புதன், 18 மார்ச், 2015

தாய், சேய் இறப்பை தடுக்க மருத்துவ நிபுணர்குழு ஆய்வு கலெக்டர் தகவல்

பிரசவத்தின்போது தாய், சேய் இறப்பை தடுக்க மருத்துவ நிபுணர்குழு நியமிக்கப்பட்டுள்ளது என திருவாரூர் கலெக்டர் மதிவாணன் கூறினார்.

கர்ப்பிணி பெண்

திருவாரூர் மாவட்டம் கோம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. விவசாய தொழிலாளி. இவருடைய மனைவி பரமேஸ்வரி (வயது 25). 8 மாத கர்ப்பிணி பெண்ணான பரமேஸ்வரி, ரத்த சோகை நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டார்.

பிரசவம் ஆக 2 மாதங்கள் இருந்த நிலையில் ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட பரமேஸ்வரியை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மகப்பேறு மருத்துவர் சுமதி தலைமையில் மருத்துவக்குழுவினர் பரமேஸ்வரியை பரிசோதனை செய்தனர். அப்போது பரமேஸ்வரிக்கு ரத்த சோகையுடன், ரத்த கொதிப்பு மற்றும் தட்டை அணுக்கள் குறைவாக இருப்பது தெரியவந்தது. ரத்தம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்த பரமேஸ்வரிக்கு வலிப்பு வரலாம் என டாக்டர்கள் கருதினர். இதனிடையே உப்பு நீர்கோர்த்து பரமேஸ்வரி உடல் வீக்கம் அடைந்தார்.

ஆபத்தான நிலையில் பிரசவம்

மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த பரமேஸ்வரிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை முறையில் பிரசவம் பார்க்க டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி அவருக்கு ரத்த நாளங்களில் செயற்கை குழாய் பொருத்தி பிளாஸ்மா திரவம் உட்செலுத்தப்பட்டது. இதையடுத்து அறுவை சிகிச்சைக்காக முழு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. டாக்டர்கள் சுமதி, சுகன்யா தலைமையில் மருத்துவக்குழுவினர் அறுவை சிகிச்சை செய்து 1800 கிராம் எடை கொண்ட பெண் குழந்தையை வெளியே எடுத்தனர். அதனை தொடர்ந்து 17 பாட்டில் ரத்தம், 30 பாட்டில் பிளாஸ்மா, 10 பாட்டில் தட்டை அணுக்கள் மற்றும் ரத்தம் உறைவதற்கு ரூ.42 ஆயிரம் மதிப்பிலான மருந்து பரமேஸ்வரிக்கு கொடுக்கப்பட்டது. இந்த சிகிச்சைகளுக்காக தொடர்ந்து 3 நாட்கள் செயற்கை சுவாசத்தில் இருந்த பரமேஸ்வரி தற்போது நலமுடன் உள்ளார். அவருடைய குழந்தையும் நலமுடன் உள்ளது.

கலெக்டர் நலம் விசாரிப்பு

ரத்தம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு நல்ல முறையில் பிரசவம் நடந்தது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று வந்து, பரமேஸ்வரியையும், அவருடைய குழந்தையையும் பார்த்து நலம் விசாரித்தார்.

அப்போது மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் இருந்தார்.

பின்னர் கலெக்டர் மதிவாணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ரத்தம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு இருந்த பெண்ணுக்கு திருவாரூர் மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் தலைமையில் மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்து பிரசவம் பார்த்துள்ளனர். இதனால் இப்போது தாயும், சேயும் நலத்துடன் உள்ளனர். இதே சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்தால் ரூ.3½ லட்சம் வரை செலவாகும். ஆனால் மருத்துவ கல்லூரியில் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ நிபுணர்களை நியமித்துள்ளது. தேவையான மருத்துவ வசதிகள் மருத்துவமனைகளில் செய்யப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் பிரசவத்தால் ஏற்படும் தாய், சேய் உயிரிழப்புகளை தடுக்க மருத்துவர்களை கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் பிரசவத்தில் ஏற்படும் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவ்வாறு கலெக்டர் கூறினார். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka