ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

பெண் மர்ம சாவு : தற்கொலை நாடகமாடிய அந்த பெண்ணின் மாமனார் கைது

கூத்தாநல்லூர் அருகே பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் அடித்து கொலை செய்யப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்டார் என்ற திடுக்கிடும் தகவல் அம்பலமாகி உள்ளது. தற்கொலை நாடகமாடிய அந்த பெண்ணின் மாமனாரை போலீசார் கைது செய்தனர்.

பெண் மர்ம சாவு

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வக்ராநல்லூர் கீழகண்ணுச்சாங்குடியை சேர்ந்தவர் தங்கையன் (வயது61). இவருடைய மகன் ரமேஷ். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மகாலட்சுமி (30). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. பூவிழிஸ்ரீ(4) என்ற மகள் உள்ளார். கடந்த 14-ந் தேதி மகாலட்சுமி அவருடைய வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து மகாலட்சுமியின் தம்பி மன்னார்குடி தேவேந்திரபுரத்தை சேர்ந்த இளையராஜா கூத்தாநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரில் தனது அக்கா சாவில் மர்மம் இருப்பதாக அவர் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மகாலட்சுமிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் வழக்கு தொடர்பாக மன்னார்குடி உதவி கலெக்டர் செல்வசுரபி விசாரணை நடத்தினார். இதில் தங்கையன் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதைதொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் மகாலட்சுமியின் சாவு தொடர்பாக இருந்து வந்த மர்மம் விலகி, குடும்ப தகராறில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட அவர் தூக்கில் தொங்கவிடப்பட்டார் என்ற திடுக்கிடும் தகவல் அம்பலமானது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

மாமனார் கைது

வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் ரமேஷ் அனுப்பும் பணத்தை மகாலட்சுமி தனது பெற்றோரிடம் கொடுத்தார். இதனால் மகாலட்சுமிக்கும், அவருடைய மாமனார் தங்கையனுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. கடந்த 14-ந் தேதி நடந்த தகராறில் ஆத்திரம் அடைந்த தங்கையன், மகாலட்சுமியை அடித்து கீழே தள்ளினார். இதில் மகாலட்சுமி சுவர் மீது மோதி கீழே விழுந்தார். அப்போது கழுத்து நெரிக்கப்பட்டதில் அவர் இறந்து விட்டார். இதைதொடர்ந்து மகாலட்சுமியின் பிணத்தை தூக்கில் தொங்க விட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டதாக தங்கையன் நாடகமாடியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்கை கொலை வழக்கமாக மாற்றம் செய்து, தங்கையனை கைது செய்து மன்னார்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதைதொடர்ந்து கோர்ட்டு உத்தரவின் பேரில் தங்கையன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka