இது மாதிரி சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்? கற்பூரம் போன்று வீட்டில் இருக்கும் வேறு என்னென்ன பொருட்களைக் குழந்தைகளிடம் அனுமதிக்கக் கூடாது?நிபுணர்களிடம் பேசினோம்...
ஸ்ருதி சந்திரசேகரன் (இன்டர்னல் மெடிசின் மற்றும் நாளமில்லா சுரப்பி நிபுணர்)...
‘‘சூடம் தயாரிக்கும்போது கேம்பர் (Camphor) எனும் வேதிப்பொருளை சேர்க்கிறார்கள். இந்த வேதிப்பொருளை மிகச்சிறிய அளவில் மட்டுமே சேர்க்க வேண்டும். ஆனால், கற்பூரம் தயாரிப்பவர்களில் பலர் இந்த விதிமுறையைக் கடைப்பிடிப்பதில்லை. இதனால், அதிக அளவு கேம்பர் கலந்திருக்கும் கற்பூரங்கள்தான் அதிகமாக சந்தையில் விற்பனையாகி நம் வீட்டுக்கு வருகிறது.
கற்பூரத்தை விளையாட்டுத்தனமாக உட்கொள்ளும் குழந்தைகளுக்கு தொண்டை எரிச்சல்,நரம்புத்தளர்ச்சி, உடல் பலவீனமடைதல் ஆகிய சிறிய பிரச்னைகள் ஏற்படலாம். உட்கொண்ட கற்பூரத்தின் அளவு அதிகமாக இருந்தால் வலிப்பு ஏற்படுவதுடன், கோமா நிலைக்குச் சென்றுவிடும் அபாயமும் ஏற்படும். உடனடியாக கவனிக்காவிட்டால் மரணத்திலும் கொண்டு சென்றுவிடலாம். அதனால், கற்பூரம் போன்ற பொருட்களை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத வகையில் வைப்பது அவசியம்.
இதேபோல், Bisphenol A எனப்படும் வேதிப்பொருள் கலந்து தயாரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களையும் குழந்தைகளிடம் புழங்கவிடக் கூடாது. பிஸ்பெனால் கலந்த பாட்டில்களில் தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுத்தனுப்புவதும் கூடாது. இந்த வேதிப்பொருள் குழந்தைகளின் நாளமில்லா சுரப்பிகளை பாதிக்கும்... வளர்ச்சியைத் தடுக்கும்... பருமனை அதிகரிக்கும், இதயம் மற்றும் சுவாசம் சம்பந்தமான பிரச்னைகளை ஏற்படுத்தும்.
கொசுவர்த்தி சுருள், பூச்சிகளை ஒழிப்பதற்காக பயன்படுத்தப்படும் மருந்துகளையும் குழந்தைகளின் கண்களில் படாமல் வைப்பது நல்லது. சர்க்கரை நோய்க்கும், உயர் ரத்த அழுத்தத்துக்கும் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளையும் அவர்கள் கைகளுக்கு எட்டாதவாறு வைப்பது நல்லது. பெற்றோர் இந்த மாதிரி பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது குழந்தைகளுக்கு சுய மருத்துவம் செய்யாமல் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவை அணுகுவதே சரியானது...’’டி.ரமேஷ் (உதவி பேராசிரியர், நச்சுக்கட்டுப்பாட்டு துறை மற்றும் நச்சியல் ஆய்வு மையம்)...
‘‘அரோமெட்டிக் ஹைட்ரோ கார்பன் வகையைச் சேர்ந்த கேம்பர் கற்பூரத்தைச் சிறிய அளவு உட்கொண்டாலும் நரம்பு மண்டலமும் மூளையும் பாதிக்கும். இந்த பாதிப்பின் முதல் அறிகுறியாக குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படும். இந்தக் குழந்தைக்கு அதனால்தான் வலிப்பு ஏற்பட்டிருக்கிறது. உட்கொண்ட கற்பூரத்தின் அளவு குறைந்த அளவு என்றாலும் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். கற்பூரத்தைக் கடித்து வெகுநேரம் வரை கண்டுகொள்ளாமல் விட்டால் உயிருக்கே ஆபத்தாகிவிடலாம்
என்பதால் தாமதிக்கக் கூடாது.
கரப்பான் பூச்சிகளை விரட்டுவதற்காக பயன்படும் பாச்சை உருண்டைகளும் நச்சுத்தன்மை உடையவையே. கற்பூரத்தை சர்க்கரைக் கட்டி என்று குழந்தைகள் நினைப்பதுபோல, பாச்சை உருண்டைகளை ‘மிட்டாய்’ என நினைத்து சாப்பிட்டுவிடுவார்கள். இதன் விளைவும் கற்பூரத்தைப் போன்றதுதான். பாத்ரூமில் பயன்படுத்தப்படும் ஆசிட், துணிகளின் கறை நீக்கப் பயன்படுத்தும் திரவங்கள், மண்ணெண்ணெய் ஆகியவற்றை தண்ணீர் பாட்டிலில் வைத்திருப்பது ஆபத்தானது. குழந்தைகள் இவற்றைக் குடித்துவிடும் அபாயம் உண்டு.
இதுபோன்ற சிக்கலான நேரத்தில் நச்சை வெளியே எடுக்கிறேன் என உப்புக் கரைசல் அல்லது புளிக் கரைசலை வாய்க்குள் ஊற்றுவார்கள். இது தவறான பழக்கம். இதனால், நுரையீரலும் உணவுக்குழாயும் பாதிக்கப்படும். அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சையை ஆரம்பிப்பது மட்டுமே பயனளிக்கும். பென்சிலின் முனை, ரப்பர், இங்க், ஊதுபத்தி ஆகிய பொருட்களில் அதிக அளவில் நச்சு கிடையாது என்றாலும் குழந்தைகள் கடித்துவிட்டால் மருத்துவரிடம் காட்டி பரிசோதனை செய்துகொள்வது நல்லது. முடிந்த வரை ஆபத்தான நச்சுப் பொருட்களை குழந்தைகள் கண்களில் படாதவாறு வைப்பது பாதுகாப்பானதே.’
Tks
http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=4136&cat=500
சூடம் விஷம் என்பது பலருக்கும் தெரியாது. என் மகள் சூடம் உண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இரண்டு நாளாக மருத்துவமனையில் இருந்தாள். 25.09.19 ல் இது நடந்தது......
பதிலளிநீக்குஎனவே ஆபத்து வரும் பொருட்களை அறிந்து குழந்தைக்கு அகப்படாமல் வைப்பது நல்லது...