திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசால் 2006-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக பதிவை புதுப்பித்திருக்க வேண்டும்.
2011 ஜூன் 30-ம் தேதியன்று அல்லது அதற்கும் முன்பாக பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். 9-ம் வகுப்பு தேர்ச்சிப்பெற்று பள்ளியிறுதி வகுப்பு தவறியவர்களுக்கு மாதம் ரூ. 100, பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு மாதம் ரூ.150, மேல்நிலைக்கல்வி தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 200, பட்டப்படிப்பு தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் 45, இதர வகுப்பினர் 40 வயதுக்குள், பயனாளிகளின் குடும்ப வருமானம் ரூ.50,000-க்குள் இருக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர்களுக்கு மாதம் ரூ. 600, மேல்நிலைக்கல்வி தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750, பட்டப்படிப்பு தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகையாக 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. பதிவு செய்து 2016 ஜூன் 30-ம் தேதி அன்று ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். இவர்களுக்கு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை. உதவித்தொகை பெறும் காலத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் முழு நேர மாணவராக இருக்கக் கூடாது. தொகைத்தூரக் கல்வி படிப்பவராக இருக்கலாம். அரசுத்துறை அல்லது தனியார்துறையில் ஊதியம் பெறும் எந்த பதவியிலோ அல்லது சுயவேலைவாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருக்கக்கூடாது.
முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும். தகுதி உடையவர்கள் இதற்கான விண்ணப்பப் படிவத்தை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் 2016 ஆண்டு ஆகஸ்டு 31-ம் தேதிக்குள் அலுவலக வேலை நாளில் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளிக்க வேண்டும்.
உதவித்தொகை ஏற்கெனவே பெற்றுவருபவர்களான மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளுக்கும், மற்றவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகை தெடங்கிய காலத்திலிருந்து பயனாளிகள் ஒவ்வொரு ஆண்டிலும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சுய உறுதிமொழி ஆவணம் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
அவ்வாறு சுய உறுதிமொழி ஆவணம் அளிக்கத் தவறியவர்கள் உடன் சுய உறுதிமொழி ஆவணத்தைப் பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு தவறாமல் நேரில் வந்து கொடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக