நன்னிலம் அருகே, 14-ந் தேதி நடைபெறும் முகாமில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.
வேலைவாய்ப்பு முகாம்
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள சொரக்குடி ஆரூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன் ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
10 ஆயிரம் பேருக்கு வேலை
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி சொரக்குடி ஆரூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் 14-ந் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 350-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து வேலை வழங்க உள்ளன. எனவே முகாமில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை கிடைக்கும்.
இதில் 8-ம் வகுப்பு படித்தவர்கள், 12-ம் வகுப்பு படித்தவர்கள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படித்தவர்கள், என்ஜினீயரிங் பட்டதாரிகள், கலை, அறிவியல் பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். அதேபோல, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் திறன் எய்தும் பயிற்சிக்கான பதிவும், வெளி நாட்டு வேலைக்கான பதிவும் நடைபெறும்.
10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதால் ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் முகாம் பற்றிய தகவல்களை மக்களிடம் முழுமையாக கொண்டு சேர்க்க வேண்டும். வேலைவாய்ப்பு முகாமையொட்டி சிறப்பு பஸ் வசதி, மருத்துவ வசதிகள் செய்யப்படும். வேலை வாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு என பிரத்யேகமாக தனி அரங்கு அமைக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார்.
ஆய்வு
கூட்டத்தில் வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குனர் முரளிதரன், துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, உதவி இயக்குனர் மணி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி, உதவி கலெக்டர்கள் முத்துமீனாட்சி, செல்வசுரபி, மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி அம்பிகாபதி, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி செல்லத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சொரக்குடி பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்ற அமைச்சர் அங்கு நடைபெற்று வரும் வேலைவாய்ப்பு முகாம்களுக்கான அரங்குகள் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
tks
daily thanthi
0 கருத்துகள்:
கருத்துரையிடுக