திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் ரத்தம் உறையாத நோய் இருந்த கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்து மருத்துவர்கள் சாதனை செய்தனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கோம்பூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மனைவி பரமேஸ்வரி(25). இவருக்கு தலை பிரசவம். கருவுற்று 8 மாதங்களான நிலையில் ரத்த சோகை காரணமாக கடந்த மாதம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர், பரமேஸ்வரிக்கு ரத்த கொதிப்பு இருப்பதாகவும், தட்டை அனுக்கள் குறைவாக இருப்பதாகவும், இதனால் வலிப்பு நோய் வரலாம் எனக்கருதி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவ கல்லூரியின் மகப்பேறு டாக்டர் சுமதி தலைமையில் டாக்டர்கள் அவரை பரிசோதித்ததில் அவருக்கு ரத்த உறைதலில் குறைபாடுகள் இருப்பதை கண்டறிந்தனர். பொதுவாக 3 நிமிடங்கள் உரையவேண்டிய ரத்தம் தட்டை அனுக்கள் குறைவாக இருக்கும் காரணத்தால் பரமேஸ்வரிக்கு 15 நிமிடமாகியும் ரத்தம் உறையவில்லை. மேலும் ரத்தக்கொதிப்பால் பாதிக்கப்பட்ட பரமேஸ்வரியின் உடல் முழுவதும் உப்புநீர் காரணமாக வீங்கிய நிலையிலும், அவருக்கு ரத்த நாளங்கள் கண்டுபிடிப்பதே சிரமமாகவும் இருந்தது. இந்நிலையில் மருத்துவ கல்லூரியின் முதல்வர் மீனாட்சி சுந்தரம் ஆலோசனையின் பேரில் டாக்டர் சந்திரசேகரன் தலைமையில் மருத்துவ குழுவினர் குழந்தையை வெளியே எடுக்க முயற்சி மேற்கொண்டனர்.
கடந்த மாதம் 26 ம் தேதி டாக்டர்கள் சுமதி, சுகன்யா ஆகியோர் கொண்ட குழுவினர் அறுவைச்சிகிச்சையால் 1800 கிராம் எடை கொண்ட பெண் குழந்தையை வெளியே எடுத்தனர். இதனால் பரமேஸ்வரிக்கு உறையாமல் தொடர் ரத்தப்போக்கு இருந்தது. அதனால் 17 பாட்டில்கள் ரத்தம், 30 பாட்டில் பிளாஸ்மா, 10 பாட்டில் தட்டை அனுக்கள் அவருக்கு செலுத்தப்பட்டது. இது தவிர ரத்தம் உறைய தேவைப்படும் 13 காரணிகளில் 7 காரணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற காரணத்தால், ரூ. 42 ஆயிரம் மதிப்புள்ள அந்த காரணி பரமேஸ்வரிக்கு செலுத்தப்பட்டது. அதன் பிறகே பரமேஸ்வரியின் உடல் சகஜ நிலைக்கு திரும்பியது. தற்பொழுது பரமேஸ்வரியும், குழந்தையும் நல்ல நிலையில் உள்ளனர். ஒரு சில தினங்களில் பரமேஸ்வரியும், குழந்தையும் வீடு திரும்பும் நிலையில் உள்ளனர். இதனையடுத்து அரசு மருத்துவ கல்லூரிக்கு நேற்று சென்ற திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன், சாதனை நிகழ்த்திய டாக்டர் குழுவை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக