புதன், 29 ஜூலை, 2015

வேன் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 12 பேர் காயம்

திருத்துறைப்பூண்டி அருகே திங்கள்கிழமை வேன் கவிழ்ந்து 12 பள்ளி மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.

திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள எழிலூர், மருதவனம், களப்பால் பகுதிகளில் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 32 மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு தனியார் வேன் ஒன்று களப்பால் நோக்கி திங்கள்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது.

அந்த வேனை களப்பால் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் ஓட்டினார்.

வேன் எழிலூர் கிராமத்தில் சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்துக்கு வழிவிட முயன்றபோது வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த 12 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.

தகவலறிந்து நெடுஞ்சாலை ரோந்து வாகன உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் விரைந்து சென்று மாணவ, மாணவிகளை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

காயமடைந்தவர்களில் பிரியதர்ஷினி (12), முகுந்தன், சசிதரன் (10), தேசிகா (11), வர்ஷினி (11), ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மற்றவர்கள் அஜிதா, மாசிஷா, பவதாரிணி, ஜென்சிகிருஷ்ணா, விகாஷினி, அஸ்வினி உள்ளிட்ட 7 பேர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் குமார் உள்ளிட்ட பல அலுவலர்கள் மாணவிகளை சந்தித்து ஆறுதல் கூறினர். மாணவவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். விபத்து தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிந்து வேன் ஓட்டுநர் முருகானந்தத்தை கைது செய்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka