திங்கள், 15 பிப்ரவரி, 2016

வேலைவாய்ப்பு முகாம்: 4,105 பேருக்கு வேலை கிடைத்தது !!!

திருவாரூர் அருகே சொரக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 4,105 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

சொரக்குடியில் வேலைவாய்ப்புத்துறை, தொழிலகப் பாதுகாப்பு சுகாதார இயக்கம், திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் பேசியது:

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்படுகிறது.

டெல்டா மாவட்டங்களில் படித்த இளைஞர்கள் மற்றும் மகளிர் பயன்பெறும் வகையில் முதல்வரின் உத்தரவின்படி திருவாரூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. 264 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான தகுதியுள்ளவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளன. முகாமில் பொறியியல் பட்டதாரிகள் 1,045, பட்டதாரிகள் 2,936, பட்டயப்படிப்பு படித்தவர்கள் 2,897, ஐடிஐ தொழிற்பயிற்சி பெற்றவர்கள் 2,532, பள்ளி இறுதி வகுப்பு முடித்தவர்கள் 9,710, எஸ்எஸ்எல்சி வகுப்புக்கு கீழ் படித்தவர்கள் 5,165 என மொத்தம் 24,285 பேருக்கு வேலையளிக்கத் தனியார் நிறுவனங்கள் முடிவெடுத்தன.

நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 57,315 பேர் பங்கேற்றனர். இதில் 19 மாற்றுத் திறனாளிகள் உள்பட 4,105 பேர் நேரடி நியமனம் பெற்றனர்.

மேலும், இதுதவிர திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக 3,446 பேர், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக 605 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றார் காமராஜ்.

ஊரக தொழில்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப. மோகன் பேசியது:

முதலமைச்சர் ஜெயலலிதா கல்விக்காக ரூ. 85,000 கோடி நிதி ஒதுக்கி செலவிட்டுள்ளார். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பல்வேறு மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்தி வருகிறார். திருவாரூரில் நடைபெற்ற 13 ஆவது வேலைவாய்ப்பு முகாமில் பல்லாயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 38 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு முகாமுக்கு வருபவர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் குறைந்தவர்களுக்காக திறன் மேம்பாட்டுக் கழகம் அமைத்து பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

கிராமப் பகுதிகளுக்குத்தான் அதிகமாக தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் 11 இடங்களில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை தொழிற்பேட்டை இல்லாததால், மாவட்டத்தில் தொழிற்பேட்டை அமைக்க உத்தரவிடப்பட்டு 27.55 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் மோகன்.

முகாமில் சிறப்பு மருத்துவ பிரிவு அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல், குடிநீர், உணவு பொருள்கள் விநியோகிக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன், தொழில்துறை, சுகாதாரத்துறை மண்டல இயக்குநர் போஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பதிவு செய்யப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka