திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே பெட்ரோல் பங்க உரிமையாளர் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முத்துப்பேட்டை காவல் சரகம் உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வி.பி.எஸ். வெங்கடேசன் (27). பொறியியல் பட்டதாரியான இவர் பா.ஜ.க. கிளை நிர்வாகியாக இருந்து வந்தார். இவர் அதே ஊரில் கிழக்கு கடற்கரை சாலையில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார்.
திங்கள்கிழமை இரவு வெங்கடேசன் பெட்ரோல் பங்கில் தனியாக இருந்தபோது சித்தமல்லி ப. விஜி. தோலி கிராமத்தைச் சேர்ந்த அ. மருதுபாண்டியன் மற்றும் அடையாளம் தெரியாத இருவர் என நான்கு பேரால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் இரு சக்கர வாகனத்தில் தப்பி விட்டனர்.
நண்பரின் காதலுக்கு உதவியதால் இவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், முத்துப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் (கூ.பொ) கணேசன் மேற்பார்வையில், நன்னிலம் காவல் ஆய்வாளர் பெரியசாமி, திருவாரூர் நகர காவல் ஆய்வாளர் ராஜா, முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக