சனி, 25 டிசம்பர், 2010

தமிழகத்தை சுனாமி தாக்கியதன் 6வது ஆண்டு தினம்-கடற்கரைகளில் மக்கள் கண்ணீர் அஞ்சலி




சென்னை: தமிழகம் மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள நாடுகளை மாபெரும் சுனாமி அலைகள் தாக்கியதன் 6வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

கடந்த 2004ம் ஆண்டு இந்தோனேசியாவில் ஏற்பட்ட கடும் பூகம்பத்தைத் தொடர்ந்து சுனாமி அலைகள் எழுந்தன. இந்தோனேசியாவில் புறப்பட்ட அந்த அலைகள் இந்தியாவின் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை பெரும் சீரழிவை ஏற்படுத்தி ஓய்ந்தன.

மனித குலம் காணாத இந்தப் பெரும் பேரழவுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தமிழகத்தில் நாகப்பட்டனம், கடலூர், சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட கடலோரப் பகுதிகள் சுனாமியால் கடும் பாதிப்பை சந்தித்தன. பல ஆயிரக்கணக்கானோர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. பல ஆயிரம் மீனவர்கள் வீடுகள், உறவுகளை இழந்து தவிப்புக்குள்ளாகினர். பல நூறு பேரைக் காணவில்லை.

ஒரு சில மணி நேரங்களில் ஒட்டுமொத்த தமிழக கடலோரமும் பிணக்காடாகிப் போனது. தமிழகத்தை மட்டுமல்லாமல் இலங்கையின் கடலோரப் பகுதிகளையும் புரட்டிப் போட்டு விட்டது சுனாமி. அதேசமயம், இலங்கையை சுனாமி அலைகள் தாக்கியதன் மூலம் தமிழகத்திற்கு வரவிருந்த பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும், தமிழகத்தை சுனாமி தாக்கியபோது அலைகளின் வேகம் சற்று மட்டுப்பட்டதால்தான் மிகப் பெரிய அசம்பாவிதம் நேராமல் போனதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஆனால் எப்படித் தாக்கியிருந்தால் என்ன, இந்தத் தாக்குதலுக்கே பல ஆயிரம் பேரைப் பறி கொடுத்து பெரும் சேதத்தையும் சந்தித்து விட்டது கடலோரத் தமிழகம்.

அந்த சோக சம்பவத்தின் 6வது நினைவு தினம் இது. ஆழிப் பேரழிவு என்பதை வரலாற்று நூல்களில் மட்டுமே படித்திருந்த இந்த உலக மக்களுக்கு முதல் முறையாக அதை நேரில் காணும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது இயற்கை.

என்றும் மக்கள் மனதிலிருந்து நீங்காத சோக நிகழ்வான இன்று, கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டிம் உள்ளிட்ட பகுதிகளிலும், நாகப்பட்டனம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளின் கடலோரப் பகுதிகளிலும் மக்கள் அலை அலையாக வந்து மறைந்த தங்களது குடும்பத்தினர், சொந்த, பந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கடற்கரைகளில் பல்வேறு அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka