செவ்வாய், 12 ஏப்ரல், 2016

விளைநிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக ; செங்கல் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகள்

கோடை காலத்தில் நெல் சாகுபடி குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் விவசாயிகள் செங்கல் தயாரிப்பு தொழிலில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

செங்கல் தயாரிப்பு

தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய பகுதிகள் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்குகின்றன. இங்கு நெல் மட்டும் அல்லாது காய்கறி உள்ளிட்ட தோட்ட பயிர்களும், பயறு வகை பயிர்களும் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இதில் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாகும். உணவு உற்பத்தியில் தொடர்ந்து முதன்மை இடத்தை பிடிக்கின்ற மாவட்டமாக திகழும் திருவாரூரில், விவசாயிகள் காவிரி ஆற்று தண்ணீரை மட்டுமே நம்பி நெல் சாகுபடி செய்து வருகிறார்கள். முன்பெல்லாம் திருவாரூர் மாவட்ட ஆறு, குளங்களில் கோடை காலத்திலும் தண்ணீர் இருந்தது. இந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் கோடை நெல் சாகுபடியை அதிக அளவு செய்து வந்தார்கள்.

தற்போது மழை காலத்தில் மட்டுமே திருவாரூர் மாவட்ட ஆறுகளில் தண்ணீரை பார்க்க முடிகிறது. கோடை காலத்தில் விவசாயத்திற்கு தேவையான அளவு தண்ணீர் ஆறுகள் மூலமாக கிடைப்பதில்லை. தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த நிலை நீடிப்பதால் கோடை காலத்தில் நெல் சாகுபடி பரப்பு குறைந்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் கோடை காலத்தில் வருமானம் தரும் செங்கல் தயாரிப்பு தொழிலில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

வீட்டு மனையாகும் விளை நிலங்கள்

திருவாரூரை அடுத்த அம்மையப்பன், புதுக்குடி, வலங்கைமான் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தற்போது கோடை காலத்தையொட்டி செங்கல் தயாரிப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து அம்மையப்பனில் செங்கல் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கூறியதாவது:-

இயற்கை இடர்பாடுகளால் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. முன்பு கோடை காலத்தில் விவசாயம் மூலம் அதிக லாபம் கிடைத்து வந்தது. தற்போது கோடை காலத்தில் நெல் சாகுபடிக்கு ஏற்ற அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் கோடை நெல் சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து விட்டது.

விளைநிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாறி வருகின்றன. அதேநேரத்தில் கட்டுமான பணிகளும் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் செங்கல் தேவை அதிகரித்து வருவதால், கோடை காலத்தில் செங்கல் தயாரிப்பு தொழில் வருவாய் தரும் தொழிலாக மாறி விட்டது. அம்மையப்பன் செங்கல் தயாரிப்பிற்கு ஏற்ற மண் வளத்தை கொண்டுள்ளது. ஆகவே அம்மையப்பனை சேர்ந்த பலர் பரம்பரை பரம்பரையாக செங்கல் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு 100-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. ஒரு லட்சம் கல்லை உற்பத்தி செய்ய 3 மாதங்கள் ஆகும். ஆயிரம் செங்கற்கள் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

மழையால் பாதிப்பு

சூளைகளில் செங்கல்லை அறுக்கின்றபோது மழை பெய்தால் தொழிலில் பாதிப்பு ஏற்படும். சூளைகளில் தீ மூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் மரங்களின் விலை ஏற்றம், தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்டவை செங்கல் தயாரிக்க ஆகும் செலவை அதிகப்படுத்துகின்றன. இந்த ஆண்டு செங்கல் விற்பனை மந்தமாகவே உள்ளது.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka