புதன், 13 ஏப்ரல், 2016

இந்த ஆண்டு இயல்புக்கு அதிகமாக பெய்யும் - இந்திய வானிலை துறை

புதுடெல்லி,

பருவ மழை, இந்த ஆண்டு இயல்புக்கு அதிகமாக பெய்யும் என இந்திய வானிலை துறை கணித்துள்ளது.

எதிர்பார்ப்பு
ஒவ்வொரு ஆண்டும் ‘பருவ மழை எப்படி இருக்குமோ?’ என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் மட்டும் அல்ல, பொதுமக்களிடமும் இருக்கிறது. அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக, நாடு தொடர் வறட்சியை சந்தித்து வந்திருப்பதால் இந்த ஆண்டு எப்படி இருக்குமோ என்ற அச்ச உணர்வு விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீத பங்களிப்பு, விவசாயம் மூலம்தான் வருகிறது. மக்கள் தொகையில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் விவசாயம் மூலம்தான் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். 40 சதவீத சாகுபடி பரப்பளவு நீர்ப்பாசத்தின்கீழ் வருகிறது என்பதால் பெரும்பாலான மக்கள், பருவ மழையை நம்பி உள்ளனர்.

வறட்சி
2015–2016 பயிர் ஆண்டில் (ஜூலை–ஜூன்) பருவ மழை பற்றாக்குறை காரணமாக 10 மாநிலங்கள் வறட்சி மாநிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.10 ஆயிரம் கோடி வழங்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.

இத்தகைய சூழலில் இந்த ஆண்டில் பருவ மழை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு துறை கணித்து உள்ளது.

இயல்பை விட அதிகம்
அதுபற்றி இந்திய வானிலை ஆய்வுத்துறையின் இயக்குனர் லட்சுமன் சிங் ரத்தோர், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்த ஆண்டு பருவ மழையின் நீண்ட கால சராசரி (எல்.பி.ஏ.) 106 சதவீதம் ஆக இருக்கும். அதில் 94 சதவீதம் மழை பெய்வதற்கு, வாய்ப்பு உள்ளது. இது இயல்பை விட அதிக அளவாகும். மொத்தத்தில் பார்த்தீர்களேயானால், நாடு முழுவதும் பருவ மழை நியாயமான பங்கீடாக அமையும். அதாவது பரவலாக நன்றாக இருக்கும்.

தமிழ்நாட்டில் சற்றே குறைவு
ஆனால் வட கிழக்கு இந்தியா, தென் கிழக்கு இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டில் இயல்பை விட பருவமழை சற்றே குறைவாக இருக்கும்.

வறட்சியால் தவிக்கிற மராட்டிய மாநிலத்தின் மராத்வாடா பகுதியில் நல்ல மழை பெய்யும். மேற்கு கடலோர பகுதிகளிலும், மத்திய மண்டல பகுதிகளிலும் பருவ மழை நன்றாக பெய்யும். சில இடங்களில் மழை மிக அதிகமாக இருக்கும்.

எப்போது இயல்பை விட அதிகளவில் மழை இருக்கிறதோ, அப்போது பலத்த மழை பெய்யவும் வாய்ப்பு உண்டு. ஆனால் அதை பிராந்திய அளவில்தான் கணிக்க முடியும். ஆனால் நாம் அத்தகைய நிலைமைக்கு தயாராக இருக்க வேண்டும்.

மழை பெய்யும் விதம் குறித்த தகவல்களுடன்கூடிய இரண்டாவது கணிப்பை ஜூன் மாதம் வெளியிடுவோம்.

எது குறைவு, எது கூடுதல்?
எல்.பி.ஏ. என்னும் நீண்ட கால சராசரி 90 சதவீதத்துக்கும் கீழாக அமைந்தால் அது பற்றாக்குறை பருவ மழை ஆகும். 90 முதல் 104 சதவீதம் வரையில் பெய்தால் அது இயல்பானது.

104 முதல் 110 சதவீதம் வரையில் மழை பெய்தால் அது இயல்பை விட அதிகமானதாகும். இந்த ஆண்டு எல்.பி.ஏ. 106 சதவீதம் என்பதால் பருவ மழை, இயல்பை விட அதிகமாக இருக்கும்.

110 சதவீதத்தை விட அதிகமாக பெய்தால் அது அதிகப்படியான மழை ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆண்டு பருவ மழை இயல்பை விட அதிகமாக பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு துறை கணித்திருப்பது விவசாயிகளுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka