வெள்ளி, 6 மார்ச், 2015

திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிட மாற்றம்


திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் வியாழக்கிழமை தொடங்கி மார்ச் 31-ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறுகிறது.
தேர்வு மையங்களில் மின்விளக்கு, குடிநீர், கழிவறை வசதிகள், பறக்கும்படைகள் அமைப்பது, வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்வது உள்ளிட்ட ஏற்பாடுகளை முறையாக செய்ய மாநில பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டது.
இதனடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் பிப். 28-ம் தேதி பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் கார்மேகம் ஆய்வு நடத்தியபோது, அடிப்படை வசதிகள் மற்றும் நிர்வாக குறைபாடுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறைக்கு அறிக்கை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்ட நடவடிக்கையில், திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் லெ. நிர்மலா, திருவாரூர் மாவட்ட அனைவருக்கும் கல்வித் திட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், மாவட்ட அனைவருக்கும் கல்வித் திட்ட அலுவலராக இருந்த ஏ. மணி, திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டக் கல்வி அலுவலராக இருந்த ஜெ. அருள்மணி கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் கார்மேகம் தெரிவித்தது:
பிளஸ் 2 பொதுத் தேர்வு குறித்து மாவட்டத்தில் மேற்கொண்ட ஆய்வில் குறைகள் ஏதுமில்லை. மாவட்ட கல்வி அலுவலர்கள் மாற்றத்துக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
தமிழக அரசு திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை மாற்றம் செய்துள்ளது. கட்டாய மருத்துவ விடுப்பில் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் மாவட்டக் கல்வி அலுவலர் ஜெ. அருள்மணி இருதய கோளாறு காரணமாக அவரே விரும்பி விடுப்பில் உள்ளார்.
தேர்வு மையங்கள் குறித்தோ அடிப்படை வசதிகள் குறித்து எவ்வித அறிக்கையும் அரசுக்கு நான் அனுப்பவில்லை என்றார் கார்மேகம்.
இதுகுறித்து விடுப்பில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் ஜெ. அருள்மணி தெரிவித்தது:
பள்ளிக் கல்வி இணை இயக்குநர் கார்மேகம் கடந்த வாரம் ஆய்வுக்கு வந்தபோது உடல் நிலை சரியில்லாமல் இருந்து வருகிறேன் என்று கூறினேன். என்னுடைய நிலையை பார்த்து விடுப்பு தேவையெனில் எடுத்துக்கொண்டு பிறகு பணிக்கு திரும்புங்கள் என்றார். அதன் பிறகு மார்ச் 3 முதல் 25-ம் தேதி வரை நானே விரும்பி விடுப்பு எடுத்துள்ளேன். என்னை யாரும் கட்டாய மருத்துவ விடுப்பில் அனுப்பவில்லை. தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது என்றார் அருள்மணி.
இந்நிலையில், விடுப்பில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் பணியிடத்தில் சேரன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கு. மாந்தரையன் நியமிக்கப்பட்டு, பிளஸ் 2 பொதுத் தேர்வு பணிகளை கவனித்து வருகிறார்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka