குடியரசு தினவிழாவை முன்னிட்டு திருவாரூர்
ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை செய்தனர்.
போலீசார் பாதுகாப்பு
குடியரசு தின விழாவை முன்னிட்டு திருவாரூர்
ரெயில்நிலையத்தில் நேற்று ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசார்
இணைந்து சுழற்சி முறையில் சோதனை பணி மேற்கொண்டனர். நேற்று காலை திருவாரூர் வந்த
எர்ணாகுளம்–காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகளின் உடமைகள் சோதனையிடப்பட்டது.
அப்போது ரெயில்வே பாதுகாப்பு படை சப்–இன்ஸ்பெக்டர் மகாராஜன், ரெயில்வே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செந்தாமரை ஆகியோர் மெட்டல்
டிடெக்டர் உதவியுடன் பயணிகள் உடமைகளை சோதனை செய்தனர்.
இதேபோல் ரெயில் நிலையத்தில் சந்தேகத்துக்குரிய
வகையில் நடமாடிய நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ரெயில் நிலையத்தில்
அனாதையாக கிடக்கும் பொருட்களை தொட வேண்டாம் என பயணிகளுக்கு ஒலிபெருக்கி மூலம்
எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வழிபாட்டு தலங்களில் பலத்த பாதுகாப்பு
திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
ஜெயசந்திரன் உத்தரவின்படி பக்தர்கள் அதிகம் கூடும் வழிபாட்டு தலங்களில் கூடுதல்
போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகரின் எல்லை பகுதியில் சோதனை சாவடி
அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல பஸ்நிலையம், கடைவீதி போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும்
போலீசார் கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக