புதன், 3 டிசம்பர், 2014

தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக...:திருவாரூர் மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு

திருவாரூர் : கர்நாடகா அரசு, காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டும் முயற்சியை கண்டித்து, வரும், 15ம் தேதி முதல் டில்லி நாடாளுமன்றம் முன், தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக, திருவாரூர் மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.
கர்நாடகா மாநில அரசு, காவிரியின் குறுக்கே மேகதாது மற்றும் ராசி மணல் ஆகிய இடங்களில் புதிய அணைகளை கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா மாவட்டங்கள் முற்றிலுமாக பாதிக்கப்படும். எனவே, கர்நாடகா மாநில அரசை கண்டித்து, விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.திருவாரூர் மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கடந்த, 22ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மேலும், திருவாரூர் மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.
ஒருங்கிணைபாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தலைவர் பாண்டியன் மற்றும் பொறுப்பாளர்கள் ஜெயராமன், தெய்வமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் பங்கீடு ஒழுங்காற்று குழுவை, மத்திய அரசு அமைக்க வேண்டும், காவிரியின் குறுக்கே, கர்நாடக அரசு புதிய அணை கட்டும் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 15ம் தேதி முதல், நாடாளுமன்றம் முன், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட விவசாய சங்கங்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது, என்று தீர்மானிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka