ஞாயிறு, 1 ஜனவரி, 2017

போலியாக சான்றிதழ் தயாரித்த கிராம நிர்வாக அலுவலர்– அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டியில் தாசில்தார் கையெழுத்துடன் போலியாக சான்றிதழ் தயாரித்த கிராம நிர்வாக அலுவலர்– அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

விவசாயி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேட்டுப்பாளையம் கீழச்சேரியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் விவசாயி. இவர் மன்னார்குடியில் உள்ள தனியார் சங்கமம் சிட்பண்ட் நிறுவனத்தில் சீட்டு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்குள்ள அலுவலர்கள் உரிய ஆவணங்கள் இருந்தால் சீட்டு பணம் தருவதாக கூறியுள்ளனர். இந்தநிலையில் பன்னீர்செல்வத்திடம் அரசு பஸ் டிரைவரும், சங்கமம் நிறுவனத்தில் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்த இளங்கோவன் என்பவர் சீட்டு பணம் பெறுவதற்கான ஆவணங்களை நான் தயார் செய்து தருகிறேன் எனக்கூறி பன்னீர் செல்வத்தை பனையூர் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக்கிடம் அழைத்துச் சென்றார். அப்போது கார்த்திக் சீட்டு பணம் பெறுவதற்கு 2 அரசு அலுவர்களின் ஊதியச்சான்று தேவைப்படுவதால் ரூ.9 ஆயிரம் கொடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

போலி முத்திரை
இதனையடுத்து கார்த்திக்கிடம் பன்னீர்செல்வம் ரூ.9 ஆயிரம் கொடுத்துள்ளார். அதைப்பெற்றுக்கொண்ட கார்த்திக் மற்றும் இளங்கோவன் சேர்ந்து போலியாக வருவாய் ஆய்வாளர் மற்றும் திருத்துறைப்பூண்டி தாசில்தார் முத்திரையை தயார் செய்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் 2 அரசு அலுவலர்களின் ஊதியச்சான்றை போலியாக தயார் செய்து. அதில் தாசில்தார் கையெழுத்து மற்றும் முத்திரையை இட்டு சான்றிதழ் தயார் செய்துள்ளனர். இந்த சான்றிதழை பன்னீர்செல்வத்திடம் வழங்கியுள்ளனர். இதை அவர் மன்னார்குடியில் உள்ள சங்கமம் சிட்பண்ட் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார். அந்த சான்றிதழில் தாசில்தார் முத்திரையில் கோபுரசீல் இல்லாததால் அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர். அந்த சான்றிதழை திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்திற்கு சரி பார்க்க அனுப்பிவைத்தனர். இதில் தாசில்தாரின் போலியான கையெழுத்தும், போலியான அலுவலக முத்திரையை பயன்படுத்தி சான்றிதழ் தயார் செய்து தெரியவந்தது.

கைது
இதுகுறித்து தாசில்தார் உதயகுமார் திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்–இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், ராஜ்குமார், வீரப்பரஞ்ஜோதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக், அரசு பஸ் டிரைவர் இளங்கோவன் ஆகியே 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தாசில்தார் கையெழுத்துடன் போலியாக சான்றிதழ் தயாரித்த மோசடி செய்த சம்பவத்தால் திருத்துறைப்பூண்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka