சனி, 30 ஏப்ரல், 2016

காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு தி.மு.க. துரோகம் செய்தது திருவாரூர் பிரசாரத்தில் வைகோ குற்றச்சாட்டு

காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு தி.மு.க. துரோகம் செய்தது என திருவாரூர் பிரசாரத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.

வைகோ பிரசாரம்

திருவாரூரில் தே.மு.தி.க., த.மா.கா., மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வைகோ நேற்று பிரசாரம் செய்தார். முன்னதாக அவர் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பிரசாரம் செய்தார். அதை முடித்து கொண்டு பிரசார வேனில் திருவாரூருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திருவாரூர் எல்லையான நாலுகால் மண்டபம் அருகே தி.மு.க.வினர் வைகோவுக்கு கருப்பு கொடி காட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து வைகோ திருவாரூர் பஸ் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் மாசிலாமணியை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 65 சதவீதம் வாக்காளர்கள் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. அவர்கள் முழுமையாக வாக்களித்து, புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தற்போதைய தேர்தலில் வெற்றியை பெற்று தருவது 1½ கோடி புதிய வாக்காளர்கள் தான். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணம் தருவதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து விட்டன. அந்த பாவ காசை வாங்காதீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவோம். மதுவை ஒழிப்போம். கல்வி கடன்களை அரசே ஏற்கும். வர்த்தகர்களை பாதிக்கும் உலக வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்ப்போம். லோக் ஆயுக்தாவை கொண்டு வருவோம். மீத்தேன் திட்டத்தை முற்றிலும் தடுப்போம்.

காவிரி பிரச்சினை

கருணாநிதியை பற்றி பேசியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுவிட்டேன். ஆனாலும் எனக்கு எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதை நான் பொறுமையாக இருந்து வேடிக்கை பார்த்தேன், எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு தி.மு.க. துரோகம் செய்தது. மீத்தேன் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது அன்றைய துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். முல்லை பெரியாறு பிரச்சினையில் தி.மு.க. போராடவில்லை. மதுரையில் ஜல்லிக்கட்டுவிற்கு போராட்டம் அறிவித்துவிட்டு கடைசியில் மத்திய அரசுக்கு பயந்து வாபஸ் வாங்கியது தி.மு.க.. இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

கருணாநிதி ஒரு பேட்டியில் 3-வது அணி எங்கே இருக்கிறது என கேட்டார். ஆனால் ஜெயலலிதாவோ தி.மு.க. தான் 3-வது அணி என கூறி உள்ளார். எனவே திருவாரூர் மக்களே ஒரு முறை வாக்களித்து வெற்றி பெற செய்தீர்கள். அந்த தவறை மீண்டும் செய்து விடாதீர்கள். தி.மு.க., அ.தி.மு.கவை தூக்கி எறியுங்கள். நமது வேட்பாளர் மாசிலாமணியை வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு வைகோ கூறினார்.

பிரசார நிகழ்ச்சியில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நாகராஜன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் பாலாஜி, த.மா.கா. மாவட்ட தலைவர் குடவாசல் தினகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் வடிவழகன், செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலை மறியல்

பிரசார நிகழ்ச்சியை தொடர்ந்து மக்கள் நல கூட்டணியினர் வைகோவுக்கு கருப்பு கொடி காட்டிய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ம.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் ஆரூர்சீனுவாசன் தலைமையில் திருவாரூர் பஸ் நிலையத்தில் சாலை மறியல் செய்தனர். இதேபோல் நன்னிலம் அருகே உள்ள கொல்லுமாங்குடியில் மக்கள் நலக்கூட்டணியினர் வைகோவுக்கு கருப்பு கொடி காட்டப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka