சனி, 7 மே, 2016

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தை கலெக்டர் பார்வை

மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் ஆய்வு செய்தார். மேலும் வாக்குச்சாவடி மையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ள இடத்தையும் பார்வையிட்டார்.

ஆய்வு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அசேசம், மேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான வெங்கடேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். நெடுவாக்கோட்டை ஊராட்சி மேலநாகை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அசேசம் ஊராட்சி இலக்கனாம்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டார். பின்னர் சாய்தள வசதிகள், குடிநீர், மின்சாரம், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் அமைந்துள்ளதா என கேட்டறிந்தார். தொடர்ந்து வாக்காளர்கள் நுழைவு வாயில் பகுதிகளையும், வெளியே செல்லும் பகுதிகளையும் ஆய்வு செய்தார்.

கண்காணிப்பு கேமரா

இதை தொடர்ந்து திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடி மையமான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டார். இந்த வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கேட்டறிந்தார். மேலும் வாக்குச்சாவடி மையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ள இடத்தையும் பார்வையிட்டார்.

பின்னர் எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தையும், அடிப்படை வசதிகள் மற்றும் வாக்காளர் வாக்களிக்க வரும் நுழைவு வாயில் பகுதிகளையும் ஆய்வு செய்தார். வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள பகுதிகளை சுற்றி 200 மீட்டர் அளவிற்கு அடிப்படை தேர்தல் நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா என கேட்டறிந்தார்.

ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன், சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செல்வசுரபி (மன்னார்குடி), பிரேம்குமார் (திருத்துறைப்பூண்டி) ஆகியோர் உடன் இருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka