புதன், 5 ஏப்ரல், 2017

விவசாயிகளுக்கு ஆதரவாக திருத்துறைப்பூண்டியில் காங்கிரஸ் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி,

விவசாயிகளுக்கு அரசு அறிவித்த நிவாரண தொகை வழங்கவேண்டும். விவசாயிகள் வங்கியில் பெற்ற கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக திருத்துறைப்பூண்டியில் காங்கிரஸ் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகர தலைவர் எழிலரசன் தலைமை தாங்கினார். மாநிலபொதுக்குழு உறுப்பினர் சங்கரவடிவேல், மாவட்ட பொதுச்செயலாளர் ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது யாசின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் பாஸ்கர் வரவேற்றார். இதில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி தலைவர் தாஹிர், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் இளங்கோவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பையன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரசார் கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட பார்வையாளராக பொதுச்செயலாளர் அன்பு.வீரமணி, முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் குகநாதன், வெங்கடேசன், நகர துணைத்தலைவர் பழக்கடை சண்முகம், முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் தல.கோவிந்தராஜ், ஐ.என்.யு.சி. மாநில பொதுச்செயலாளர் என்.துரைராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், முத்துப்பேட்டை வட்டார செயலாளர் ஆனந்தரெட்டி, இளைஞர் காங்கிரசை சேர்ந்த ரோஜர் குமார், மணலி பிரகாஷ், காளிதாஸ், புருஷோத்தமன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் நகரச்செயலாளர் சிவராமன் நன்றி கூறினார்.

வருவாய்த்துறை அலுவலர் சங்கம்

இதேபோல திருத்துறைப்பூண்டியில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் வட்டச்செயலாளர் குணசீலன் தலைமையில் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் மதியழகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோக், வட்ட பொருளாளர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்



கோட்டூர் ஒன்றியம்,பெருகவாழ்ந்தான் ஊராட்சியில் காந்தாரி,பாம்புகனி, இடச்சிமூலை,மறவாதி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பெருகவாழ்ந்தான் ஊராட்சி பொதுமக்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பெரியக்கோட்டை கூட்டுகுடிநீர்திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. தற்போது பெருகவாழ்ந்தான் கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த குடிநீரில் உப்பு தன்மை அதிகம் உள்ளதால் பொதுமக்கள் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பெருகவாழ்ந்தானிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கருணாவூர் கிராமத்திற்கு வரும் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தில் இணைத்து பெருகவாழ்ந்தான் கிராமத்திற்குகுடிநீர்வழங்க வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களிடம் மனுகொடுத்து கடந்த 10 ஆண்டுகளாக சாலைமறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் கடும் வறட்சியின் காரணமாக பெருகவாழ்ந்தான் பகுதியில் ஆழ்குழாய் கிணற்றிலும், கைபம்புகளிலும் தண்ணீர் வருவதில்லை. இதனால் பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே திருவாரூர் மாவட்ட கலெக்டர் உடனே பெருகவாழ்ந்தான் பகுதி மக்களை சந்தித்து குடிநீர்தட்டுபாட்டை போக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கவேண்டும். தினமும் வேன் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். பாமணி ஆற்றுப்படுகையிலிருந்து ஆழ்குழாய் கிணறு அமைத்துகுடிநீர் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பெருகவாழ்ந்தான் கடைவீதியில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர், கோட்டூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் வெங்கடேஸ்வரர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடுஏற்பட்டதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இதனால் மன்னார்குடி -முத்துப்பேட்டை சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செவ்வாய், 3 ஜனவரி, 2017

கன்றுக்குட்டிக்கு 2 பேர் உரிமை கொண்டாடியதால் ரத்த பரிசோதனை

முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டை அருகே ஒரு கன்றுக்குட்டிக்கு 2 பேர் உரிமை கொண்டாடியதால் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ரத்த பரிசோதனையில் கண்டறிய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தகராறு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை தர்கா பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவர் தனது வீட்டில் ஏராளமான மாடுகளை வளர்த்து வருகிறார். இவருடைய பசு மாடு ஒன்று கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கன்றுக்குட்டி ஈன்றது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 27-ந் தேதி ஜாம்புவானோடை தெற்கு தெருவை சேர்ந்த ராஜரெத்தினம் என்பவர் மதியழகன் வீட்டிற்கு சென்றார். அப்போது அவர் அங்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த கன்றுக்குட்டியை பார்த்து “தனக்கு சொந்தமான கன்றுக்குட்டி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டது. இது தான் தனக்கு சொந்தமான கன்றுக்குட்டி“ என்று கூறியுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் முத்துப்பேட்டை போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். அதன் பேரில் 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

ரத்த பரிசோதனை

இதையடுத்து, கன்றுக்குட்டியையும், 2 பேரின் பசு மாடுகளையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரும்படியும், எந்த பசுவுடன் கன்றுக்குட்டி செல்கிறதோ அந்த பசுமாட்டின் உரிமையாளருக்கே அந்த கன்றுக்குட்டி சொந்தம் என்று தெரிவித்தனர். இதற்கு உடன்பட்ட அவர்கள் பசுமாடுகளையும், கன்றுக்குட்டியையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அப்போது மதியழகனுக்கு சொந்தமான பசுவுடன் கன்றுக்குட்டி சென்றது. இதை தொடர்ந்து மதியழகனிடம் கன்றுக்குட்டி ஒப்படைக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ராஜரெத்தினம் தரப்பினர், நேற்றுமுன்தினம் காலை மதியழகன் வீட்டிற்கு சென்று கன்றுக்குட்டியை தூக்கி சென்றதாக தெரிகிறது. இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் நிலை உருவானது.

இதுகுறித்து மதியழகன் மீண்டும் முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரில் அத்துமீறி எனது வீட்டில் புகுந்த ராஜரெத்தினம் தரப்பினர், தன்னிடம் தகராறு செய்து கன்றுக்குட்டியை தூக்கி சென்று விட்டதாக கூறியிருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் கன்றுக்குட்டியையும், பசுவையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். மேலும் கால்நடை மருத்துவக்குழுவினரால் கன்றுக்குட்டிக்குரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்து கண்டறிய போலீசார் முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

22 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை : மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன்

திருவாரூர், 

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 22 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் தெரிவித்தார்.


பேட்டி

திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுத்திட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 189 திருட்டு, 37 வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. இதில் 75 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. முன்விரோதம் காரணமாக 5 கொலை முயற்சி மற்றும் 20 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் சாதி ரீதியான கொலை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. காயம் அடைந்ததாக 408 வழக்குகள் மற்றும் வாகன விபத்து சம்பந்தமாக 176 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிக விபத்துகள் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

22 பேர் மீது குண்டர் சட்டம்

விபத்தில்லா மாவட்டமாக மாற்றிட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தொடர் குற்ற செயலில் ஈடுபட்ட 22 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரச்சினைகளுக்காக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் கனிவுடன் விசாரித்து மேல் நடவடிக்கைக்கு உரிய வழிகாட்டுதல் செய்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை கண்காணிக்க 911 இடங்களில் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 288 இடங்கள் கண்டறியப்பட்டு கேமிரா பொருத்தப்பட உள்ளன. பொதுமக்கள் குற்றம் சம்பவங்களை உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க தொடங்கப்பட்ட ஹலோ போலீஸ் என்ற பிரிவுக்கு 622 அழைப்புகள் வந்துள்ளன. அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின்போது தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், பிரேமா ஆகியோர் உடன் இருந்தனர். 

திங்கள், 2 ஜனவரி, 2017

திருத்துறைப்பூண்டி- வரம்பியம் சாலை சேதத்தால் பொதுமக்கள் அவதி

திருத்துறைப்பூண்டி, : திருத்துறைப்பூண்டி- வரம்பியம் சாலையை விரைந்து சீரமைக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் ஊராட்சி தலைவர் தெரிவித்தார்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வேளூர் பாலத்திலிருந்து வரம்பியத்துக்கு செல்லும் சாலை இரண்டரை கிலோமீட்டர் தூரம் மிகவும் சேதமடைந்துள்ளது. இந்த சாலையில் வரம்பியத்திலிருந்து வரும் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். தார்ச்சாலை அமைத்து 4 ஆண்டுகளுக்குள் சேதமடைந்துள்ளதால் மினிபஸ் கூட போக முடியவில்லை. இதனால் சாலையை விரைவில் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் ஊராட்சி தலைவர் ஜோதிபாசு கூறுகையில், வரம்பியம் ஊராட்சியில் 5,000 பேர் வசித்து வருகின்றனர். திருத்துறைப்பூண்டி பகுதிக்கு பள்ளி, கல்லூரிக்கும் திருவாரூர் கல்லூரி, கொற்கை பாலிடெக்னிக் கல்லூரிக்கு 500க்கு மேற்பட்ட மாணவர்கள் சென்று வருகின்றனர். இதுமட்டுமின்றி பள்ளங்கோயிலில் உள்ள பள்ளிக்கும் பெரும்பாலான மாணவர்கள் சென்று வருகின்றனர். வரம்பியம் சாலை தற்போது சேதமடைந்து நடந்துகூட செல்ல முடியாமல் உள்ளது. சாலை பழுதால் திருத்துறைப்பூண்டியிலிருந்து வரம்பியம், தானந்தாங்கி, பள்ளங்கோயில் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு மினி பேருந்து செல்கின்றன. சாலை பழுதடைந்ததால் மினி பேருந்தும் இயக்குவது கிடையாது. போராட்டம் நடத்தி அதன்பிறகு ஒரு சில பேருந்துகள் சென்று வருகின்றன. எனவே சேதமடைந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க வேண்டும், சாலை பணியை விரைந்து சீரமைக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார். ஓய்வுபெற்ற டிஎன்சிஎஸ்சி துணை மேலாளர் வரம்பியம் ராஜேந்திரன் கூறுகையில், வரம்பியம் சாலை சேதமடைந்துள்ளதால் இந்த சாலை வழியாக செல்பவர்கள்  சிரமப்படுகின்றனர். சாலை பழுதால் மினி பேருந்தும் போகாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நிரந்தரமாக தார்ச்சாலை அமைப்பதற்கு முன்பாக தற்காலிகமாக பள்ளம், படுகுழிகளை சீரமைக்க வேண்டும் என்றார்.

பேருந்து ஓட்டுநரை தாக்கிய இளைஞர் கைது

மன்னார்குடி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
மன்னார்குடியிலிருந்து திருத்துறைப்பூண்டிக்கு கடந்த டிச. 29 ஆம் தேதி அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. இதில் கோட்டூரை அடுத்த கம்மங்குடி ஆர்ச்சை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரகாஷ் (22) படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தாராம்.
இதை அப்பேருந்தின் ஓட்டுநர், திருத்துறைப்பூண்டியை அடுத்த கீரக்களூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (38) கண்டித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், கிருஷ்ணமூர்த்தியை தாக்கினாராம். இதுகுறித்து கோட்டூர் போலீஸார் வழக்குப் பதிந்து பிரகாஷை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

கட்டிமேடு, அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு, அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் ஆதிரெங்கம் ஊராட்சியில் 7 நாள்கள் நடைபெற்றது. இதன் நிறைவு விழா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில்
ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் எம்.எஸ். பாலு தலைமை வகித்தார். கட்டிமேடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் எம்.இ.ஏ.ஆர். அப்துல் முனாப், இராம. தமிழ்ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதுகலை ஆசிரியர் செ. முகுந்தன் முகாம் அறிக்கையை சமர்ப்பித்து, பொதுமக்களுக்கு கண்தான விழிப்புணர்வு, இருதய நோய், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
நாட்டு நலப்பணித் திட்ட சான்றிதழ்களை கட்டிமேடு  இந்தியன் ஓவர்சிஸ் வங்கிக் கிளை மேலாளர் டி. நாகேந்திரன் வழங்கினார்.
திருவாருர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கு. பார்வதி பங்கேற்று, மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிப் பேசினார்.
திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை ஏ. குமுதம், பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருளாளர் வி. சின்னப்பா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
முதுகலை ஆசிரியர் சி. சந்திரசேகரன் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர் கே. பாலசுப்ரமணியன் நன்றி கூறினார். பட்டதாரி ஆசிரியர் வி. வடிவேல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

ஞாயிறு, 1 ஜனவரி, 2017

எலி மருந்தை தின்று பள்ளி மாணவி தற்கொலை முயற்சி பக்கத்து வீட்டுக்காரர் கைது

திருத்துறைப்பூண்டி, 
திருத்துறைப்பூண்டி அருகே பள்ளி மாணவி ஒருவர் எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக மாணவியின் பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
மாணவி தற்கொலை முயற்சி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மங்களநாயகிபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது45). விவசாயி. இவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் 11–ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளியில் இருந்து தாமதமாக வீட்டுக்கு வந்ததை கண்டித்ததாக தெரிகிறது. மேலும் அந்த மாணவியை மாரிமுத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த மாணவி, எலிமருந்தை (விஷம்) தின்று தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கைது
இதுகுறித்து மாணவி அளித்த புகாரின்பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலியாக சான்றிதழ் தயாரித்த கிராம நிர்வாக அலுவலர்– அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டியில் தாசில்தார் கையெழுத்துடன் போலியாக சான்றிதழ் தயாரித்த கிராம நிர்வாக அலுவலர்– அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

விவசாயி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேட்டுப்பாளையம் கீழச்சேரியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் விவசாயி. இவர் மன்னார்குடியில் உள்ள தனியார் சங்கமம் சிட்பண்ட் நிறுவனத்தில் சீட்டு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்குள்ள அலுவலர்கள் உரிய ஆவணங்கள் இருந்தால் சீட்டு பணம் தருவதாக கூறியுள்ளனர். இந்தநிலையில் பன்னீர்செல்வத்திடம் அரசு பஸ் டிரைவரும், சங்கமம் நிறுவனத்தில் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்த இளங்கோவன் என்பவர் சீட்டு பணம் பெறுவதற்கான ஆவணங்களை நான் தயார் செய்து தருகிறேன் எனக்கூறி பன்னீர் செல்வத்தை பனையூர் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக்கிடம் அழைத்துச் சென்றார். அப்போது கார்த்திக் சீட்டு பணம் பெறுவதற்கு 2 அரசு அலுவர்களின் ஊதியச்சான்று தேவைப்படுவதால் ரூ.9 ஆயிரம் கொடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

போலி முத்திரை
இதனையடுத்து கார்த்திக்கிடம் பன்னீர்செல்வம் ரூ.9 ஆயிரம் கொடுத்துள்ளார். அதைப்பெற்றுக்கொண்ட கார்த்திக் மற்றும் இளங்கோவன் சேர்ந்து போலியாக வருவாய் ஆய்வாளர் மற்றும் திருத்துறைப்பூண்டி தாசில்தார் முத்திரையை தயார் செய்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் 2 அரசு அலுவலர்களின் ஊதியச்சான்றை போலியாக தயார் செய்து. அதில் தாசில்தார் கையெழுத்து மற்றும் முத்திரையை இட்டு சான்றிதழ் தயார் செய்துள்ளனர். இந்த சான்றிதழை பன்னீர்செல்வத்திடம் வழங்கியுள்ளனர். இதை அவர் மன்னார்குடியில் உள்ள சங்கமம் சிட்பண்ட் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார். அந்த சான்றிதழில் தாசில்தார் முத்திரையில் கோபுரசீல் இல்லாததால் அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர். அந்த சான்றிதழை திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்திற்கு சரி பார்க்க அனுப்பிவைத்தனர். இதில் தாசில்தாரின் போலியான கையெழுத்தும், போலியான அலுவலக முத்திரையை பயன்படுத்தி சான்றிதழ் தயார் செய்து தெரியவந்தது.

கைது
இதுகுறித்து தாசில்தார் உதயகுமார் திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்–இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், ராஜ்குமார், வீரப்பரஞ்ஜோதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக், அரசு பஸ் டிரைவர் இளங்கோவன் ஆகியே 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தாசில்தார் கையெழுத்துடன் போலியாக சான்றிதழ் தயாரித்த மோசடி செய்த சம்பவத்தால் திருத்துறைப்பூண்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; டெய்லர் சாவு

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேட்டுப்பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது45). இவர் அதே பகுதியில் டெய்லர் கடை வைத்து இருந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு
திருத்துறைப்பூண்டியில் உள்ள ஒரு டெய்லர் கடைக்கு வந்துவிட்டு திரும்பி மேட்டுப்பாளையத்திற்கு மோட்டார்சைக்கிளில் ஞானசேகரன் சென்று கொண்டு இருந்தார். அப்போது திருத்துறைப்பூண்டியை அடுத்த மன்னை சாலையில் உள்ள தாசில்தார் குடியிருப்பு பகுதிக்கு அருகே சென்ற போது எதிரே விட்டுக்கட்டி செங்குளத்தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் மணிகண்டன்(18) என்பவர் வந்த மோட்டார்சைக்கிள், ஞானசேகரன் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் ஞானசேகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka