தமிழகத்தின் டெல்டா பகுதி விவசாய சங்கப் பிரதிநிதிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தலைமையில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்தனர். அப்போது காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த சந்திப்புக்குப் பிறகு ‘தி இந்து’விடம் டி.ராஜா கூறும்போது, “காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதனால் தமிழக விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் அந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தினோம். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி மேலாண்மை மற்றும் நிர்வாக ஆணையங்களை உடனடியாக அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினோம். தமிழகத்தில் மீத்தேன் வாயு திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைவது குறித்தும் பிரதமரிடம் எடுத்துக் கூறப்பட்டது” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பி லான தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.தம்புசாமி, விவசாயிகள் நல சங்கத் தலைவர் ஜி.சேதுராமன், காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஏ.மோகன்தாஸ், தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் நாகை மாவட்ட துணைத் தலைவர் எஸ்.குமரேசன் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
இதுகுறித்து, ‘தி இந்து’விடம் பி.எஸ்.மாசிலாமணி கூறும்போது, “காவிரியின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக கர்நாடகா தரப்பி லிருந்து எந்த கோரிக்கையும் வர வில்லை என்று பிரதமர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு மட்டுமல்லாமல் நடுவர் மன்றமும் உச்ச நீதிமன்றமும் சம்மந்தப்பட்டுள்ளதால் தமிழகத்துக்கு எந்த பாதகமும் வராமல் நியாயமான முடிவு எடுக்கப்படும் என பிரதமர் உறுதி அளித்தார்” என்றார்.
மீத்தேன் பிரச்சினையில் கோப்புகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
ஒரு வாரத்துக்கு முன்பு தமிழகத்தைச் சேர்ந்த காவிரி விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவினர், அதன் ஒருங்கிணைப்பாளர் பி.எஸ்.பாண்டியன் தலைமையில் டெல்லியில் மூன்று நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.