செவ்வாய், 10 மே, 2016

மக்களுக்கு உதவாத பாரம்பரிய குளங்கள்

திருத்துறைப்பூண்டி நகராட்சிப் பகுதியில் மாசடைந்த குளங்களுக்கு தண்ணீர் வரும் பாதை ஆக்கிரமிப்புக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டத்தை பாதிக்கும் இச்செயல்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேட்பாளர்கள் வாக்குறுதி அளிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அரசு நிலங்களில் குடியிருப்போருக்கு குடிமனை பட்டா வழங்கும்போது நீர்நிலை புறம்போக்கு நிலங்களை மட்டும் வகை மாற்றம் செய்து பட்டா வழங்க இன்னும் தடையுள்ளது.

நீர்நிலை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பில் உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தளித்து.

திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து ஊராட்சி ஒன்றியம் சார்பில், வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இங்கு புதிய பேருந்து நிலையமே விதைவிடுகுளத்தைத் தூர்த்து கட்டியதாகும். நகரில் குளங்கள், உபரிநீர் வழிந்தோடும் கால்வாய்கள், குளங்களுக்கு நீர் வரும் பாதை ஆகியவற்றை ஆக்கிரமித்து அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டப்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 32 குளங்கள் உள்ளன. நகராட்சி எதிரே உள்ள ராமர்மடக்குளம், அதன்பின்னே உள்ள நந்தவனக்குளம், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள செங்கமலக்குளம், உப்புக்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களுக்கும் நீர்வரும் வழிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இதனால் குளங்கள் மாசடைந்த கொசு உற்பத்தியாகும் நீர்தேக்கங்களாக மாறிவிட்டன.

செங்கமலக்குளத்துக்கு வரும் வாய்க்கால் தனியார் பள்ளி நிர்வாகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பள்ளியே நீரில் சூழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ்.நடராஜன் ஆக்கிரமிப்பை அகற்ற முயற்சி மேற்கொண்ட நிலையில் அவர் பணி மாறுதல் பெற்றுச் சென்றார். அதன்பிறகு பழைய நிலையே தொடருகிறது. இந்தக் குளங்கள் பராமரிக்கப்படாததால் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட நீரையே மக்கள் நம்பியுள்ளனர்.

எனவே மாசடைந்த குளங்களை பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் பாரபட்சமின்றி அனைத்து குளங்களுக்கும் நீர்வரும் வழிபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளங்களை தூர்வார அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருத்துறைப்பூண்டியில் சீர்கெட்டுப்போன குளங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நடவடிக்கை மேற்கொள்வேன் என்று வாக்குறுதி அளிக்க வேண்டும். அத்தகைய வேட்பாளர்களை எதிர்பார்த்தே வாக்களிக்கவுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

TKS
dinamani.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka