வெள்ளி, 27 ஜனவரி, 2012

சான்றிதழ்களுக்காக 60 கி.மீ. பயணிக்கும் 5 கிராம மக்கள்

திருத்துறைப்பூண்டி, ஜன. 26: அரசின் நிர்வாகக் குளறுபடியால் சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்காக, 5 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நீடாமங்கலம் செல்ல சுமார் 60 கி.மீ. தொலைவு பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து, அருகே உள்ள திருவாரூர் வட்டத்துடன் அவற்றை இணைக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தில் திருநெல்லிக்காவல், செருவாமணி, சேந்தங்குடி, மாவட்டகுடி, 57 குலமாணிக்கம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

இந்தக் கிராமங்கள் வடபாதிமங்கலம் வருவாய் சரகத்திலும், திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்டும், நீடாமங்கலம் வட்டத்திலும் அமைந்துள்ளன.

இந்தக் கிராம மக்களுக்கு அருகில் உள்ளது திருவாரூர். ஆனால், நீடாமங்கலம் வட்டத்துடன் இந்தக் கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளதால், இந்தக் கிராமங்களில் இருந்து திருநெல்லிக்காவல் வந்து ரயில் மூலமாகவோ அல்லது நாள் ஒன்றுக்கு சில முறை வரும் அரசுப் பேருந்து மூலமாகவோ திருவாரூர் செல்ல வேண்டும். பின்னர், அங்கிருந்து நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் சென்று சான்றிதழ்கள், முதியோர், விதவை ஆதரவற்றோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் நாள் முழுவதும் செலவிட்டு, பொருள் செலவும் செய்ய வேண்டிய நிலைமையில் உள்ளனர் மேற்குறிப்பிட்ட 5 கிராம மக்கள்.

குறிப்பிட்ட அதிகாரி அன்று இல்லையென்றால், மீண்டும் அடுத்த நாள் செல்ல வேண்டிய நிலையும் உள்ளது.

இந்த நிலையைப் போக்க குறிப்பிட்ட அந்த 5 கிராமங்களையும் திருவாரூர் வட்டத்துடன் இணைக்க வேண்டும்.

சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, கூத்தாநல்லூரைத் தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதன்படி, கூத்தாநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு மேற்கண்ட 5 கிராமங்களையும் அதில் இணைத்து, இந்த கிராம மக்களின் துயரைப் போக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka