புதன், 13 ஏப்ரல், 2016

விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு நெருக்கடி கொடுக்கும் வங்கிகள், பெரும் பணக்காரர்களை மட்டும் தப்ப விடுவது ஏன் ? ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

புதுடெல்லி : சொற்ப கடன் வாங்கும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு நெருக்கடி கொடுக்கும் வங்கிகள், பெரும் பணக்காரர்களை மட்டும் தப்ப விடுவது ஏன் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வராக்கடன் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதில் கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் நிறுவனங்களுக்கு வழங்கிய ரூ.40,000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான பெஞ்ச், உரிய நெறிமுறைகள் எதையும் கடைப்பிடிக்காமல் வங்கிகள் எந்த அடிப்படையில் அதிகமாக கடன் வழங்குகின்றன என கேள்வி எழுப்பியது. அதோடு, வங்கிகளில் ரூ.500 கோடி மற்றும் அதற்கு அதிகமாக கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பட்டியலை 6 வாரங்களில் சமர்ப்பிக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, ரூ.500 கோடிக்கு மேல் கடன் வாங்கி மோசடி செய்தவர்கள் பட்டியலை ரிசர்வ் வங்கி மூடி முத்திரையிட்ட உறையில் கடந்த மாதம் சமர்ப்பித்தது. இந்த பட்டியலில் உள்ள பெயரை பகிரங்கமாக வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்ட ரிசர்வ் வங்கி, இது அவர்களின் வர்த்தகத்தையும், அதில் பணி புரியும் ஊழியர்கள் நலனையும் பாதிக்கும் என குறிப்பிட்டது. இவ்வழக்கு நேற்று மீண்டும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எஸ்.தாக்குர் மற்றும் நீதிபதி ஆர்.பானுமதி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெ.எல்.குப்தா, கடன் செலுத்தாதவர்கள் பெயரை வெளியிடுவதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். ரகசிய காப்பு நடவடிக்கைகள் கடன் செலுத்தாதவர்கள் பெயர்களை வெளியிட தடையாக இருக்கும் பட்சத்தில், செலுத்தப்படாத கடன் தொகை விவரத்தை வெளியிடலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அதற்கு ரிசர்வ் வங்கி, ‘‘கடன் தொகை வெளியிடுவது பொருளாதாரத்தை பாதிக்கும் என தெரிவித்தது.

தலைமை நீதிபதி ஆர்.எஸ்.தாக்குர் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: தங்கள் நிறுவனத்தை அல்லது தொழிலை விரிவு படுத்துவதற்காக பல ஆயிரம் கோடியை கடனாக வாங்குகின்றனர். இதன்பிறகு திவால் நோட்டீஸ் கொடுத்து விடுகின்றனர். அதுகூட வேறு ஆதாரங்களில் இருந்து நிதி திரட்டுவதற்காகவே இவ்வாறு செய்கின்றனர். அதேநேரத்தில் அப்பாவி ஏழை விவசாயிகள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்போது அவமானம் தாங்காமல் தற்காலை செய்து கொள்கின்றனர் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இந்த நிலைக்கு விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் வங்கிகள் தங்களிடம் கணக்கு வைத்துள்ள பெரும் பணக்கார வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்களை ரகசியமாக வைத்திருக்கின்றன. இது அவர்கள் மோசடி செய்த தொகையை வெளியிடாமல் தடுக்கிறது. அதோடு நீதித்துறை உத்தரவுக்கும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. இதனால் ரூ.500 கோடிக்கு மேல் கடன் வாங்கி ஏமாற்றியும் அவர்கள் பெயரை வெளியிட விடாமல் செய்கிறது. இதுகுறித்து விரிவான விசாரணையை இந்த நீதிமன்றம் நடத்தும்.

பெயர்களை வெளியிடுவதற்கு ரகசியக்காப்பு தடையாக இருக்கிறதா? ரூ.500 கோடிக்கு மேல் கடன் வாங்கி செலுத்தாததவர்கள் விவரத்தையும், கடன் தொகையையும் வெளியிட இயலாத அளவுக்கு அப்படி என்ன ரகசிய காப்பு இருக்கிறது என்பதுதான் எங்களது பிரதான கேள்வி. அப்படியானால், வராக்கடன் தொகையையாவது வெளியிடலாம். இது பற்றி ஏப்ரல் 26ம் தேதி நீங்கள் தெரிவிக்க வேண்டும். வராக்கடனாக இருப்பது மிகப்பெரிய தொகையாகும். எனவே, கடன் தொகையை வசூலிப்பதில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெளிவுபடுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

* பல ஆயிரம் கோடி கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பி செலுத்தாமல் திவால் நோட்டீஸ் கொடுக்கின்றனர்.
* ஆனால், கடனை செலுத்த முடியாத விவசாயி தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலை உள்ளது.
* பணக்கார வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அளிக்கும் ரகசிய காப்பு விசாரணைக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது.
* கடன் கொடுத்த வங்கிகள், அதை வசூலிக்க எடுத்த முயற்சிகள் என்னென்ன?
* ரகசிய காப்பு பெயர்களை வெளியிட தடையாக இருக்குமானால், வராக்கடன் தொகையை வெளியிடுவதில் என்ன சிக்கல் இருக்கிறது? என உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

TKS

Dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka