிவானது.
தொகுதிகள் வாரியான வாக்குப்பதிவு விவரம்:
திருத்துறைப்பூண்டி தொகுதி: ஆண்கள் -1,10,918.
பெண்கள் -1,11,820. மற்றவர்கள்- 1 மொத்தம் - 2,22,739
பதிவான வாக்குகள்: ஆண்கள் -83,127. பெண்கள்- 91,221.
மொத்தம் - 1,74,348. வாக்குப்பதிவு சதவீதம் - 78.27.

திருவாரூர் தொகுதி: ஆண்கள் - 1,25,356. பெண்கள் -1,27,661,
மற்றவர்கள்- 13, மொத்தம்- 2,53,030. பதிவான வாக்குகள்:
ஆண்கள்- 93,854. பெண்கள்- 1,01,288. மொத்தம் -1,95,142
வாக்குப்பதிவு சதவீதம்- 77.12.

மன்னார்குடி தொகுதி: ஆண்கள் - 1,18,926. பெண்கள் - 1,22,318.
மற்றவர்கள்- 3. மொத்தம்: 2,41,247. பதிவானவை- ஆண்கள் - 86,620.
பெண்கள் - 98,042. மற்றவர் - 1. மொத்தம்- 1,84,663.
வாக்குப்பதிவு சதவீதம் 76.55.

நன்னிலம் தொகுதி: ஆண்கள் -1,28,064. பெண்கள்- 1,24,832
மற்றவர்-1. மொத்தம் - 2,52,897.
பதிவானவை: ஆண்கள்-99,325. பெண்கள் 1,03,840.
மொத்தம்- 2,03,840.
வாக்குப்பதிவு சதவீதம் 80.17.

மாவட்டத்தில் நான்கு தொகுதிகளிலும் சேர்த்து சராசரியாக 78.04 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
 நன்றி 
தினமணி 

புதன், 11 மே, 2016

விவசாயிகள் கைது : பதற்றம்

திருத்துறைப்பூண்டி :  காவிரி பிரச்னையில் மவுனமாக இருப்பதை கண்டித்து இன்று வேதாரண்யம் வரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டப்போவதாக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார். இந்த நிலையில் நாகை மாவட்ட காவல் துறை மாவட்ட எல்லைக்கு உள்ளே  போராட்டக்காரர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.  தடையை மீறி கருப்பு கொடி காட்ட விவசாயிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.  காவல் துறையும் கருப்பு கொடி காட்ட முயற்சி செய்யும் விவசாயிகளை திருத்துறைப்பூண்டியில் சுற்றி வளைத்து கைது செய்ய முயற்சி செய்து வருகிறது. இதனால் திருத்துறைப்பூண்டியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

செவ்வாய், 10 மே, 2016

மக்களுக்கு உதவாத பாரம்பரிய குளங்கள்

திருத்துறைப்பூண்டி நகராட்சிப் பகுதியில் மாசடைந்த குளங்களுக்கு தண்ணீர் வரும் பாதை ஆக்கிரமிப்புக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டத்தை பாதிக்கும் இச்செயல்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேட்பாளர்கள் வாக்குறுதி அளிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அரசு நிலங்களில் குடியிருப்போருக்கு குடிமனை பட்டா வழங்கும்போது நீர்நிலை புறம்போக்கு நிலங்களை மட்டும் வகை மாற்றம் செய்து பட்டா வழங்க இன்னும் தடையுள்ளது.

நீர்நிலை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பில் உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தளித்து.

திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து ஊராட்சி ஒன்றியம் சார்பில், வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இங்கு புதிய பேருந்து நிலையமே விதைவிடுகுளத்தைத் தூர்த்து கட்டியதாகும். நகரில் குளங்கள், உபரிநீர் வழிந்தோடும் கால்வாய்கள், குளங்களுக்கு நீர் வரும் பாதை ஆகியவற்றை ஆக்கிரமித்து அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டப்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 32 குளங்கள் உள்ளன. நகராட்சி எதிரே உள்ள ராமர்மடக்குளம், அதன்பின்னே உள்ள நந்தவனக்குளம், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள செங்கமலக்குளம், உப்புக்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களுக்கும் நீர்வரும் வழிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இதனால் குளங்கள் மாசடைந்த கொசு உற்பத்தியாகும் நீர்தேக்கங்களாக மாறிவிட்டன.

செங்கமலக்குளத்துக்கு வரும் வாய்க்கால் தனியார் பள்ளி நிர்வாகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பள்ளியே நீரில் சூழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ்.நடராஜன் ஆக்கிரமிப்பை அகற்ற முயற்சி மேற்கொண்ட நிலையில் அவர் பணி மாறுதல் பெற்றுச் சென்றார். அதன்பிறகு பழைய நிலையே தொடருகிறது. இந்தக் குளங்கள் பராமரிக்கப்படாததால் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட நீரையே மக்கள் நம்பியுள்ளனர்.

எனவே மாசடைந்த குளங்களை பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் பாரபட்சமின்றி அனைத்து குளங்களுக்கும் நீர்வரும் வழிபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளங்களை தூர்வார அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருத்துறைப்பூண்டியில் சீர்கெட்டுப்போன குளங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நடவடிக்கை மேற்கொள்வேன் என்று வாக்குறுதி அளிக்க வேண்டும். அத்தகைய வேட்பாளர்களை எதிர்பார்த்தே வாக்களிக்கவுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

TKS
dinamani.com

பெண்கள் வாட்ஸ்அப் தொல்லையிலிருந்து தப்பிக்க 5 டிப்ஸ்!

‘டிபி சூப்பர்’ என்று மெசேஜ் அனுப்புவதில் இருந்து, ‘புளூ டிக் காட்டுது, பதில் ப்ளீஸ்' என ரிப்ளை அனுப்பச்சொல்லிக் கேட்பதுவரை, வாட்ஸ்அப்பில் பெண்களை இம்சிக்கும் தொல்லைகளில் இருந்து விடுபட 5 பாதுகாப்பு நடவடிக்கைகள் இங்கே....



1. ப்ரொஃபைல் பிக்சர்

நீங்கள் மொபைல் நம்பர் தரவில்லை என்றாலும், காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் குரூப், ரோட்டராக்ட் குரூப், ஆபீஸ் குருப் என்று குரூப்பில் இருந்து உங்கள் எண்ணை எடுத்துக்கொண்டு, 'ஸ்டேட்டஸ் சூப்பர்', 'டிபி க்யூட்' என்று ஆரம்பிக்கிறார்களா? வாட்ஸ்அப் அக்கவுன்ட் செட்டிங்ஸில், ப்ரொஃபைல் பிக்சர், ஸ்டேட்டஸ் அனைத்தும் நீங்கள் அலைபேசியில் பதிந்துவைத்துள்ள தொடர்புகளுக்கு மட்டுமே தெரியும் வகையில் 'கான்டாக்ட்ஸ் ஒன்லி' என்று செட்செய்துவிடுங்கள். அந்நியர்கள் அவுட்!

2. லாஸ்ட் சீன்

நீங்கள் கடைசியாக எப்போது வாட்ஸ்அப் பார்த்தீர்கள் என்பதை உலகத்துக்குச் சொல்லும் ‘லாஸ்ட் சீன்’ ஆப்ஷனைப் பார்ப்பதையே முக்கிய வேலையாக வைத்துக்கொண்டு, ‘என்ன இந்தப் பொண்ணு நைட் 12 மணிக்கு ஆன்லைன் வந்திருக்கு’ என்று உங்களை நிழலாகத் தொடரும் கவனிப்பு வளையத்தில் இருந்து விடுபடுங்கள். அதற்கு, 'லாஸ்ட் சீன்'-ஐ யாரும் பார்க்கமுடியாதபடி 'நோபடி(Nobody)' என்று மாற்றிவிடுங்கள். சுதந்திரம் பேக்கப்!

3. புளூ டிக்

இரண்டு புளூ டிக்குகளைப் பார்த்துவிட்டால், இங்கு பலரும் ஏதோ கிரீன் சிக்னலை பார்ப்பதுபோல மூளை பிசகிக்கிடக்கிறார்கள். அவர்களுக்குப் புரியவைப்பதற்கு எல்லாம் உங்களுக்கு நேரமில்லை. எனவே, அதுபோன்ற கான்டாக்ட்கள், தெரியாத எண்களில் இருந்து வரும் தொடர் மெசேஜ்களை ஓபன் செய்யாமல் இருந்துவிடுங்கள். புளூ டிக் பார்க்கவில்லை என்றால் ஆட்டோமெட்டிக்காக அவுட் ஆகிக்கொள்வார்கள் நாகரிகம் தெரிந்தவர்கள். எளிமையான தீர்வு!



4. சென்டிமென்டல் ஆஃப்

இது பழைய டெக்னிக்தான். பெர்சனல் சாட்டில் வந்து பொறுத்துக்கொள்ள முடியாதபடி தொல்லைகொடுத்தால், அந்த கான்டாக்ட்டும் நீங்களும் இருக்கும் குரூப் சாட்டில், ‘சொல்லுங்க பிரதர்’ என்று அவருக்குத் தட்டுங்கள். பார்ட்டி ஆஃப் ஆகிவிடும். சப்ஸ்க்ரைபர் நாட் ரீச்சபிள்தான்!

5. பிளாக்

‘குட் மார்னிங்’, ‘குட் டே’ என்று டீசன்டாக என்ட்ரிகொடுத்துவிட்டு, பின் மெல்ல மெல்ல எல்லை மீற ஆரம்பித்தால்... யோசிக்காமல் அந்த கான்டாக்ட்டை பிளாக்செய்து விடுங்கள். பிரச்னையை வளரவிட்டு வருந்தாதீர்கள். பார்டர் தாண்டினால் பிளாக்! இந்த எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி ‘என் பணி உன்னை டிஸ்டர்ப் செய்வதே’ என்று மெயின் இன்பாக்ஸ் வருபவர்களை, மைண்டில் இருந்து கன்ட்ரோல்+ஆல்ட்+டெலிட். உங்களுக்கு உருப்படியான வேலைகள் நிறைய உள்ளன!
tks
Vikadan

சனி, 7 மே, 2016

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தை கலெக்டர் பார்வை

மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் ஆய்வு செய்தார். மேலும் வாக்குச்சாவடி மையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ள இடத்தையும் பார்வையிட்டார்.

ஆய்வு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அசேசம், மேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான வெங்கடேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். நெடுவாக்கோட்டை ஊராட்சி மேலநாகை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அசேசம் ஊராட்சி இலக்கனாம்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டார். பின்னர் சாய்தள வசதிகள், குடிநீர், மின்சாரம், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் அமைந்துள்ளதா என கேட்டறிந்தார். தொடர்ந்து வாக்காளர்கள் நுழைவு வாயில் பகுதிகளையும், வெளியே செல்லும் பகுதிகளையும் ஆய்வு செய்தார்.

கண்காணிப்பு கேமரா

இதை தொடர்ந்து திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடி மையமான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டார். இந்த வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கேட்டறிந்தார். மேலும் வாக்குச்சாவடி மையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ள இடத்தையும் பார்வையிட்டார்.

பின்னர் எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தையும், அடிப்படை வசதிகள் மற்றும் வாக்காளர் வாக்களிக்க வரும் நுழைவு வாயில் பகுதிகளையும் ஆய்வு செய்தார். வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள பகுதிகளை சுற்றி 200 மீட்டர் அளவிற்கு அடிப்படை தேர்தல் நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா என கேட்டறிந்தார்.

ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன், சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செல்வசுரபி (மன்னார்குடி), பிரேம்குமார் (திருத்துறைப்பூண்டி) ஆகியோர் உடன் இருந்தனர்.

123 வழக்குகள் : 4,296 வெளி மாநில மதுபாட்டில்கள் : 2,991 லிட்டர் சாராயம் - கலெக்டர் வெங்கடேஷ் தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை 123 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என கலெக்டர் வெங்கடேஷ் கூறினார்.

பேட்டி

திருவாரூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான வெங்கடேஷ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி வருகிற 10-ந்தேதிக்குள் முடிக்கப்படும்.

திருவாரூர் மாவட்டத்தில் 1,152 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவை 100 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தேவையான குடிநீர், மின்சாரம், கழிவறை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தள வசதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 52 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியபட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 1,325 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வண்ண வாக்காளர் அடையாள அட்டை

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வருகிற 9-ந் தேதி வேட்பாளர் பெயர், சின்னங்கள் போன்றவை வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் நடைபெறும். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டுகள் பயிற்சி முகாமில் வழங்கப்படும். பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகள் உரிய போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் வைக்கப்படும்.

திருவாரூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட 9,592 வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. புதிய வாக்காளர் அனைவரும் தவறாமல் வாக்களித்திட வேண்டும். மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை 123 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் 4,296 வெளி மாநில மதுபாட்டில்கள், 2,991 லிட்டர் சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தலில் பயன்படுத்தப்பட்ட 23 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

சட்டமன்ற தேர்தல் தொடர்பான புகார்களை திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி சட்டமன்ற தொகுதிகளுக்கு மத்திய தேர்தல் பார்வையாளர்கள்கள் (பொது) ஒனிட் பான்யான்ங், திருவாரூர், நன்னிலம் சட்டமன்ற தொகுதிகளுக்கு துர்காதாஸ் கோஸ்சுவாமி, மத்திய தேர்தல் பார்வையாளர் (காவல்) சாவான் ஆகியோரிடம் தினமும் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை திருவாரூர் விளமல் பயணியர் மாளிகையில் நேரில் சந்தித்து புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன், மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ், திருவாரூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துமீனாட்சி, செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி தனபால் உள்பட பலர் உடன் இருந்தனர்.

வெள்ளி, 6 மே, 2016

அம்பேத்கர் சிலை அருகில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு

திருத்துறைப்பூண்டி நகர் அம்பேத்கர் சிலை அருகில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கொடி அணிவகுப்பு பேரணிக்கு திருத்துறைப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் எம். கண்ணதாசன் தலைமை வகித்து, தொடங்கிவைத்தார்.

பேரணிக்கு காவல் ஆய்வாளர் அமுதாராணி, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி, போக்குவரத்து காவல்பிரிவு ஆய்வாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள சாய்ராம் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் சார்பு ஆய்வாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, மனோகரன், போக்குவரத்து காவல் பிரிவு சார்பு ஆய்வாளர்கள் கபீர்தாஸ், கல்விக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வியாழன், 5 மே, 2016

பொதுத்தேர்வு முடிவுகள் :பிளஸ்-2 : 17-ம் தேதி ; 10-வகுப்பு: 25-ம் தேதி


பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு 17-ம் தேதியும், 10-வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 25-ம் தேதியும் வெளியாகிறது என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி பிளஸ்-2 பொதுத் தேர்வு தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி நிறைவு பெற்றது. தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வை 8.39 லட்சம் மாணவர்கள் எழுதினர்.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-வகுப்பு பொதுத் தேர்வை 10.72 லட்சம் மாணவர்கள் எழுதினர். எழுதிய மாணவர்கள் மதிப்பெண்கள் விபரங்களை தெரிந்துக் கொள்ளவும், உயர்கல்விக்கு சேர்வதிலும் ஆர்வமாக உள்ளனர். தற்போது பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு 17-ம் தேதியும், 10-வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 25-ம் தேதியும் வெளியாகிறது என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வரும் 17-ம் தேதி காலை 10:31 முதல் 11 மணிக்குள் வெளியிடப்படுகிறது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வரும் 25-ம் தேதி வெளியாகிறது. காலை 9:31 முதல் 10 மணிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. தேர்வு முடிவுகள் www.tnresluts.nic.in.,  www.dge1tn.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியாகிறது www.dge2.tn.nic.in என்ற இணைய தளத்திலும் தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையத்திலும் தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.

அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல் தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெண்கள் வாக்கு

"பெண்கள் அதிக அளவில் அரசியலில் ஈடுபடும்போதுதான் சமுதாயம் உண்மையான மாற்றத்தைச் சந்திக்கும்"

மாமியாரும் கணவரும் பூனைக்கு வாக்களிக்கச் சொல்கிறார்கள். அவளுக்கோ கிளிக்கு வாக்குப் போட வேண்டும் என்று விருப்பம். ஆனால், மாமியார், கணவர் சொல்வதை எப்படி மீறுவது? பிடிக்காத பூனைக்குப் போடுவதை விட, பிடித்த கிளிக்கு வாக்குப் போட்டுவிடலாம். யாருக்குத் தெரியப்போகிறது என்று நினைத்தாள். மனத்துக்குள் ஆயிரம் கேள்விகள். ஒத்திகைகள். வாக்குச் சாவடிக்குள் நுழைந்தாள். கிளி மீது முத்திரை வைக்கும் நேரத்தில், யாரோ ஒரு பெண்ணின் கை வந்து, அவளின் கையைப் பிடித்து பூனையில் குத்திவிட்டது!

1974-ல் வெளியான ‘மருமகள் வாக்கு’ கதை. கிருஷ்ணன் நம்பியின் இந்தக் கதை இன்றும் பெரும்பாலான பெண்களுக்குப் பொருந்தும்.

இந்தியாவில் சட்டப்படி 18 வயதான அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த உரிமையைப் பெண்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள்?

அப்பாவுக்காக ஓட்டு

பெண்கள் பொதுவாகத் தங்களுக்கு என்று அரசியலை வரையறுத்துக்கொள்வதில்லை. திருமணம் ஆகும் வரை அப்பா எந்தக் கட்சியை ஆதரிக்கிறாரோ, அந்தக் கட்சியைத்தான் அம்மாவும் ஆதரிக்க வேண்டும். மகளும் ஆதரிக்க வேண்டும். அதுவரை அப்பா காங்கிரஸ்காரராக இருந்திருப்பார். அதனால், அந்தக் கட்சிக்கு வாக்குப் போட்டிருப்பார் பெண். திருமணம் ஆன பிறகு கணவன் காங்கிரஸை ஆதரித்தால் பிரச்சினை இல்லை. ஆனால், அவர் ஒரு தி.மு.க. ஆதரவாளர் என்றால், சட்டென்று தன்னுடைய விருப்பத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும். தனக்கென வழங்கப்பட்ட வாக்குரிமையை யாருக்காகவும் விட்டுத் தர வேண்டியதில்லை என்று பெண்களே நினைப்பதில்லை. யாருக்கோ போடுவதற்குப் பதில் நம் அப்பா, கணவர், மகன் சொல்பவருக்கே போட்டால் நம்மை அரவணைப்பவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் இருக்குமே என்பது பலரின் எண்ணமாக இருக்கிறது.

சில பெண்களுக்கு அப்பா, கணவர், மகன் நிர்ப்பந்தம் இல்லாமல் சுயமாக முடிவெடுக்கும் வாய்ப்பு கிடைக்கும். அவர்களும் எப்படி முடிவெடுக்கிறார்கள்?

சூரியனுக்காக ஓட்டு

ராணியம்மாள் பள்ளி செல்லாதவர். தன்னுடைய ஆர்வத்தின் பேரில் வகுப்பறைக்கு வெளியே நின்று, வேடிக்கை பார்த்து எழுத, படிக்கக் கற்றுக்கொண்டவர். தினமும் செய்தித்தாள் படிப்பார். அரசியலை அலசுவார். எப்போதும் ஒரு கட்சியைத் திட்டிக்கொண்டே இருப்பார். தேர்தல் அன்று வாக்குப் போட்டுவிட்டு வந்தார். யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டபோது,

‘‘உதய சூரியனுக்கு’’ என்றார்.

‘‘எப்பப் பார்த்தாலும் அந்தக் கட்சியைத் திட்டிட்டே இருப்பீங்க… இப்ப அவங்களுக்கு வாக்குப் போட்டிருக்கீங்க!’’

‘‘இப்பவும் திட்டத்தான் செய்றேன். அது வேற, இது வேற. சூரியன் இல்லைன்னா உலகமே இல்லை. தினமும் காலையில் அந்தச் சூரியனைத்தானேம்மா கும்பிட்டுட்டு, வேலையை ஆரம்பிக்கிறோம்… அப்புறம் அந்தச் சின்னத்துக்குப் போடாமல் வேறு எதுக்குப் போடறது?’’

வாத்யாருக்காக ஓட்டு

வாசுகி, ‘‘எங்க அப்பா, அம்மா, அண்ணா, நான் எல்லோருமே வாத்யார் ஃபேன். அதனால, அவர் ஆரம்பிச்ச கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவோம்’’ என்றார்.

‘‘நீங்க பிறக்கிறதுக்கு முன்னாலயே எம்.ஜி.ஆர். இறந்துட்டார். எப்படி அவர் மேல இவ்வளவு அன்பு வெச்சிருக்கீங்க? அதுவும் அவர் இல்லாத, அவருடைய கட்சிக்கு வாக்குப்போடறீங்க?’’

‘‘காந்தி மேல நமக்கு அன்பு இல்லையா? அதே மாதிரிதான். மற்ற கட்சிகளில் எனக்கு யாரையும் தெரியாது… வாத்யார் படத்தைப் பார்த்து வளர்ந்ததால் அவர் கட்சிக்கு ஓட்டுப்போடறது, அவருக்கு என்னால செய்ய முடிந்த ஒரு மரியாதை. மத்தபடி அந்தக் கட்சிக்கு யார் தலைவரா இருந்தால் என்ன? ஆட்சிக்கு வந்தால் எனக்கென்ன?’’ என்றார்.

யாருக்கும் ஓட்டு இல்லை

60 வயது ருக்மணி, ‘‘ஒருத்தருக்கு ஓட்டுப் போட்டு, இன்னொருத்தருக்கு ஓட்டுப் போடாமல் இருந்தால் நமக்கு எதுவும் பிரச்சினை வரும்னு, நான் எல்லா சின்னத்திலும் குத்திட்டு இருந்தேன். இப்படிப் பண்ணினா போலீஸ் வரும்னு என் பேரன் சொன்னான். ஓட்டுப் போட்டால்தானே பிரச்சினைன்னு, ஓட்டுப் போடறதையே விட்டுட்டேன்’’ என்றார்.

வேட்டு வெச்ச ஓட்டு

மீனா படித்தவர். அரசாங்கத்தில் வேலை. ‘‘எங்க அப்பா வீடு மட்டுமில்லை, எங்க சொந்தக்காரர்களே ஒரு கட்சிக்குத்தான் ஓட்டுப்போடுவாங்க. அந்தக் கட்சியின் தலைவர் எங்க சாதிக்காரர். இதுவரை யாரும் அந்தக் கட்டுப்பாட்டை மீறியதில்லை. என் கணவர் இடதுசாரி. அவர் கட்சி யாருடன் கூட்டணி வச்சிருக்கோ அதுக்குத்தான் ஓட்டுப்போடச் சொல்வார். போன தடவைதான் அவர் சொல்லாத கட்சிக்குப் போடலாம் என்று முடிவுசெய்தேன். அதே மாதிரி ஓட்டைப் போட்டுட்டு வந்தேன். கணவர் யாருக்கு ஓட்டு போட்டே என்று கேட்டார். உண்மையைச் சொன்னேன். 3 மாதங்கள் அவர் என்னுடன் பேசவே இல்லை. ஒரு ஓட்டு நம்ம இல்லறத்துக்கே வேட்டு வெச்சிருச்சேன்னு எனக்கு வருத்தமாகிவிட்டது. நான் ஏதோ தப்பு செய்ததுபோல குற்ற உணர்வாக இருந்தது’’ என்றார்.

இன்று பெண்கள் எல்லோருக்கும் வாக்குரிமை இருந்தும் அதை முறையாகப் பயன்படுத்துகிறோமா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள், கிராமம், நகரம் என்ற வேறுபாடு எல்லாம் கிடையாது. வாக்கு என்பது அவ்வளவு முக்கியமான விஷயம் இல்லை என்றே நினைக்கிறார்கள்.

தியாகத்தால் வந்த உரிமை

இந்த வாக்குரிமை கிடைப்பதற்கு உலகம் முழுவதும் எவ்வளவோ பெண்கள் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள், உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள்! இதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கு இல்லை 

இந்தியாவில் தேர்தல்களில் கடந்த 20 ஆண்டுகளில் அதிகரித்து வந்த பெண்களின் பங்களிப்பு சமீப ஆண்டுகளில் குறைந்துவருகிறது.

பெண்கள் அமைதியை விரும்புகிறவர்கள். சுற்றுச்சூழலைக் காப்பதில் அக்கறை உள்ளவர்கள். மனிதனைச் சீரழிக்கும் மது ஒழிப்பில் ஆர்வம் உள்ளவர்கள். பெண் கல்வியைப் பரவலாக்குவதற்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் களைந்து, பாலியல் சமத்துவம் பெறுவதற்கும் பெண்கள் அரசியலில் ஈடுபடுவது அவசியம். பெண்கள் அதிக அளவில் அரசியலில் ஈடுபடும்போதுதான் சமுதாயம் உண்மையான மாற்றத்தைச் சந்திக்கும்.

அதற்கு முதல் அடி, நம் வாக்குரிமையை நாம் உண்மையாக, நேர்மையாக, சுய விருப்பத்தோடு, நல்லது கெட்டது ஆராய்ந்து பயன்படுத்துவதுதான். சாதாரணமாகக் கிடைத்த உரிமையல்ல இது. நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்த பல ஆயிரம் பெண்களின் போராட்டங்களால், தியாகங்களால் கிடைத்த மகத்தான பொக்கிஷம்!

மேலத்தொண்டியக்காடு: சட்டப்பேரவை தேர்தல் புறக்கணிப்பு வாபஸ்

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தொண்டியக்காடு கிராமத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மே 16-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருந்த நிலையில் அதிகாரிகள் அந்த கிராம மக்களுடன் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டனர்.
திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை (தனி) தொகுதியில் உள்ள மேலத்தொண்டியக்காடு கிராமத்தில் அனுமதி இன்றி நடத்தப்படும் இறால் பண்ணைகளால் சுற்றுப்புறச் சூழல் மாசடைவதாகவும், குடிநீர் சரிவர வழங்கப்படாதது குறித்தும் அதிருப்தி அடைந்திருந்த கிராம மக்கள் வருகிற சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து இருந்தனர்.
இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கு.பிரேம்குமார், வட்டாட்சியர் பழனிவேல், தேர்தல் துணை வட்டாட்சியர் சங்கர், மீன்வளத்துறை உதவி இயக்குனர் உமா, குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயராகவன் ஆகியோர் அந்த கிராம பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் ஒருமாதகால அவகாசத்தில் அனுமதி இன்றி நடத்தப்படும் இறால் பண்ணைகளை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் உறுதி அளித்ததன் பேரில் தேர்தல் புறக்கணிப்பை கிராம மக்கள் கைவிட்டனர்.

காவிரி படு​கையை பாது​காக்​கப்​பட்ட மண்​ட​ல​மாக ​அறி​விக்​கக் ​கோரி முற்​றுகை

காவிரி படு​கையை பாது​காக்​கப்​பட்ட மண்​ட​ல​மாக அறி​விக்​கக் கோரி,​​ மீத்​தேன் திட்ட எதிர்ப்​புக் கூட்​ட​மைப்​பி​னர் திரு​வா​ரூர் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கம் முன்பு புதன்​கி​ழமை முற்​று​கைப் போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​னர்.​

காவிரி டெல்டா பகு​தி​யில் ஓஎன்​ஜிசி,​​ கெயில் நிறு​வ​னம் விளை​நி​லங்​க​ளில் குழாய் பதித்து கச்சா எண்​ணெய் எடுத்து வரு​கி​றது.​

இத​னால் நிலத்​தடி நீர் பாதிக்​கப்​ப​டு​வ​து​டன்,​​ சுற்​றுச்​சூ​ழல் பாதிக்​கப்​ப​டு​வ​து​டன்,​​ விவ​சா​யம் அழிந்து போகும் நிலை ஏற்​பட்டு வரு​கி​றது.​

இதைக் கண்​டித்து,​​ விவ​சாய அமைப்​பு​கள் மற்​றும் மீத்​தேன் எதிர்ப்​புக் கூட்​ட​மைப்பு சார்​பில் பல்​வேறு போராட்​டங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன.​

இந்​நி​லை​யில்,​​ மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கத்தை மீத்​தேன் திட்ட எதிர்ப்​புக் கூட்​ட​மைப்​பி​னர் புதன்​கி​ழமை முற்​று​கை​யிட்டு போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​னர்.​

ஓஎன்​ஜிசி மற்​றும் கெயில் நிறு​வ​னத்​துக்கு காவிரி டெல்​டா​வில் தடை விதிக்க வேண்​டும்,​​ விளை​நி​லங்​க​ளில் குழாய் பதிக்​கக் கூடாது,​​ காவிரி படு​கையை பாது​காக்​கப்​பட்ட மண்​ட​ல​மாக அறி​விக்க வேண்​டு​மென்ற கோரிக்​கையை வலி​யு​றுத்தி கோஷங்​களை எழுப்​பி​னர்.​

மீத்​தேன் திட்ட எதிர்ப்​புக் கூட்​ட​மைப்​பின் தலைமை ஒருங்​கி​ணைப்​பா​ளர் த.​ ஜெய​ரா​மன் தலை​மை​யில்,​​ முற்​று​கை​யில் ஈடு​பட்ட 146 பெண்​கள் உள்​ளிட்ட 247 பேரை போலீ​ஸார் ​ கைது செய்​த​னர்.

புதன், 4 மே, 2016

திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் பெர்ணான்டஸ் மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை மரணமடைந்தார்.

வடபாதிமங்கலம் அருகேயுள்ள தண்ணீரகுன்னத்தைச் சேர்ந்தவர் பெர்ணான்டஸ் (53). இவர், திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார்.

இவர் திங்கள்கிழமை இரவு ரோந்து பணியை முடித்துவிட்டு, காலையில் மீண்டும் காவல்நிலையத்துக்கு வந்து காவல் ஆய்வாளரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென பெர்ணான்டஸ் மயங்கி விழுந்தார். காவல் ஆய்வாளர் அமுதாராணி மற்றும் போலீஸார், அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

அவரது சடலத்துக்கு திருத்துறைப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் எம். கண்ணதாசன், காவல் ஆய்வாளர் அமுதாராணி, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி, நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சார்பு ஆய்வாளர் சபாபதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, சடலம் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

புதன்கிழமை காவலர்கள் அணி வகுப்பு மரியாதையுடன், அவரது இறுதிச் சடங்குகள் தண்ணீர்குன்னம் கிராமத்தில் நடைபெறுகிறது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி மூலம் தேர்வு பணி


வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு எந்திரங்களை கணினி மூலம் தேர்வு செய்யும் பணி திருவாரூரில் நேற்று நடந்தது.

மின்னணு எந்திரங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எவை? என்பதை கணினி மூலமாக தேர்வு செய்யும் பணி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதை மாவட்ட தேர்தல் அதிகாரி வெங்கடேஷ் தொடங்கி வைத்தார். தேர்தல் பொது பார்வையாளர் ஒனிட்பான்யாங், பணியை பார்வையிட்டார். அப்போது அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர். இதை தொடர்ந்து வாக்குப்பதிவுக்கு தேர்வு செய்யப்பட்ட மின்னணு எந்திரங்களை, மாவட்ட தேர்தல் அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வாக்குப்பதிவு மையங்கள்

திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளிலும் 1,152 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இவற்றில் பணியாற்ற உள்ள அதிகாரிகளுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்திருக்கின்றன. இன்று (நேற்று) 4 சட்டசபை தொகுதிகளுக்கு 1,325 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டு உள்ளது. இதில் 15 சதவீதம் வாக்குப்பதிவு எந்திரங்கள் அவசர கால பயன்பாட்டிற்காக இருப்பு வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வு

இதை தொடர்ந்து திரு.வி.க. அரசு கல்லூரியில் தொகுதி வாரியாக அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன், மாவட்ட கூடுதல் தேர்தல் அதிகாரி மோகன்ராஜ், திருவாரூர் சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி முத்துமீனாட்சி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கலைச்செல்வி, தாசில்தார் ரெங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திங்கள், 2 மே, 2016

திருத்துறைப்பூண்டியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் செலவு கணக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும்

திருத்துறைப்பூண்டியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் செலவு கணக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர் கு.பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை (தனி) தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவின கணக்கு விவரங்களை தேர்தல் செலவினப் பார்வையாளர், மற்றும் உதவி தேர்தல் செலவினப் பார்வையாளர்களிடம் மே 5, 9, 13-ஆம் தேதிகளில் வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை தாக்கல் செய்ய வேண்டும் என தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கு. பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

பதற்றமான 52 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பாதுகாப்பு-கலெக்டர் வெங்கடேஷ்


திருவாரூர் மாவட்டத்தில் பதற்றமான 52 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என புதிதாக பதவி ஏற்ற கலெக்டர் வெங்கடேஷ் கூறினார்.

பதவி ஏற்பு

திருவாரூர் மாவட்ட கலெக்டராக மதிவாணன் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சில மாவட்ட கலெக்டரை தேர்தல் ஆணையம் மாறுதல் செய்து உத்தரவிட்டது. அதன்படி திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன் இடம் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதில் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க (கோ-ஆப்டெக்ஸ்) நிர்வாக இயக்குனராக பணிபுரிந்து வந்த டி.என்.வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து நேற்று திருவாரூர் புதிய கலெக்டராக டி.என்.வெங்கடேஷ் பதவி ஏற்றார். அவர் 2001-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அரசு பணியில் சேர்ந்தார். வணிக வரித்துறை இணை ஆணையராகவும், கரூர் மாவட்ட கலெக்டராகவும், சென்னை மாநகராட்சி உதவி ஆணையராகவும், தமிழ்நாடு சிமெண்டு மேலாண்மை இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார்.

திருவாரூரில் நேற்று புதிதாக பதவி ஏற்ற கலெக்டர் டி.என்.வெங்கடேஷ், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடத்திட அனைத்து முன்ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 1,152 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 52 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் துணை ராணுவ படையினரும் வரவழைக்கப்படும்.

சாய்வு தள வசதி

வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தள வசதி செய்யப்பட்டுள்ளது. முதியோருக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் வாக்காளர் பூத் சிலீப் வழங்கப்பட உள்ளது. தற்போது வேட்பாளர்கள் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களது சின்னங்கள் மின்னனு வாக்கு எந்திரத்தில் பதிவு செய்யப்படுகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வாக்குச்சாவடி மையங்களில் தேவையான நிழல் வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிபவர்களுக்கு தேவையான கழிவறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் உள்பட பலர் உடன் இருந்தனர்.

ஞாயிறு, 1 மே, 2016

அரிசி சோறு உடல் நலத்திற்கு கேடா?

நிலத்திலே மனிதர்களால் விளைவிக்கின்ற நன்செய், புன்செய் பயிர்களின் நன்மைகளை எளிதில் சொல்லிவிட முடியாது. இதில் அரிசியானது  சுவையும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாகவும் விளங்கி வருகிறது. இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டு வகையும் மக்கள்  பயன்படுத்தி வருகின்றனர். இந்தியா, பர்மா, சீனா, ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளில் விளைவிக்கப்படும் அரிசி உலகில் மூன்றில் இரண்டு பங்கு  மக்கள் உண்ணும் உணவாகவும் விளங்கிவருகிறது. ஆனால் இன்று நோய் என்று மருத்துவரிடம் சென்றால் முதலில் சொல்வது அரிசி சோறு  சாப்பிடாதீர்கள் என்பதுதான்.

பிறந்தது முதல் அரிசி உணவு சாப்பிட்டு பழகியவர்கள் இதைக்கேட்டதும் வாடி வதங்கி, தங்களுக்கு பெரும் நோய் ஏற்பட்டுவிட்டது என்பதுபோல்  முடங்கி விடுகிறார்கள். உண்மையில் மற்ற தானியங்களைப்போலவே அரிசியும் பல்வேறு நன்மைகளை தந்து நம்மை காத்து வருகிறது. உண்மையில் அரிசியை பட்டை தீட்டியும், குக்கரில் வைத்து சாப்பிடுவதால்தான் நமக்கு நோய் உண்டாகிறது என்பது பலருக்கு தெரிவதில்லை.  உடலை வளர்த்தால்தான் உயிரை வளர்க்கமுடியும் என்பதில் தெளிவாக இருந்தார்கள் நமது முன்னோர்கள். எனவே உடலுக்கு எது தேவையோ அதை  மட்டுமே உண்டு நலமாக வாழ்ந்தார்கள். இதில் தமிழர்களின் முக்கிய உணவான சோறு சமைப்பது என்பதே தனிக்கலையாக விளங்கியது எனலாம்.  இதில் தமிழர்கள் தனித்தன்மை பெற்று விளங்கினார்கள்.

சோறு வடிப்பது என்பது பழைய அரிசியைத் தவிடு, நொய் நீக்கி நன்றாக தீட்டி, முழு அரிசியாய் ஆய்ந்து எடுத்து இளவெந்நீரால் கழுவி சற்று ஆற  விட்டுவைத்து கொள்ள வேண்டும். அரிசிக்கு மூன்றுபங்கு நீர்விட்டு அடுப்பிலேற்றி அது நுரைவிட்டு கொதிக்கும் பொழுது அரிசியை அதில் போட்டு  முக்காற்பங்கு வெந்தவுடன், கரண்டியால் துழாவி வடித்து கொள்ள வேண்டும். கஞ்சி வடிந்தவுடன், அந்த அடுப்பு தணலில் சோற்று பானையை  வைத்து விட வேண்டும். அதன் பிறகு நீர் முற்றிலும் வற்றி பக்குவமாய் இருக்கும் சமயத்தில் எடுத்து கொள்வதே சோறு. இந்த சோறே உணவுக்கு  ஏற்றது. வாதம் பித்தம் கபம் ஆகிய முக்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஏற்றது. பத்தியத்திற்கும் உகந்தது. ஒவ்வொரு அரிசிக்கும்  ஒவ்வொரு பண்பு உள்ளது என்பதையும் சொல்லிவைத்தார்கள்.

முழு அரிசிசோற்றை மிதமான சூட்டுடன் சாப்பிட்டால் முப்பிணிகளையும் நீக்கி உடலுக்கு வன்மை தந்து நலத்துடன் வாழவைக்கும். நன்றாக  சமையாத சோற்றை உண்பதால் மலம் கட்டும். மறுநாளும் செரிக்காமல் இருக்கும். இதனால் உடலில் இதன் சத்துக்கள் ஊறாது. குழைந்த சோற்றை  உண்டால் இருமல், மந்தம், பீளை, மேகம் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படும். மிகுந்த சூட்டுடன் உள்ள சாப்பாட்டை சாப்பிட்டால் ரத்தம் சூடாகும்,  நீர்வேட்கை அதிகரிக்கும், பெருத்த வயிறு ஏற்படும். எனவே முழு அரிசிசோற்றை மிதசூட்டில் சாப்பிடுவதே நன்மை தரும்.

இதில் கார் அரிசியை கொண்டு வடிக்கப்படும் சோறு உடலில் உள்ள சிறு நஞ்சுகளை நீக்கி புண்களை ஆற்றும். ஈர்க்கச்சம்பா அரிசிசோறு கடவுளுக்கு  படைக்கும் உணவிற்கு பயன்படுத்தப்படும் அரிசியாகும். இது பார்த்தவுடன் விருப்பத்தையும் நாவிற்கு சுவையை தரும். புழுகுசம்பா அரிசி சற்று  அளவில் நீண்டு இருந்தாலும் இந்த அரிசியை சமைத்து உண்பதால் உடலில் வனப்பு ஏற்படும். நல்ல பசி எடுக்கும். தீராத தாகம் நீங்கும்.

கோரைச்சம்பா அரிசியை உண்பதால் வெப்பத்தால் ஏற்படும் வெறி, பெண்களுக்கான வெள்ளைபடுதல், உடலில் உண்டாகும் நமைச்சல் நீங்கி, உடல்  குளிர்ச்சி உண்டாகும். குறுஞ்சம்பா அரிசிசோறு ஆண்மையை பெருக்கி உடலில் குத்துகின்ற வலியை போக்கும். ஆனால் உடல் சூட்டை உண்டாக்கும். மிளகுசம்பா அரிசிசோறு பல நன்மைகளை வாரி வழங்கக் கூடியது. பசியை உண்டாக்கும். பெருவளி என்கின்ற கடுமையான வாத நோய்களை நீக்கும்.சீரகச்சம்பா அரிசி சோற்றை மன்னர்களும், செல்வந்தர்களும் மட்டுமே உண்ணும் பழக்கம் நமது நாட்டில் இருந்து வந்தது.

இனிப்பு சுவையுள்ள இதை உண்பதால் உடலில் ஏற்படும் அனைத்து வளி நோய்களையும் நீக்கும். சாப்பிட்டு முடிப்பதற்குள்ளாக செரித்து மீண்டும்  பசியை ஏற்படுத்தும் அளவிற்கு எளிமையானது. கல்லுடைச்சம்பா என்ற அரிசி சோறு அதிகமான ஆற்றலை தரக்கூடியது. மிகுந்த பலசாலியை கூட  எதிர்க்கும் உடல் திறனையும் மனத்தெம்பும் ஏற்படுத்தும். நல்லசுவை கொண்ட இதை உண்டுவந்தால் பேசும் திறன் அதிகரிக்கும். குன்றிமணிச்சம்பா  சோறு உண்டுவந்தால் உடல் வலித்து ஆண்மை உண்டாகும். வளி நோய்கள் அனைத்தும் போகும்.

அழகும் சுவையும் நிரம்பிய அன்னமழகி என்ற அரிசியை சமைத்து உண்பதால் உடல் வெப்பமாறுபாட்டால் ஏற்படும் சுரங்களை நீக்கி உடலுக்கு நன்மை  தரும். மோர்ச்சோறு உண்டால் சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் எரிச்சல், தண்ணீர் தாகம், வயிற்றுப்போக்கு இவைகளை போக்கும். இரவில் நீரூற்றிய  சோற்றை பழையது என்பார்கள். விடியற்காலையில் சோற்றில் உள்ள நீரோடு பழையதை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். உடலில் ஒளி  உண்டாகும். வெறிநோய் முற்றிலும் நீங்கும். நன்றாக பசியெடுக்கும்.

பழைய சோற்றில் மோர் கலந்து சாப்பிட்டால் உடல் எரிச்சல், பித்தம், மனப்பிரமை முதலியவை நீங்கும். இரவில் நன்றாக தூக்கம் வரும். மிகுதியாக  உண்டுவிட்டால், அப்பொழுதே உறக்கம் கண்களை தழுவும். பொதுவாக எந்த உணவாக இருந்தாலும் அளவாக தேவைக்கு ஏற்ப சாப்பிடுவதால்  கெடுதல் என்பதே உண்டாகாது. அதுவும் உணவே மருந்து. மருந்தே உணவு என்று வாழ்க்கை முறையை வகுத்து கொண்டு வாழும் தமிழர்களின்  உணவே, இன்று உலகம் முழுவதும் உள்ள மக்களால், பெரிதும் விரும்பும் உணவாகவும் மாறி வருகிறது. எனவே அரிசிசோறு உண்டு நலமுடன்  வாழ்வோம்.

பித்தத்தை போக்கும் கஞ்சி

சோறு கொதிக்கும் போது இருக்கும் நீரை கொதிநீர் என்பார்கள். வீட்டில் சமையல் செய்யும் பெண்கள், பசியுடன் இருக்கும் சிறுவர்களுக்கு இதை குடிக்க  கொடுப்பார்கள். தாங்களும் குடிப்பார்கள். இதுவும் மருத்துவ குணம் கொண்டதுதான். கொதிநீரை குடிப்பதால் நீர்சுருக்கு என்னும் சிறுநீர்நோய் போகும்.சோறு வடித்தவுடன் கிடைக்கும் கஞ்சியை சூட்டுடன் தண்ணீர் கலந்து உப்பிட்டு குடிப்பதால் உடல் பருக்கும். உடலில் ஒளி உண்டாகும். உடலில்  உண்டாகும் பித்தம், வெப்பம் நீங்கும். சோறு வடித்த கஞ்சியை எந்த வகையில் குடித்தாலும் சிறு மந்தத்தை உண்டாக்கும் என்றாலும், விழிகளுக்கு  குளிர்ச்சியும் கொடுக்கும். உடல் சூட்டால் தோன்றிய பல்வேறு நோய்களை குணமாக்கும் 

'நூறு சதம் வாக்குப்பதிவு அவசியம்'-சகாயம் ஐ.ஏ.எஸ்.

மனித சமூகம் உலக அளவில் உயர்ந்து இருக்க வேண்டும் என்றால் நூறு சதம் வாக்குப்பதிவு அவசியம் என்றார் சென்னை தரமணி அறிவியல் நகரம் துணைத் தலைவர் சகாயம் ஐ.ஏ.எஸ்.

மன்னார்குடியில் மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் சார்பில் நமது வாக்கு, நமது உரிமை என்ற தலைப்பில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அவர் பேசியது:

ஒவ்வொரு மனிதனுக்கும் உணர்வைத் தாண்டி உணர்ச்சி அவசியம். நியாயமான தேர்தல் மூலம்தான் வலுவான ஜனநாயகத்தை கட்டமைக்க முடியும். அநீதிகளை எதிர்த்து பொறுப்பற்று வாக்களிக்காமல் இருப்பவர்களின் மனநிலையை மாற்றி, சமூக ஜனநாயக கடமையாற்ற வாக்களிக்க வைத்து அவர்களைப் பொறுப்புள்ளவர்களாக நாம் மாற்ற வேண்டும்.

ஊழல் செய்யும் நோக்கத்துடன் தேர்தல் களத்திற்கு வருபவர்கள் பணம், பரிசு என வாக்காளருக்கு கொடுக்க முன் வருகின்றனர். இவற்றிற்கு ஆசைப்பட்டு நம் வாக்கை, நம் உரிமையை விற்றுவிடக்கூடாது. சமூக நோக்கத்திற்காகப் பாடுபடுபவர்கள் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நூறு சதம் வாக்கு என்பதை கல்லூரி மாணவர்கள் மூலம் கொண்டு சென்றால் அந்த விழிப்புணர்வு பிரசாரம் அவரது பெற்றோர், உறவினர், நண்பர்கள் வரை சென்றடையும் என்றார்.

அமைப்பின் தலைவர் தி.ஜீவானந்தம் தலைமை வகித்தார்.  மன்னார்குடி தொகுதி வாக்காளர்களின் கோரிக்கைகளை செயற்குழு உறுப்பினர் அருண்ரவி வாசித்தார். தலைமை ஆலோசகர் மருத்துவர் இலரா.பாரதிச்செல்வம் துவக்கவுரையாற்றினார்.  ஒருங்கிணைப்பாளர்கள் சி.ராம் வரவேற்றார். ரெ.விக்னேசு நன்றி கூறினார்.

உப்புசத்தியாகிரக பாதயாத்திரை குழுவினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு


உப்பு சத்தியாக்கிரக 86-வது யாத்திரை குழுவினர் வேதாரண்யம் -அகஸ்தியம்பள்ளி செல்லும் வழியில் திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உப்புக்கு வரிகொடுக்க மாட்டோம் என பிரகடனம் செய்து இந்தியாவிலேயே தண்டியில் மகாத்மா காந்தி தலைமையிலும், திருச்சியில் மூதறிஞர் ராஜாஜி தலைமையிலும் தொடங்கி கல்லணை கோவிலூர், திருவையாறு, தஞ்சை, வடுவூர், மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, வாய்மேடு, தகட்டூர், வேதாரண்யம் வழியாக அகஸ்தியம்பள்ளியில் உப்பு காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது.

இதன் நினைவாக ஆண்டுதோறும் காந்திய சிந்தனையாளர்கள் ஏப்.29-இல் உப்புசத்தியாக்கிரக யாத்திரை நினைவை போற்றும் வகையில் காந்திய கொள்கை பாடல்களை இசைத்த வண்ணம் யாத்திரையை நடத்தி வருகின்றனர்.

நிகழாண்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள டி.எஸ்.எஸ். ராஜன் நினைவு ஸ்தூபியில் உப்புசத்தியாக்கிரக நினைவுக்கமிட்டி பொதுச் செயலர் தெ.செல்வகணபதி தலைமையில், யாத்திரை அமைப்பாளர் சிவா. சண்முகவடிவேல் மற்றும் நிர்வாகிகள் என்.ஆர். சத்தியமூர்த்தி, தகட்டூர் வே.கணேசன், ஏ.ஆர். ராஜராஜன் ஆகியோர் முன்னிலையில் தளபதி மாணிக்கம் துவக்கி வைக்க பேரணி மாலை திருத்துறைப்பூண்டி வந்தடைந்து பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து காந்திய கொள்கை பாடல்களை பாடினர்.

இந்தக் குழுவில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் பத்தூர் க.தெட்சணாமூர்த்தி, திருவலஞ்சுழி எஸ்.பி. தண்டாயுதபாணி, சாட்டியக்குடி ச.சம்பந்தன்பிள்ளை, மற்றும் காந்திய சிந்தனையாளர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பி.எழிலரசன், ரமேஷ், மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி மதியரசு ஆகியோர் தலைமையில் இக் குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

வாய்மேடு, தகட்டூர், வேதாரண்யம் வழியாக அகஸ்தியம்பள்ளியில் குமரி அனந்தன் தலைமையில் சனிக்கிழமை உப்பு அள்ளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka