திருவாரூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிரடி சோதனை
திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பலர் உரிமம் இன்றி ஆங்கில முறைப்படி பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதாக மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்ட சுகாதார பணி துணை இயக்குனர் சுமதி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் செங்குட்டுவன், வட்டார மருத்துவ அதிகாரி மகேஷ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜா, ஜெயந்தி ஆகியோரை கொண்ட தனிப்படையினர் திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருந்து கடைகள், கடைவீதிகள், கிளீனிக்குகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
திருவாரூரை அடுத்த மாங்குடி பகுதியில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம் என்பவர் உரிய அனுமதி இன்றி பொதுமக்களுக்கு ஆங்கில முறையில் மருத்துவம் செய்து வந்தது தெரியவந்தது. அதிகாரிகள் சோதனை நடத்துவது குறித்து தகவல் அறிந்த அவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
3 பேர் கைது
போலி டாக்டர்களாக செயல்பட்டு வந்ததாக திருவாரூர் மாவட்டம் கடாரங்கொண்டான் பகுதியை சேர்ந்த ராஜ்மோகன் (வயது43) என்பவரும், கூடூரில் கலியபெருமாள் (70) என்பவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதைப்போல மன்னார்குடி சாலை விளமலில் உள்ள ஒரு மருத்துவமனையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு சித்தா முறை மருத்துவம் என்று கூறி, விளமலை சேர்ந்த பக்கிரிசாமி (வயது65) என்பவர் ஆங்கில முறையில் மருத்துவம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், மருத்துவமனையில் இருந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து சீட்டுகளை பறிமுதல் செய்தனர். திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் போலி டாக்டர்களாக பணியாற்றி வந்த ராஜ்மோகன், கலியபெருமாள், பக்கிரிசாமி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான மோகனசுந்தரம் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக