ஞாயிறு, 1 மே, 2016

உப்புசத்தியாகிரக பாதயாத்திரை குழுவினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு


உப்பு சத்தியாக்கிரக 86-வது யாத்திரை குழுவினர் வேதாரண்யம் -அகஸ்தியம்பள்ளி செல்லும் வழியில் திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உப்புக்கு வரிகொடுக்க மாட்டோம் என பிரகடனம் செய்து இந்தியாவிலேயே தண்டியில் மகாத்மா காந்தி தலைமையிலும், திருச்சியில் மூதறிஞர் ராஜாஜி தலைமையிலும் தொடங்கி கல்லணை கோவிலூர், திருவையாறு, தஞ்சை, வடுவூர், மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, வாய்மேடு, தகட்டூர், வேதாரண்யம் வழியாக அகஸ்தியம்பள்ளியில் உப்பு காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது.

இதன் நினைவாக ஆண்டுதோறும் காந்திய சிந்தனையாளர்கள் ஏப்.29-இல் உப்புசத்தியாக்கிரக யாத்திரை நினைவை போற்றும் வகையில் காந்திய கொள்கை பாடல்களை இசைத்த வண்ணம் யாத்திரையை நடத்தி வருகின்றனர்.

நிகழாண்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள டி.எஸ்.எஸ். ராஜன் நினைவு ஸ்தூபியில் உப்புசத்தியாக்கிரக நினைவுக்கமிட்டி பொதுச் செயலர் தெ.செல்வகணபதி தலைமையில், யாத்திரை அமைப்பாளர் சிவா. சண்முகவடிவேல் மற்றும் நிர்வாகிகள் என்.ஆர். சத்தியமூர்த்தி, தகட்டூர் வே.கணேசன், ஏ.ஆர். ராஜராஜன் ஆகியோர் முன்னிலையில் தளபதி மாணிக்கம் துவக்கி வைக்க பேரணி மாலை திருத்துறைப்பூண்டி வந்தடைந்து பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து காந்திய கொள்கை பாடல்களை பாடினர்.

இந்தக் குழுவில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் பத்தூர் க.தெட்சணாமூர்த்தி, திருவலஞ்சுழி எஸ்.பி. தண்டாயுதபாணி, சாட்டியக்குடி ச.சம்பந்தன்பிள்ளை, மற்றும் காந்திய சிந்தனையாளர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பி.எழிலரசன், ரமேஷ், மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி மதியரசு ஆகியோர் தலைமையில் இக் குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

வாய்மேடு, தகட்டூர், வேதாரண்யம் வழியாக அகஸ்தியம்பள்ளியில் குமரி அனந்தன் தலைமையில் சனிக்கிழமை உப்பு அள்ளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka