புதன், 10 ஆகஸ்ட், 2016

குடும்ப அட்டைதாரர்கள் வாங்கும் பொருட்கள் விவரம் : செல்போனுக்கு குறுஞ்செய்தி


நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் வாங்கும் பொருட்கள் விவரம் குறித்து அவர்களது செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையாளர் கோபாலகிருஷ்ணன் கூறினார்.

 ஆய்வு கூட்டம்


 திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நியாயவிலை கடைகளில் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்துதல் தொடர்பான செயல்முறை விளக்கம் மற்றும் பொதுவினியோக திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் முன்னிலை வகித்தார். உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:–

 திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 713 நியாயவிலை கடைகளுக்கும் மின்னணு விற்பனை எந்திரங்கள வழங்கப்பட்டுள்ளன. நியாயவிலை கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து குடும்ப உறுப்பினர்களின் விவரம், செல்போன் எண், ஆதார் எண் மற்றும் கியாஸ் சிலிண்டர்கள் விவரங்களை விற்பனையாளர் பெற்று விற்பனை எந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும். நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் வாங்கும் பொருட்கள் விவரம் குறித்து அவர்களது செல்போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

 குடிமை பொருட்கள்


 இதனால் குடும்ப அட்டைகள் தவறான வகையில் பயன்படுத்துவது தடுக்கப்படுகிறது. மேலும் போலி குடும்ப அட்டைகள் கண்டறிய வழிவகை செய்யப்படுகிறது. தமிழக அரசின் வழிகாட்டுதலின்பேரில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு மாநிலத்தில் மாவட்ட வாரியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நியாயவிலை கடை விற்பனையாளர்கள் எந்திரத்தை கையாளும் முறைகளை அறிந்து நுகர்வோருக்கு முறையாக குடிமை பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.

 இவ்வாறு அவர் கூறினார்.

 கூட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி, உதவி கலெக்டர்கள் முத்துமீனாட்சி (திருவாரூர்), செல்வசுரபி (மன்னார்குடி), மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) அசோகன், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் (பொது வினியோக திட்டம்) ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka