வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு எந்திரங்களை கணினி மூலம் தேர்வு செய்யும் பணி திருவாரூரில் நேற்று நடந்தது.
மின்னணு எந்திரங்கள்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எவை? என்பதை கணினி மூலமாக தேர்வு செய்யும் பணி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதை மாவட்ட தேர்தல் அதிகாரி வெங்கடேஷ் தொடங்கி வைத்தார். தேர்தல் பொது பார்வையாளர் ஒனிட்பான்யாங், பணியை பார்வையிட்டார். அப்போது அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர். இதை தொடர்ந்து வாக்குப்பதிவுக்கு தேர்வு செய்யப்பட்ட மின்னணு எந்திரங்களை, மாவட்ட தேர்தல் அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வாக்குப்பதிவு மையங்கள்
திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளிலும் 1,152 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இவற்றில் பணியாற்ற உள்ள அதிகாரிகளுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்திருக்கின்றன. இன்று (நேற்று) 4 சட்டசபை தொகுதிகளுக்கு 1,325 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டு உள்ளது. இதில் 15 சதவீதம் வாக்குப்பதிவு எந்திரங்கள் அவசர கால பயன்பாட்டிற்காக இருப்பு வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வு
இதை தொடர்ந்து திரு.வி.க. அரசு கல்லூரியில் தொகுதி வாரியாக அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன், மாவட்ட கூடுதல் தேர்தல் அதிகாரி மோகன்ராஜ், திருவாரூர் சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி முத்துமீனாட்சி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கலைச்செல்வி, தாசில்தார் ரெங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக