நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் 65 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் 1657 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளும், 1305 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளும் உள்ளன. இவற்றில் 2,13,079-க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த விடுதிகளை மேம்படுத்த வேண்டும். அடிப்படை, சுகாதார வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில் இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
நாகையில் 15 பேர் கைது:
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலர் ப. மாரியப்பன் தலைமை வகித்தார். இதில் மாவட்டத் துணைச் செயலர் எஸ். அன்புராஜ், மாவட்டத் துணைத் தலைவர் ஏ. ராஜ்மோகன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை முழங்கியவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்றனர்.
அப்போது அங்கிருந்த போலீஸார் மாணவர் சங்கத்தினரைத் தடுத்து நிறுத்தினர். இதனால் மாணவர்கள், போலீஸாரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருவாரூரில் 50 பேர் கைது:
திருவாரூரில் வியாழக்கிழமை கல்வி உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சங்க நிர்வாகி சிங்காரவேலு தலைமையில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்ற 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக