புதன், 3 பிப்ரவரி, 2016

கெயில் எரிவாயு குழாய்கள் அமைக்க உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கு எதிர்ப்பு

கேரளத்திலிருந்து கர்நாடகத்துக்கு தமிழக  விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் அமைக்க  உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு காவிரி டெல்டா விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கெயில் நிறுவனம் கேரள மாநிலத்திலிருந்து  கர்நாடகத்துக்கு தமிழக விளைநிலங்களில் குழாய் பதித்து எரிவாயுவை கொண்டு செல்லவுள்ளது. இதற்காக சேலம், கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களில் குழாய் பதிக்கும் திட்டத்துக்காக வயல்களை நாசப்படுத்தி, தென்னை மரங்களை வேறோடு பிடுங்கி எறிந்து பணியைத் தொடங்கியது.

இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து  தமிழக முதல்வர் ஜெயலலிதா விவசாயிகளைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு ஆதரிக்காது எனக் கூறினார்.

இதற்கிடையில் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கெயில் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், செவ்வாய்க்கிழமை  நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தீர்ப்பில் இத்திட்டம் தொடங்கும்போதே ஏன் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வாக்கு வங்கியை கருத்தில்கொண்டு தமிழக அரசு செயல்படுகிறதா எனக் கூறி கெயில் நிறுவனத்துக்கு சாதகமாக தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு காவிரி டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார்குடி எஸ். ரெங்கநாதன் (காவிரி நீர்ப் பாசன விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர்): விவசாய  நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதன் மூலம் அங்கு  வேரூன்றும் மரங்களை நட முடியாது.

வீடுகள் கட்ட முடியாது. நெல், எள் ஆகியவற்றை மட்டுமே சாகுபடி செய்ய இயலும். குழாய் பதித்திருக்கும் இடத்தில்  ஏதேனும் தீ விபத்து போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டால் விவசாயிகள் பொறுப்பேற்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது.

விவசாய நிலங்களில் குழாய் பதிக்கும் முன் அந்தந்த விவசாயிகளிடம் கலந்தாலோசித்து, உரிய சந்தை விலையை நிர்ணயித்து இடத்தை கிரயமாக கெயில் நிறுவனம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

விவசாய  நிலங்களில் அமல்படுத்துவதைக் காட்டிலும்  சாலையோரமாகக் கொண்டு செல்வது நல்லது. விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றார்.

வெ. சத்தியநாராயணன் (காவிரி டெல்டா விவசாயிகள் குழுமப் பொதுச் செயலர்):

நீதிமன்றத்தைப் பொருத்தவரை இருக்கும் சட்டத்தைப் பயன்படுத்தி தீர்ப்பு வழங்குகிறது. விவசாயப் பகுதி உள்ளிட்ட குறிப்பிட்ட சில பகுதிகளைப் பாதுகாக்க சட்டத்தில் இடம் இல்லாத வகையில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்ற வேண்டும். இதன்மூலம் விவசாயிகள், விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படும் என்றார்.

ஜி. வரதராஜன் (மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்க திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்): ஏற்கெனவே காவிரி டெல்டாவில் குழாய் மூலம் கெயில் நிறுவனம் எண்ணெய் வளங்களைக் கொண்டு செல்ல பூமிக்கடியில் குழாய் பதித்துள்ளது. இக்குழாய்கள் பல இடங்களில் வெடித்து வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வெள்ளக்குடி, கமலாபுரம், கருப்பூர் உள்ளிட்ட கிராமங்களில் வயல்களும், விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் மரம் நடவோ, டிராக்டர்களை வயலில் இறக்கவோ இந்தச் சட்டம் அனுமதிக்காது. அங்கு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் அதற்கு விவசாயிகளிடம் அபராதம் வசூலிக்கலாம் எனவும் கூறுகிறது.

எனவே, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு,  மேல்முறையீடு செய்து விவசாயிகளைப் பாதுகாக்க  வேண்டும்.

இத்திட்டம் தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் தொடங்கி அனுமதிக்கப்பட்டால், இதை காரணம் காட்டி வருங்காலத்தில் மீத்தேன் திட்டத்தை காவிரி டெல்டா பகுதிகளில் தொடங்க வழிவகுக்கும் என்பதால் எக்காரணம் கொண்டும் இத்திட்டத்தை அனுமதிக்கக்  கூடாது என்றார்.

இதுகுறித்து தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் தீர்ப்பு குறித்து உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும், விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அனுமதிக்கக் கூடாது. தமிழகத்திலுள்ள விவசாயப்  பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கருத்தாக உள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka