செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

திருத்துறைப்பூண்டி, தொண்டி வழியாக மதுரைக்கு புதிய வழித்தடம் தொடங்கக் கோரிக்கை

நாகப்பட்டினத்தில் இருந்து  கிழக்கு கடற்கரை சாலையில் வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, தொண்டி, காளையார்கோவில், சிவகங்கை வழியாக மதுரைக்கு பதிய வழித்தடம் தொடக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 நாகையில் இருந்து திருவாரூர், தஞ்சாவூர். பதுக்கோட்டை, திருமயம், திருப்பத்தூர், மேலூர் வழியாக மதுரைக்கு (சுமார் 250 கி.மீ.) தினசரி அரசுப் போக்குவரத்துக் கழகம், நாகை, கும்பகோணம், காரைக்குடி, மதுரை, திருச்சி கோட்டங்களின் சார்பிலும், அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பிலும் தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சாலையில் அதிக வாகனப் போக்குவரத்து காரணமாகவும், நாகையில் இருந்து தஞ்சைக்கு நான்குவழிச்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதன் காரணமாகவும், வாகனப் போக்குவரத்தில் மிகவும் சிக்கலான நிலை ஏற்படுகிறது. மேலும் குறித்த நேரத்தில் வாகனங்கள் செல்வதில் உத்தரவாதமில்லாத நிலை ஏற்படுகிறது.

 இதற்கு அடுத்தபடியாக மதுரையில் இருந்து திருப்பத்தூர், காரைக்குடி, அறந்தாங்கி,  பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, வேளாங்கண்ணி வழியாக சில வழித்தடங்களும்  இயக்கப்படுகிறது. இதுவும் ஏறத்தாழ 250 கி.மீ. தூரம்தான்.

 இதைக் கருத்தில் கொண்டு, நாகப்பட்டினத்தில் இருந்து, வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், கட்டுமாவடி, மீமிசல், தொண்டி வழியாக கிழக்கு கடற்கரை சாலை வழியாகச் சென்று, திருவாடானை, காளையார்கோவில், சிவகங்கை வழியாக மதுரைக்கு புதியவழித்தடம் தொடங்க வேண்டுமென பொதுமக்கள் விரும்புகின்றனர்.

தென்மாவட்டங்களில் இருந்து வேளாங்கண்ணி சர்ச், நாகூர் தர்ஹா, மற்றும் நவகிரக தலங்கள், சஷ்டியப்த பூர்த்தி நடைபெறும் திருக்கடையூர், வைத்தீஸ்வரன்கோயில், சிதம்பரம் உள்ளிட்ட ஊர்களுக்கு யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் தனியார் வாகனங்களில் வருபவர்கள் இந்த வழியையே விரும்புகின்றனர்.

இந்த வழித்தடத்தில் நாகப்பட்டினத்தில் இருந்து மதுரைக்கு 250 கி.மீ. தூரமே ஆகும்.  மேலும் போக்குவரத்து நெருக்கடியான சூழல் இல்லாத நிலை உள்ளதால் நாகையில் இருந்து திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை வழியாக போக்குரத்து நெருக்கடியில் சிக்கித்தவித்து கூடுதல் காலவிரயத்தைத் தவிர்க்கும்  வகையில் இந்த புதிய வழித்தடத்தில் மதுரைக்கு பேருந்தை இயக்க வேண்டுமென்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka