ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை பணிகள் விரைவுபடுத்தப்படுமா?



திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை பணிகள் சுணக்கமான நிலையில் இருந்து வருவதைத் துரிதப்படுத்த வேண்டும். வருகிற ரயில்வே நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து  விரைவில் ரயில் சேவையைத் தொடக்க வேண்டுமென்பதே  புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சென்னை-காரைக்குடி ரயில் பாதை கடந்த 120 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு, சென்னையில் இருந்து ராமேஸ்வரம், காரைக்குடி, மானாமதுரை ஆகிய ஊர்களுக்கு கம்பன், மனோரா, போட்மெயில், சேது, ராமேஸ்வரம், மானாமதுரை ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது.

இதனால் சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்ட மக்கள் சென்னைக்கு நேரடி ரயில் வசதியைப் பெற்றிருந்தனர்.

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பாக விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதைத் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டதில் இருந்து காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராமபட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருநெல்லிக்காவல், மாவூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு மாவட்ட மக்கள் சென்னைக்கு நேரடி ரயில் வசதியை இழந்தனர். இந்தப் பழைமையான வழித்தடம் அகலப்பாதையாக மாற்றம் செய்யும் பணிகள் தாமதமானதற்கு அரசியல் உள்நோக்கமும் ஒரு காரணம் என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கிடையே சென்னையில் இருந்து காரைக்குடிக்கு இடையேயான 450 கி.மீ. தூரத்தில் திருவாரூர் வரையிலான 300 கி.மீ. தூரம் மூன்று கட்டமாக அகலப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரயில் சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில், அடுத்த கட்டமாக 301-வது கி.மீட்டரான திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வரையிலான பணிகளைத் தொடங்காமல், காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வரையிலான 78 கிமீ தூரம் ரயில்சேவை நிறுத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

 இதனால் எந்த ரயில் சேவையும் கிடைக்காது எனத் தெரிந்தும் இந்தப் பாதையை அரசியல் முட்டுக்கட்டைகள் காரணமாக ரயில்வே நிர்வாகம் தொடங்கியது.

இதனால் திருவாரூர்-முத்துப்பேட்டை வரையில் 60 கி.மீ. தூரம் மனிதசங்கிலியும் வர்த்தகர் சங்கத்தின் சார்பில் கடைஅடைப்பு போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு  போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், திருவாரூர்-பட்டுக்கோட்டை ரயில் சேவையைத் தொடங்க வேண்டிய கட்டாய நிலைக்கு ரயில்வேதுறை ஆளாக்கப்பட்ட உடன் பயணிகள் ரயில் சேவையை நிறுத்தி, பணிகள்  திருவாரூரில் இருந்தும் திருத்துறைப்பூண்டி வழியாகவும் ஒரே சமயத்தில் தொடங்கப்படுமென அறிவித்து பணிகளைத் தொடங்கினர்.

ஆனால் பணிகள் சுணக்கமாகவே நடைபெற்று வருகின்றன. மேலும், மத்திய அரசின் ரயில்வே துறையால் ஒதுக்கப்படும் நிதி முழுமையாகப்   பாரம்பரிய, பழைமையான காரைக்குடி வழித்தடத் திட்டத்திற்கு பயன்படுத்தப்படாமல், திருத்துறைப்பூண்டி-வேளாங்கண்ணி, மன்னார்குடி-பட்டுக்கோட்டை உள்ளிட்ட புதிய வழித்தடப் பாதைகள் அமைக்கவும் ஒதுக்கீடு செய்யப்படுவதால், இந்தப் பணிகள் முழுமையாக நடைபெறாமல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடைபெறுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 திருவாரூர்-காரைக்குடி வழித்தடம் அகலப்பாதையாக மாற்றம் செய்யப்படாத நிலையில் புதிய வழித்தடங்களுக்கு இணைப்பு பாதை வசதியே கிடையாது.

 இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் முழுத் தொகையும் இந்தத் திட்டத்திற்கு மட்டுமே செயல்படுத்தப்படாமல் பல திட்டங்களுக்கும் செய்யப்படுவதால் இந்தத் திட்டப் பணிகளில் முன்னேற்றம் வெகு குறைவாகவே உள்ளது.
எனவே, மத்திய ரயில்வே அமைச்சர் இந்த விஷயத்தில் நேரடியாகத் தலையிட்டு பாரம்பரியமிக்க திருவாரூர் - காரைக்குடி அகல ரயில்பாதை திட்டத்திற்கு உயர் முன்னுரிமை அளித்து போதிய நிதி ஒதுக்கீடு செய்து விரைந்து பணிகளை முடித்து  சென்னைக்கு நேரடி ரயில் வசதியை  தொடங்க வேண்டுமென்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka