திருத்துறைப்பூண்டி நகராட்சிப் பகுதியில் உள்ள குளங்களை மேம்படுத்தி, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இப் பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நீரின்றி அமையாது உலகு என்ற வழக்கின்படி நமது நாட்டை, மன்னர்கள் ஆண்டபோதும், பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியிலும் கிராமம், நகரம் என்ற பாகுபாடின்றி நீர்நிலைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்தனர்.
அனைத்துப் பகுதிகளிலும் கிராம வாரியாக நீர்நிலைகள், ஏரிகள், உபரிநீர் வழிந்தோடும் வகையில் நீர்நிலை புறம்போக்குகள், மாடுகள் மேய்ச்சலுக்கு என மேய்ச்சல் புறம்போக்கு எனப் பொதுமக்களின் உபயோகத்திற்காக அரசு சில வகை நிலங்களைத் தரம் பிரித்து வைத்தது.
அரசு நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு அரசின் சார்பில் அத்தகைய புறம்போக்கு நிலங்களை வகை மாற்றம் செய்து வீட்டுமனைப் பட்டா வழங்குவதிலும்கூட நீர்நிலைப் புறம்போக்குக்களை மட்டும் வழங்க தடை இன்றும் நீடிக்கிறது.
ஆனால், நீர்நிலைப் புறம்போக்குகளிலும், ஆற்றின் கரைகளும் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதால், ஆண்டுதோறும் வெள்ளம் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.
சென்னை உயர் நீதிமன்றம் இதுபோன்ற நிகழ்வுகளில் ஆக்கிரமிப்பாளர்களுக்குத் தடை ஆணை வழங்கக் கூடாது என கீழமை நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக முன்னறிவிப்பின்றி நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் வகையில் சட்டமும் இயற்றப்பட்டுள்ளது. ஆயினும், இந்தச் சட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படாமல் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன.
திருத்துறைப்பூண்டி நகராட்சிப் பகுதியில் உள்ள நீர்நிலை புறம்போக்குகளை ஆக்கிரமித்து, அரசுக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. புதிய பேருந்து நிலையம் எதிரே ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் வணிக வளாகம், நினைவாலயம் கட்டப்பட்டுள்ளது. அரசு விதைவிடு குளத்தில்தான் புதிய பேருந்து நிலையமே கட்டப்பட்டுள்ளன. இன்னும் பலர் குளங்களைத் தூர்த்து அடுக்கு மாடி வீடு கட்டி உள்ளனர். நகரில் நீர் வடிவதற்கான அனைத்து நீராதாரங்களும் தூர்ந்துவிட்டன.
நகரில் 32 குளங்கள் உள்ளன. நகரின் மையப் பகுதியில் உள்ள நகாட்சிக்கு முன்புறம் உள்ள ராமர் மடக்குளம், பின்புறம் உள்ள நந்தவனக் குளம், செங்கமலக்குளம் உள்ளிட்ட குளங்கள் தண்ணீர் வந்து செல்ல வழியின்றி, மழை நீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் கேந்திரங்களாக மாறி, நகரின் சுகாதாரக் கேட்டிற்கு பெரிதும் காரணமாக உள்ளன. இந்தக் குளங்கள் முறையாகப் பராமரிக்கப்படாததால் நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்து கைப் பம்புகளில் தண்ணீர் வருவதே இல்லை. மேலும், இந்தக் குளங்கள் பராமரிக்கப்படாததால், பொதுமக்கள் தாங்கள் குளிப்பது உள்ளிட்ட அனைத்துத் தேவைகளுக்கும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் நகராட்சியால் வழங்கப்படும் குடிநீரையே பயன்படுத்தும் கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளனர்.
எனவே, உரிய ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகள், அரசியல் கட்சியினர் என எந்தப் பாகுபாடும் இன்றி அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், நகரில் உள்ள 32 குளங்களுக்கும் தண்ணீர் வந்து செல்லும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும்,குளங்களில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைச் செடிகளையும் அகற்றி குளங்களை மேம்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு -ஏ.ரவி(Dhinamani)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக