ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

ஆகாயத் தாமரை செடிகளை சேவை மனப்பான்மையுடன் அகற்றி வரும் இளைஞர்கள்

முத்துப்பேட்டை சின்ன ஏரியில் படர்ந்துள்ள ஆகாயதாமரை செடிகளை அப்பகுதி இளைஞர்களே அகற்றி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி வரைபடத்தில் 100 குளங்கள் உள்ளன. தனியார் ஆக்கிரமிப்பால்  நீர்நிலைகள் படிப்படியாக குறைந்து, தற்பொழுது பேரூராட்சி பட்டியலில் 44 குளங்கள் மட்டுமே உள்ளது. அதுவும்  தனியார் ஆக்கிரமிப்பால் சுருங்கி குட்டையாகி மாறி 10க்கும் மேற்பட்ட குளங்கள்தான் மக்கள் கண்ணில் தென்படுகின்றன.

இந்நிலையில் தெற்குக்காட்டில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான சின்ன ஏரி மிகப்பெரிய பரபரப்பளவு கொண்ட ஒரு நீர் நிலையாகும். தற்பொழுது இந்த ஏரியைச் சுற்றி ஆக்கிரமிப்பு உள்ளதால், ஒரு சிறிய குளமாக காட்சியளிக்கிறது. அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் குளிக்கவும், குடிக்கவும் இதை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியை சேர்ந்த சிலர் இந்த சின்ன ஏரியில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுத்து சாகுபடி செய்கின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது இந்த சின்ன ஏரியில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து, ஏரியை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. இதை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் முன்வரவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி இளைஞர்கள் மாரிமுத்து, அன்னாசந்திரன், ராஜேஷ், சிவசூரியா, ஹரிஹரசுந்தர், கலையரசன், மணிகண்டன், அஜய், ஹரிஸ், அக்னி, பன்னீர், சிவபாலன், உத்ராபதி ஆகியோர் கடந்த ஒரு வாரமாக ஏரியில் இறங்கி மண்டிக்கிடக்கும் ஆகாயத் தாமரை செடிகளை சேவை மனப்பான்மையுடன் அகற்றி வருகின்றனர்.

இதுகுறித்து மாரிமுத்து கூறுகையில், இப்பகுதியை சேர்ந்த எங்களுக்கு நீராதாரமாக சின்ன ஏரி மட்டுமே உள்ளது. இதில் மட்டும் தான் தண்ணீர் இருக்கிறது. குளத்தை தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் குடிக்கவும், குளிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் நாங்களே முன்நின்று  ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி வருகிறோம் என்றார்.

அன்னாசந்திரன் கூறுகையில், இந்த சின்ன ஏரியின் ஒரு புறம் சித்தேரி குளத்திற்கும், மறுபுறம் சேற்றுக்குளத்துக்கும் வழி உள்ளது. தற்போது முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டு சாகுபடி நிலமாகவும், பிளாட்டுகளாகவும் மாறிவிட்டது. தமிழக அரசு இந்த சின்ன ஏரி ஆக்கிரமிப்புகைளை அகற்றி தூர்வாரி சுத்தம் செய்து எங்களுக்கு தர வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka