புதன், 13 ஜூலை, 2016

பெண்களின் ஆரோக்கியம்!

ஐ.நா.வின் உலகச் சுகாதார நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு "சர்வதேச மகளிர் நல மகப்பேறு மேம்பாட்டு மையம்'. இம்மையம் பெண்களின் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை கொண்டு செயலாற்றி வருகிறது. மகப்பேறு சார்ந்த ஆய்வின்போது அதற்குக் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கின்றன. ஆய்வுத் தகவல்கள் வருமாறு:
 * உலகில் நோய்களின் மூலம் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். இதற்கு காரணம், பெண்களுக்கான பிரச்னைகள், சக ஆண்களால் அலட்சியப்படுத்தப் படுவதே!
 * இன்று பிரசவம் சார்ந்து பல முன்னேற்றங்கள் வந்துவிட்டாலும் அந்த வசதிகள் அனைவரையும் சென்று அடைவதில்லை. உதாரணமாக 2013-இல் மட்டும் மூன்று லட்சம் பெண்கள் கர்ப்பம் சார்ந்த சிக்கல்களால் இறந்துள்ளனர்.
 * கருத்தரிக்காமல் இருக்க பயன்படும் சாதனங்கள் சுமார் 23 கோடி மக்களுக்கு கிடைக்கவே இல்லை.
 கர்ப்ப சிக்கல்கள்
 * ஆண்டுதோறும் 20 வயதுக்கு உட்பட்ட இளம் பெண்களில் 1.3கோடி பேர் குழந்தை பெறுகிறார்கள்.
 * கர்ப்பம் சார்ந்த மற்றும் குழந்தை பிறப்பில் ஏற்படும் சிக்கல்கள் மூலமாக ஏராளமான இளம் பெண்கள் இறந்து போகின்றனர். பாதுகாப்பற்ற கருச்சிதைவு மூலமும் பல பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
 வீட்டில் சிக்கல்
 * 50 வயதுக்கு உட்பட்ட பெண்களிலும் கூட 3-இல் ஒருவருக்கு வீட்டில் நேரடி மற்றும் மறைமுக செக்ஸ் பலாத்காரம் நடக்கிறது.
 செக்ஸ் கொடுமைகளால் வரும் தொத்துகள்
 * மேகவெட்டை நோய், சாலம்டியா நோய் போன்றவற்றைக் கண்டுபிடித்து குணப்படுத்த வேண்டியது அவசியம்.
 வெளிப்படுத்த இயலாத வியாதிகள்
 * வெளியில் சொல்ல இயலாத நோய்களால் 2012 - ஆம் ஆண்டில் மட்டும் 70 வயதுக்கு உட்பட்டோர் 47 லட்சம் பேர் இறந்து போயிருக்கிறார்கள்.
 * பெரும்பாலான சாவுகள் சாலை விபத்துகள், புகையிலை, மது, போதை மருந்து மற்றும் உடல் பெருக்கம் மூலமே நிகழ்கின்றன.
 புற்று நோய்
 * ஒவ்வோர் ஆண்டும் அரை மில்லியன் மக்கள், கழுத்து மற்றும் மார்பக புற்று நோயினால் இறக்கின்றனர்.
 * இவற்றை சோதிக்கவும், சிகிச்சை எடுக்கவும் வசதியில்லாத நாடுகளில் தான் மேற்கண்ட நோய்களால் மிக அதிகம் பேர் இறக்கின்றனர்.
 மன ஆரோக்கியம்
 * கவலை, மன இறுக்கம் மற்றும் உடல் கூறு சார்ந்த தொல்லைகள் ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் நேர்கின்றன. இவற்றில் மன இறுக்கம் பெண்களை படாதபாடு படுத்துகிறது.
 * 60 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு, மேற்கூரிய காரணங்களால் தற்கொலை செய்து கொள்வது அதிகமாக நிகழ்கிறது.
 வயதாவது பற்றி
 * ஆண்களைப் போன்று பெண்களுக்கு பென்ஷன் கிடையாது. மருத்துவ வசதிகளுக்கும் தனிப்பட்ட முறையில் வாய்ப்பு இல்லை. இதனால் வயதாகும்போது பெண்கள் ஆண்களைவிட அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
 * வயதான காலத்தில் உணவுக்கு வழி இல்லாமல் போகும் போதும், வயதானதால் வரும் வியாதிகளைச் சமாளிக்க இயலாமல் போகும்போதும் மனம் பேதலித்து; பைத்தியம் பிடித்த நிலைக்கு தள்ளப்படுவதும் உண்டு.
 ஆக மேலே கூறியவையெல்லாம் உணர்த்துவது என்ன? பெண்கள் குடும்ப உறுப்பினர்களால் சமூகத்தால் நன்கு கவனிக்கப்பட வேண்டும். வேண்டும் என்பதே!
 - ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன்.

செவ்வாய், 12 ஜூலை, 2016

குரும்பல் ரெயிலடி தெருவை சேர்ந்த; டிரைவர் பலி; மனைவி படுகாயம் கார் மோதியது

திருத்துறைப்பூண்டி அருகே கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற அரசு பஸ் டிரைவர் பலியானார். இந்த விபத்தில் இவரது மனைவி படுகாயம் அடைந்தார்.

அரசு பஸ் டிரைவர் 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குரும்பல் ரெயிலடி தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (வயது54). இவர் திருத்துறைப்பூண்டி அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி கஸ்தூரி(50). நேற்றுமுன்தினம் இவர்கள் மாங்குடியில் நடந்த உறவினரின் திருமணத்திற்கு சென்றுவிட்டு மோட்டார்சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

மனைவி படுகாயம் 

அப்போது கரும்பியூர் கொடிமரம் என்ற இடத்தில் பின்னால் வந்த கார், மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அன்பழகன், கஸ்தூரி ஆகிய 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்பழகன் பரிதாபமாக இறந்தார். கஸ்தூரியை மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆலிவலம் போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கண்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த அண்ணாத்துரை (36) என்பவரை கைது செய்தனர்.

அண்ணாநகர் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

திருத்துறைப்பூண்டி அண்ணாநகரை சேர்ந்தவர் சிதம்பரம் மகன் ரமேஷ் (வயது36). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரேம்குமார், சதீஷ், சங்கர், முனியப்பன் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று ரமேஷ் அங்குள்ள பெட்டிக்கடையில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த பிரேம்குமார் உள்பட 4 பேரும் சேர்ந்து ரமேசை அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திங்கள், 11 ஜூலை, 2016

திருத்துறைப்பூண்டியில் உள்ள கடைகளில் காலாவதி பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

திருத்துறைப்பூண்டி, :  திருத்துறைப்பூண்டியில் உள்ள கடைகளில் காலாவதி பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருத்துறைப்பூண்டி நகர பகுதியில் உள்ள மளிகை கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள், உணவு விடுதிகள், பழக்கடைகள் போன்றவற்றில் காலாவதியான உணவுப்பொருட்கள் உள்ளதா என்று மாவட்ட வருவாய் அலுவலர் மோகன்ராஜ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விஜயகுமார், அன்பழகன் ஆகியோர் சோதனை செய்தனர்.

பேருந்துநிலையம் மற்றும் பள்ளி அருகில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் மற்றும் கடைகளில் இருந்த காலாவதியான உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.  இந்த சோதனையில் தாசில்தார் (பொ) அன்பழகன், துணை தாசில்தார்கள் செந்தில்குமார், காரல்மார்க்ஸ், சிவக்குமார், வசுமதி, வருவாய் ஆய்வாளர்கள் சிவதாஸ், முருகேசன், ஜோதிபாசு, பாரதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதிகளில் வீடு கட்டுவதற்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூர்  : மத்திய  அரசின்  திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதிகளில் வீடு கட்டுவதற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மதிவாணன் தெரிவித்துள்ளார். நகர்புற மேம்பாட்டிற்காக மாவட்ட அளவிலான ஏழை மற்றும் குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு மத்திய அரசால் அனைவருக்கும் வீட்டு வசதி வழங்கும் வகையில் பாரத பிரதமரின் வீட்டுவசதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் கூத்தாநல்லூர் ஆகிய 4 நகராட்சிகளில் வசிக்கும் தகுதி வாய்ந்த பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் கடனுடன் கூடிய வட்டி மானியமாக ரூ.3 லட்சத்திற்கு குறைவான ஆண்டு வருவாய் உள்ள பிரிவினருக்கு 6.5 சதவீதத்துக்கு   மேற்படும் வட்டிக்கு மானியத்துடன் அதிகப்பட்சமாக 323 சதுரஅடி பரப்பளவிலும், ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வருவாய் உள்ள பிரிவினருக்கு 646 சதுரஅடி பரப்பளவு கொண்ட வீடும் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே மாவட்டத்தில் உள்ள திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் கூத்தாநல்லூர் நகராட்சிகளின் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழும் தகுதியுள்ளவர்கள் சம்மந்தப்பட்ட நகராட்சி ஆணையரை தொடர்புகொண்டு உரிய படிவத்தில் குறிக்கப்பட்ட
ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை கலெகடர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

சனி, 9 ஜூலை, 2016

காலாவதி பொருட்கள் பறிமுதல்

திருத்துறைப்பூண்டி, :  திருத்துறைப்பூண்டியில் உள்ள கடைகளில் காலாவதி
பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருத்துறைப்பூண்டி நகர பகுதியில் உள்ள மளிகை கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள், உணவு விடுதிகள், பழக்கடைகள் போன்றவற்றில் காலாவதியான உணவுப்பொருட்கள் உள்ளதா என்று மாவட்ட வருவாய் அலுவலர் மோகன்ராஜ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விஜயகுமார், அன்பழகன் ஆகியோர் சோதனை செய்தனர்.

பேருந்துநிலையம் மற்றும் பள்ளி அருகில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் மற்றும் கடைகளில் இருந்த காலாவதியான உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.  இந்த சோதனையில் தாசில்தார் (பொ) அன்பழகன், துணை தாசில்தார்கள் செந்தில்குமார், காரல்மார்க்ஸ், சிவக்குமார், வசுமதி, வருவாய் ஆய்வாளர்கள் சிவதாஸ், முருகேசன், ஜோதிபாசு, பாரதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டனர்.

மின்வாரிய அலுவலரின் வீடு புகுந்து பெண்களிடம் 5 பவுன் நகை திருட்டு

திருத்துறைப்பூண்டி அருகே மின்வாரிய அலுவலரின் வீடு புகுந்து பெண்களிடம் 5 பவுன் நகையை திருடி சென்றனர். இதனை தடுக்க வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த கணவன்–மனைவியை மர்மநபர்கள் தாக்கியதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர்.

மின்வாரிய அலுவலர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கச்சனம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குணாளன் (வயது55). மின்வாரிய அலுவலர். சம்பவத்தன்று இரவு குணாளன், அவருடைய மனைவி கவிதா(30), மகன் முத்துக்குமார், குணாளனின் தாயார் ராஜம்பாள் ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது 12 மணியளவில் 3 மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

இதை கேட்டு கண் விழித்த ராஜம்மாள் அணிந்திருந்த 4 பவுன் நகையை மர்மநபர்கள் பறித்துள்ளனர். இதனால் அவர் சத்தம் போட மருமகள் கவிதா ஓடிவந்துள்ளார். அவரை கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 1 பவுன் நகையையும் பறித்தனர். இவர்கள் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் குடியிருக்கும் டிரைவர் நாராயணதாஸ், அவருடைய மனைவி கனகவள்ளி ஆகியோர் ஓடிவந்தனர்.

அப்போது மர்மநபர்கள் கட்டையால் 2 பேரையும் தாக்கினர். இதில் இதில் படுகாயம் அடைந்த நாராயணதாஸ், கனகவள்ளி ஆகிய 2 பேரும் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து மர்மநபர்கள் 5 பவுன் நகையுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து குணாளன், அவருடைய மனைவி கவிதா ஆகியோர் ஆலிவலம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கண்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 5 பவுன் நகைகளை திருடி கொண்டு தப்பி ஓடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

திங்கள், 4 ஜூலை, 2016

திருத்துறைப்பூண்டி அருகே வேலித்தகராறு :3 பேர் மீது வழக்குப்பதிவு

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ராயநல்லூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது56). விவசாயி. இவருக்கும், அதே தெருவை
சேர்ந்த நாகராஜன் என்பவருக்கும் இடையே வேலித்தகராறு இருந்து வந்ததுள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று விஜயகுமார் வேலியில் இருந்த பூவரசன் மரத்தை வெட்டியதாக தெரிகிறது. இதையடுத்து நாகராஜன், அவருடைய தம்பி காத்தவராயன், அவருடைய மனைவி பாரதி ஆகியோருக்கும், விஜயகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜன் மண்வெட்டியால் விஜயகுமாரை தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விஜயகுமார் ஆலிவலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்–இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நாகராஜன், காத்தவராயன், பாரதி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tks

daily thanthi 

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்



திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசால் 2006-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக பதிவை புதுப்பித்திருக்க வேண்டும்.

 2011 ஜூன் 30-ம் தேதியன்று அல்லது அதற்கும் முன்பாக பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். 9-ம் வகுப்பு தேர்ச்சிப்பெற்று பள்ளியிறுதி வகுப்பு தவறியவர்களுக்கு மாதம் ரூ. 100, பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு மாதம் ரூ.150, மேல்நிலைக்கல்வி தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 200, பட்டப்படிப்பு தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் 45, இதர வகுப்பினர் 40 வயதுக்குள், பயனாளிகளின் குடும்ப வருமானம் ரூ.50,000-க்குள் இருக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர்களுக்கு மாதம் ரூ. 600, மேல்நிலைக்கல்வி தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750, பட்டப்படிப்பு தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகையாக 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.  பதிவு செய்து 2016 ஜூன் 30-ம் தேதி அன்று ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். இவர்களுக்கு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை. உதவித்தொகை பெறும் காலத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் முழு நேர மாணவராக இருக்கக் கூடாது.  தொகைத்தூரக் கல்வி படிப்பவராக இருக்கலாம். அரசுத்துறை அல்லது தனியார்துறையில் ஊதியம் பெறும் எந்த பதவியிலோ அல்லது சுயவேலைவாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருக்கக்கூடாது.

 முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும். தகுதி உடையவர்கள் இதற்கான விண்ணப்பப் படிவத்தை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் 2016 ஆண்டு ஆகஸ்டு 31-ம் தேதிக்குள் அலுவலக வேலை நாளில் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளிக்க வேண்டும்.

 உதவித்தொகை ஏற்கெனவே பெற்றுவருபவர்களான மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளுக்கும், மற்றவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகை தெடங்கிய காலத்திலிருந்து பயனாளிகள் ஒவ்வொரு ஆண்டிலும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சுய உறுதிமொழி ஆவணம் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

 அவ்வாறு சுய உறுதிமொழி ஆவணம் அளிக்கத் தவறியவர்கள் உடன் சுய உறுதிமொழி ஆவணத்தைப் பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு தவறாமல் நேரில் வந்து கொடுக்க வேண்டும்.

சனி, 2 ஜூலை, 2016

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளிப்பு

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வட்டார விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கை மனுவை முன்னாள் எம்எல்ஏ கே.உலகநாதன் வெள்ளிக்கிழமை துணை வட்டாட்சியரிடம் வழங்கினார்.

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்புத் திட்டத்தில் ஆண்டிற்கு 200 நாள்கள் வேலை வழங்கி ரூ.400 ஊதியம் வழங்க வலியுறுத்தல், தலித் ஆதிவாசிகள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தல், கெளரவ கொலைகளைத் தடுத்து நிறுத்த தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தல், விவசாயத் தொழிலாளர்களுக்கு தனி ஓய்வூதியச் சட்டம் இயற்றி ரூ.3000 வழங்க வலியுறுத்தல், நிலமற்ற ஏழை குடும்பங்களுக்கு 5 சென்ட நிலம் வழங்கி ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் வீடு கட்டித்தரக் கோருதல்  உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை துணை வட்டாட்சியர் மூலம் பிரதமருக்கும், முதல்வருக்கும் அனுப்பக்கோரி மனு அளிக்கப்பட்டது.

 கே.உலகநாதனுடன் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர்கள் அ.பாஸ்கர், கே.முருகையன், நகர செயலர் எம்.முருகேசன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் எல்.பக்கிரிசாமி, ஏ.மூர்த்தி, ஆர்.வாசுதேவன், பி.காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

மாணவியை கடத்திச் சென்ற காதலன் கைது

மன்னார்குடி அருகே திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மாணவியை கடத்திச் சென்ற காதலனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து, மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கோட்டூர் காவல் சரகத்திற்கு உள்பட்ட மேலபனையூர் கீழத்தெரு,சுந்தரமூர்த்தி மகன் ரவிச்சந்திரன்(26) பொறியியல் பட்டதாரி. அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி மகள் பிளஸ்-2 படித்து வருகிறார். ரவிச்சந்திரன், நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். ரவிச்சந்திரனும், பிளஸ்-2 படித்து வரும் மாணவியும் காதலித்து வந்தனராம்.

இந்நிலையில் சென்ற ஜுன் 1-ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவியை காணவில்லை என்றும், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ரவிச்சந்திரன் கடத்திச்  சென்றுவிட்டதாக மாணவியின் பெற்றோர் கோட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனராம். அதனை அடுத்து கோட்டூர் காவல் ஆய்வாளர் லெட்சுமி தலைமையில் தனிப்படை போலீஸார் தேடிவந்த நிலையில் குமாரப்பாளையத்தில் தலைமறைவாக இருந்த ரவிச்சந்திரனை வியாழக்கிழமை இரவு போலீஸார் கைது செய்து கடத்தி வைத்திருந்த மாணவியை மீட்டனர்.

பின்னர் மாணவிக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்த பின் அவரை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸார், ரவிச்சந்திரனை மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தினர்.

வெள்ளி, 1 ஜூலை, 2016

நகை பறித்த திருடனை விரட்டிப் பிடித்த மக்கள்

திருவாரூரில் புதன்கிழமை பெண்ணிடம் நகையைப் பறித்துக் கொண்டு தப்பியோடிய இளைஞரை பொது மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருவாரூர் விளமல் பகுதியைச் சேர்ந்த தெட்சிணாமூர்த்தி மனைவி கமலாம்பாள் (60). இவ புதன்கிழமை வெளியூர் செல்வதற்காக திருவாரூர் பேருந்து நிலையத்துக்கு வந்து, மன்னார்குடி பேருந்தில் ஏறும் போது இளைஞர் ஒருவர் ரூ. 60,000 மதிப்புள்ள 3 தங்கச் செயின் வைத்திருந்த பையை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்து கமலாம்பாள் கூச்சலிட்டதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் தப்பியோடிய இளைஞரை பிடித்து திருவாரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸாரின் விசாரணையில் நகையை திருடி தப்பியோடியவர் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி ஒன்பத்துவேலியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் வெங்கடேசன் (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து நகையை  மீட்டனர்.

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka