வெள்ளி, 27 மார்ச், 2015

இம்பல்ஸ் ஷாப்பிங்...தேவையில்லாத பொருட்களில் முடங்கும் பணம்!


இந்தக் கட்டுரையைப் படிக்கும்முன் உங்களது வீட்டை முழுமையாக ஒருமுறை சுற்றிப் பாருங்கள். உங்களைச் சுற்றி என்னென்ன பொருட்கள் இருக்கின்றன, இந்தப் பொருட்களை நீங்கள் எதற்காக வாங்கினீர்கள், இதனை எத்தனைமுறை பயன்படுத்தி இருப்பீர்கள், கடைசியாக எப்போது பயன்படுத்தினீர்கள் என்பதைக் கவனியுங்கள். இதனால் உங்கள் வருமானத்தில் பெரும்தொகை தேவையில்லாமல் செலவாகியுள்ளது என்றால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? நீங்கள் ஒப்புக்கொள்ள மறுத்தாலும் அதுதான் உண்மை. எப்படி?



சதீஷ் என்பவர் பிரபல தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர். இவர், தன் வீட்டில் உள்ள பொருட்களை அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும் என நினைப்பவர். இவரது கையில் தற்போது புதிதாகச் சந்தைக்கு வந்த செல்போன் இருக்கும்.

இதேமாதிரி குடும்ப உறுப்பினர்கள் எல்லாரிடமும் லேட்டஸ்ட் செல்போன்கள். இதற்கான மொத்த விலை சுமார் 75,000 ரூபாய். ஏற்கெனவே வாங்கிய போன்கள் எக்ஸ்சேஞ்சில் குறைந்த விலைக்குக் கேட்டதால், விற்காமல்   வீட்டில் கிடக்கின்றன. ஆக மொத்தத்தில், செல்போனுக்காக மட்டும் சதீஷ் மற்றும் அவரது குடும்பம் 1.2 லட்சம் ரூபாயைச் செலவழித்துள்ளது.

செல்போன் மட்டுமல்ல, சதீஷுக்குப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசை. இதற்காக உயர்ரக கேமரா ஒன்றை வாங்கினார். புகைப்படம் எடுப்பது பற்றி அவ்வளவாகத் தெரியாத சதீஷ் கேமராவுக் காகச் செலவழித்த தொகை 65,000 ரூபாய்.

 ஆனால், செல்போனில் 12 மெகாபிக்ஸல் கேமரா வாங்கியதால், அதில்தான் புகைப்படம் எடுக்கிறார். எனவே, உயர்ரக கேமரா மூன்று மாதங்களாகப் புகைப்படம் எதுவும் எடுக்கப்படாமல் அப்படியே தூசி படிந்துகிடக்கிறது.

அவரது மகன் கல்லூரியில் நுழைந்தவுடன் பைக் ஒன்றை வாங்கித் தந்தார் சதீஷ். ஆனால், அவனோ வெளியூரில் படிப்பதால் கடந்த பத்து மாதங்களாக அப்படியே நிற்கிறது அந்த பைக். அதற்காகச் செலவழித்த தொகை 80,000 ரூபாய். வீட்டில் ஏற்கெனவே கம்பெனி கொடுத்த லேப்டாப் உள்ளது. இருந்தாலும், அலுவலக வேலைகளுடன் பெர்சனல் வேலைகள் கலக்கக் கூடாது என அவரும் அவரது மனைவியும் தனித் தனியே வாங்கிய லேப்டாப்பின் விலை 1,20,000.


இதேபோல் பல விஷயங்களிலும் இம்பல்ஸிவாகப் பொருட்களை வாங்கிக் குவித்துள்ளார் சதீஷ். ஆனால், அது குறிப்பிட்ட காலத்துக்குமேல் பயனில்லாமல் வீட்டில் காட்சிப்பொருளாக மாறியிருக்கிறது.

இவர்தான் இப்படி வாங்கிக் குவித்துள்ளார் என்றால், இவரது மனைவி ஆஃபரில் வந்தது என்று ஒரு மைக்ரோவேவ் ஓவன் வாங்கி அதனைச் சில நாட்கள் மட்டும் பயன்படுத்திவிட்டு அப்படியே ஒரு மூலையில் வைத்திருக்கிறார்.

 நன்றாக ஓடிக் கொண்டிருந்த ஃப்ரிட்ஜை தொலைக்காட்சி விளம்பரத்தில் புதிய டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மாற்றி அந்த ஃப்ரிட்ஜும் ஏற்கெனவே தந்த பயன்பாட்டையே தந்துள்ளது. வீட்டில் உள்ள குப்பைகளை அகற்ற வாக்வம் க்ளீனர் வாங்கி, அதுவும் பயன்பாடு இல்லாமல் இருக்கிறது. அதுமட்டுமின்றி, வீட்டில் குப்பைகளை அகற்ற வேலையாளை நியமித்து மாதந்தோறும் சம்பளமும் தந்துகொண்டிருக்கிறார். இதனையெல்லாம் கூட்டிக்கழித்துப் பார்த்தால், இரண்டு வருடங்களில் நம்மைச் சுற்றி நமக்கே தெரியாமல் நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கிக்கிடப்பதைப் பார்க்கலாம்.

அதற்காக அப்டேட் ஆகாமல் இருக்க முடியுமா என்று கேட்கலாம். அப்டேட்டாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. கேமரா சொல்போன் வாங்கிய பிறகு, கேமராவும், மியூசிக் ப்ளேயரும் தேவையில்லாத செலவுகள்தானே! அதேபோல், வீட்டில் அனைவரும் பயணிக்கும் கார் இருக்கும் போது, தனியே இருவருக்கு பைக் தேவையில்லை அல்லவா! நமது பயன்பாட்டுக்கு ஏற்ற செல்போன் இருக்கும்போது அப்டேட்டடு போன் வேண்டும் என்பது செலவை நீட்டும் விஷயமாகும். வீட்டில் அனைவருக்குமே அலுவலக லேப்டாப் உள்ளபோது வீட்டில் பொதுவாக பெர்சனல் வேலைகளுக்கு ஒரு கம்ப்யூட்டர் போதும் என்று நினைத்தாலே போதும், செலவு குறையும்.

உங்களிடம் உள்ள பொருட்களை ஒரு விடுமுறைநாளில் பட்டியலிடுங்கள். அதற்காக நீங்கள் செல்வழித்த தொகையைப் பாருங்கள். அதனைத் தற்போது விற்றால் எவ்வளவு கிடைக்கும் என்று பாருங்கள். உங்கள் முதலீட்டில் 50% கூட உங்களுக்குத் திரும்பக் கிடைக்காது. அதனால் இப்போதிலிருந்து நீங்கள் வாங்கும் பொருளை வாங்குவதற்கு முன்பு ஒரு நிமிடம் யோசியுங்கள். இது அவசியமா, இல்லை இந்தப் பொருள் சந்தையில் பிரபலமாக உள்ளதே என்று வாங்காமல் தேவைப்பட்டால் மட்டும் வாங்குங்கள்.



உதாரணமாக, மேற்கண்ட அட்டவணையை கவனியுங்கள். இதில் ஒரு 1 லட்சம் ரூபாய் பொருட்கள் ஓரளவுக்குப் பயனளிக்கின்றன எனில், மீதமுள்ள 3 லட்சம் ரூபாயை நீங்கள் செலவழித்துள் ளீர்கள். இந்தத் தொகையை 8% வருமானம் தரும் ஒரு வங்கி முதலீட்டில் முதலீடு செய்திருந்தால், இரண்டு ஆண்டுகளில் உங்களால் ஏறக்குறைய 50,000 ரூபாயை வருமானமாகப் பெற்றிருக்க முடியும். இது உங்கள் மகனின் ஒரு செமஸ்டர் கட்டணமாகவோ அல்லது உங்களது ஆறு மாத மளிகைப் பொருட்களுக்கான செலவையோ ஈடுகட்டி இருக்கும்.

தேவையில்லாத செலவைக் குறைத்தால், தேவையில்லாத பொருட்கள் நீங்கி உங்களுக்குத் தேவைப்படும் பணம் உங்களிடம் நிறைய இருக்கும்.

படம்: தே.தீட்ஷித்.

ச.ஸ்ரீராம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka