செவ்வாய், 26 ஜனவரி, 2016

திருத்துறைபூண்டியை சேர்ந்த மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக தாயார் புகார்

சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதி மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த மாணவி பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாயார் புகார் கூறி உள்ளார்.

மாணவி சாவு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியை சேர்ந்தவர் முத்தையா. இவர் அதே பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பெயர் பார்வதி. இவர்களுடைய மகள் சண்முக பிரீத்தா (வயது 19) சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 2–ம் ஆண்டு (செராமிக்) படித்து வந்தார்.

நேற்றுமுன்தினம் இரவு மாணவி சண்முக பிரீத்தா, விடுதி கட்டிட மாடியில் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் கீழே விழுந்தார். இதையடுத்து பதறிப்போன சக மாணவிகள், படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சண்முக பிரீத்தாவை மீட்டு அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மாணவி பரிதாபமாக உயிர் இழந்தார்.

காரணம் என்ன?
இதற்கிடையில் மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தகவல் பரவியது. செல்போனில் பேசிக்கொண்டிருக்கும் போது கால் தவறி கீழே விழுந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதனால் இந்த சம்பவம் தொடர்பாக பரபரப்பு ஏற்பட்டது. உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்துக்கு மாணவி சண்முக பிரீத்தாவின் உடல் அனுப்பப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை மாணவியின் பெற்றோர் முத்தையா–பார்வதி மற்றும் உறவினர்கள் அனைவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தின் முன் குவிந்தனர். சக மாணவிகளும் வந்திருந்தனர்.

கதறி அழுத தாயார்
அப்போது மாணவி சண்முக பிரீத்தாவை நினைத்து அவரது தாயார் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. ‘எனது மகள் சாகக்கூடியவள் அல்ல. அவளை கொன்றுவிட்டார்கள். என்ன நடந்தது என்பது தெரியவில்லை’, என்று கூறியபடியே கதறி அழுதார். இதுகுறித்து பார்வதி நிருபர்களிடம் கூறியதாவது:–

நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.30 மணிக்கு எனது மகள் எங்களுடன் செல்போனில் பேசினாள். குடியரசு தின விடுமுறைக்கு ஊருக்கு வருவதாகவும் கூறினாள். மிகவும் மகிழ்ச்சியாகத்தான் பேசினாள். கல்லூரியில் நடந்தவை பற்றி ஆர்வத்துடன் கூறினார். திடீரென்று இரவு 11 மணிக்கு எனது மகள் மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டதாக அவளுடைய தோழிகள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். எங்கள் இதயம் சுக்குநூறாக உடைந்து விட்டது.

மர்மம்
உடனடியாக சென்னைக்கு கிளம்பி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வந்தோம். ஆனால் உடனடியாக எங்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. கடுமையான போராட்டத்துக்கு பிறகு நானும், எனது கணவர் மற்றும் உறவினர்கள் உள்ளே சென்றோம். அங்கு எனது மகள் விழுந்ததாக சொல்லப்படும் இடத்தில் எந்தவித ரத்தக்கறையுமே காணப்படவில்லை. அந்த இடம் சுத்தமாக இருந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட தனது செல்போன் கீழே விழுந்து உடைந்து விட்டதாக என்னிடம் கூறி அவள் அழுதாள். நான் அப்போதே நினைத்தேன். ஏதாவது சண்டையில் செல்போன் உடைந்திருக்குமோ? என்று நான் சந்தேகப்பட்டேன். நிச்சயமாக எனது மகள் சாவில் மர்மம் உள்ளது. ஏதோ நடந்திருக்கிறது? எனது மகள் சாவு குறித்து ஏதேதோ பேசப்படுகிறது. என்னால் அதை தாங்கமுடியவில்லை.

சதி
இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசாரிடம் புகார் கொடுத்திருக்கிறேன். ஆனால் இது தற்கொலை அல்ல. செல்போன் பேசிக் கொண்டிருந்தபோது, கவனம் சிதறி, கால் தவறி கீழே விழுந்திருக்கலாம் என்று போலீசார் எங்களிடம் தெரிவித்தனர். இந்த பதிலில் நிச்சயம் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எனது மகள் நன்றாக படிக்கக்கூடியவள். பிளஸ்–2 பொதுத்தேர்வில் 1,144 மார்க் வாங்கியவளுக்கு, எப்படி கவனம் சிதறியிருக்க முடியும்?

எனது மகள் சாவு குறித்து அவளுடைய தோழிகள், எதையுமே பேச மறுக்கிறார்கள். எதையோ மறைக்கிறார்கள். ஏதோ நடந்துள்ளது. நிச்சயம் எனது மகள் தற்கொலை செய்திருக்க மாட்டாள். ஏதோ பிரச்சினை இதற்கு பின்னால் உள்ளது. விடுதி வார்டனுக்கு கூட தெரியாமல் எப்படி எனது மகளை அடையாறில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்க முடியும்? இதில் மிகப்பெரிய சதி நடந்துள்ளது. எனது மகளின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில் நேற்று பிறபகல் மாணவி சண்முக பிரீத்தாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், ‘‘மாணவி சண்முக பிரீத்தா விடுதி கட்டிட மாடியில் நின்று செல்போனில் பேசியதாகவும், திடீரென்று சத்தம் கேட்டு அங்கு ஓடியபோது சண்முக பிரீத்தா காயத்துடன் கீழே விழுந்து கிடந்தார் என்று சக மாணவிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஏதாவது சண்டை பிரச்சினை காரணமாக இருக்கலாமா? அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா? என்ற எல்லா கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றனர்.

கல்லூரி முதல்வர் விளக்கம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் நாராயணசாமி, ஏ.சி.டெக். கல்லூரி முதல்வர் சிவநேசன் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் மாணவி சண்முக பிரீத்தா சாவு குறித்து கூறியதாவது:–

24–ந்தேதி இரவு 10.40 மணிக்கு மாணவி சண்முகப்பிரீத்தா நந்தியா விடுதியில் 2–வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதை விடுதி ஆலோசகர் மற்றும் துணை வார்டன் ஆகியோர் தெரிவித்தனர். பிறகு அந்த மாணவியை அடையாறில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். ஆனால் அந்த மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.

அந்த மாணவி நன்றாக படிக்கக்கூடியவர். இதுவரை மதிப்பெண் 10–க்கு 7.8 வைத்திருக்கிறார். மாணவி விழுந்த மாடியில் கைப்பிடி சுவர் 3½ அடி உயரம் கட்டப்பட்டு இருந்தது. அவர் 25–ந்தேதி இரவு விடுமுறையில் வீட்டுக்கு செல்வதற்காக விடுதியில் அனுமதி பெற்றுள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்



Tks

www.dailythanthi.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka