skip to main |
skip to sidebar
திருத்துறைப்பூண்டி- வரம்பியம் சாலை சேதத்தால் பொதுமக்கள் அவதி
திருத்துறைப்பூண்டி, : திருத்துறைப்பூண்டி- வரம்பியம் சாலையை விரைந்து சீரமைக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் ஊராட்சி தலைவர் தெரிவித்தார்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வேளூர் பாலத்திலிருந்து வரம்பியத்துக்கு செல்லும் சாலை இரண்டரை கிலோமீட்டர் தூரம் மிகவும் சேதமடைந்துள்ளது. இந்த சாலையில் வரம்பியத்திலிருந்து வரும் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். தார்ச்சாலை அமைத்து 4 ஆண்டுகளுக்குள் சேதமடைந்துள்ளதால் மினிபஸ் கூட போக முடியவில்லை. இதனால் சாலையை விரைவில் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் ஊராட்சி தலைவர் ஜோதிபாசு கூறுகையில், வரம்பியம் ஊராட்சியில் 5,000 பேர் வசித்து வருகின்றனர். திருத்துறைப்பூண்டி பகுதிக்கு பள்ளி, கல்லூரிக்கும் திருவாரூர் கல்லூரி, கொற்கை பாலிடெக்னிக் கல்லூரிக்கு 500க்கு மேற்பட்ட மாணவர்கள் சென்று வருகின்றனர். இதுமட்டுமின்றி பள்ளங்கோயிலில் உள்ள பள்ளிக்கும் பெரும்பாலான மாணவர்கள் சென்று வருகின்றனர். வரம்பியம் சாலை தற்போது சேதமடைந்து நடந்துகூட செல்ல முடியாமல் உள்ளது. சாலை பழுதால் திருத்துறைப்பூண்டியிலிருந்து வரம்பியம், தானந்தாங்கி, பள்ளங்கோயில் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு மினி பேருந்து செல்கின்றன. சாலை பழுதடைந்ததால் மினி பேருந்தும் இயக்குவது கிடையாது. போராட்டம் நடத்தி அதன்பிறகு ஒரு சில பேருந்துகள் சென்று வருகின்றன. எனவே சேதமடைந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க வேண்டும், சாலை பணியை விரைந்து சீரமைக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார். ஓய்வுபெற்ற டிஎன்சிஎஸ்சி துணை மேலாளர் வரம்பியம் ராஜேந்திரன் கூறுகையில், வரம்பியம் சாலை சேதமடைந்துள்ளதால் இந்த சாலை வழியாக செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். சாலை பழுதால் மினி பேருந்தும் போகாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நிரந்தரமாக தார்ச்சாலை அமைப்பதற்கு முன்பாக தற்காலிகமாக பள்ளம், படுகுழிகளை சீரமைக்க வேண்டும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக