திங்கள், 25 ஏப்ரல், 2016

திருத்துறைப்பூண்டி டிரைவர் ராஜாராம் ஓட்டி வந்த பஸ் மின் கம்பத்தின் மீது மோதல் : 3 பேர் பலி

மயிலாடுதுறை அருகே மின்கம்பத்தின் மீது தனியார் பஸ் மோதியதில் 2 பெண் குழந்தைகள் உள்பட 3 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் 29 பேர் படுகாயம் அடைந்தனர்.

தனியார் பஸ்

சென்னையில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு 32 பயணிகளுடன் ஒரு தனியார் பஸ் தஞ்சை மாவட்டம் பேராவூரணியை நோக்கி வந்தது. திருத்துறைப்பூண்டியை சேர்ந்த டிரைவர் ராஜாராம் என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே வழுவூரை அடுத்த நெய்க்குப்பை என்ற இடத்தில் உள்ள ஒரு வளைவில் பஸ் வேகமாக திரும்பியது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் மின்கம்பம் சாய்ந்து கீழே விழுந்தது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ்சுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தகவல் அறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார், பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

3 பேர் பலி

விபத்தில் படுகாயம் அடைந்த மன்னார்குடியை சேர்ந்த விஜய் ஆண்டனியின் மகள்கள் ஜான்சிமீனா (வயது 4), 3 மாத குழந்தை சாதனாசுபஸ்ரீ, பட்டுக்கோட்டையை சேர்ந்த நாடிமுத்து (36) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். இந்த விபத்தில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த வினோத் என்பவரது இடதுகால் துண்டானது. மேலும் படுகாயம் அடைந்த 29 பேரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் பட்டுக்கோட்டையை சேர்ந்த விஜயா (45), பாலகுமார் (39), வினோதா (30), குமரன் (50), ஐஸ்வர்யா (25), சென்னையை சேர்ந்த பல்லவி (26), மன்னார்குடியை சேர்ந்த விவேகானந்தன் (37), திருத்துறைப்பூண்டியை சேர்ந்த வினோத் (26) ஆகிய 8 பேரை மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மயிலாடு துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பஸ் டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 2 பெண் குழந்தைகள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka