சனி, 31 ஜனவரி, 2015

நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ. 30 லஞ்சம் வாங்குவதை தடுக்க வேண்டும்

திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ. 30 லஞ்சம் வாங்குவதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டுமென குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திப் பேசினர்.


திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் எம். மதிவாணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

சேதுராமன் (குடவாசல்): கொரடாச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2012 -2013 ஆம் ஆண்டு அரசு அறிவித்த விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். அறுவடை இயந்திரம் சம்பா பணிக்கு அதிகளவில் கொண்டுவரப்படும் என்று மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே கூறியது. அது முழுமையான செயல்வடிவம் பெறவில்லை. நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைக்கு ரூ. 30 லஞ்சம் வாங்குவதைத் தடுக்க வேண்டும்.

வெ. சத்யநாராயணன் (டெல்டா விவசாயிகள் குழுமம்): நெல்பழம், புகையான் தாக்குதலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கணக்கிட்டு மாநில அரசு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் பயன்பெற்று வந்த, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்கிய தேசிய வேளாண் காப்பீடுத் திட்டத்தையே வரும் ஆண்டுகளில் செயல்படுத்த வேண்டும்.

பழனிவேல் (கோட்டூர்): சம்பாவில் பூ பூக்கும் தருணத்தில் மழை பெய்ததால் நிகழாண்டு மகசூல் குறைந்துள்ளது. விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசுத்துறை மூலம் குறைந்த வாடகையில் வைக்கோல் கட்டும் இயந்திர வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். உழவு, டீசல் மானியம் வழங்க வேண்டும்.

மருதப்பன் (நீடாமங்கலம்): திருவாரூர் மாவட்டத்தில் கூடுதலாக மகசூல் விளைந்ததாக கணக்கு காண்பிக்க வெளிமாவட்டங்களிலிருந்து நெல் கொண்டு வருவதைத் தடுக்க வேண்டும். கோடை சாகுபடிக்கு பற்றாக்குறையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்.

சுந்தரமூர்த்தி (வலங்கைமான்): அறுவடைக் காலத்தில் திடீரென அவ்வப்போது மழை பெய்து வருகிறது. திறந்தவெளியில் கொட்டி வைத்திருக்கும் நெல்மூட்டைகளை பாதுகாக்க தார்ப்பாய் மற்றும் பாலித்தீன் பாய்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாவட்டத்தில் நிலவும் சாக்குத் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும். புகையான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

தம்புசாமி (கொரடாச்சேரி): தனியார் கரும்பு ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு 2013-2014 ஆம் ஆண்டுக்குரிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க அலுவலகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளுடனான மாதக் கூட்டத்தை நடத்த வேண்டும்.

சந்திரசேகரன்: மழை மற்றும் பனிக்காலமாக உள்ளதால் நெல்கொள்முதல் நிலையங்கில் 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்களை கொள்முதல் செய்ய வேண்டும்.

ச.வீ. ராமகிருஷ்ணன் (கங்களாஞ்சேரி): உளுந்து பயிருக்கு பயிர்க்காப்பீடு செய்ய கூட்டுறவுத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொதுப்பணித் துறையினர் முன்னுரிமை அடிப்படையில் தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

கூட்டத்தில் ஆட்சியர் எம். மதிவாணன் பேசியது: கூடுதல் அறுவடை இயந்திரம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதுப்புது வேளாண் கருவிகளை புகுத்தவும், அதை பழுதுபார்க்கவும், இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், வேளாண் இணை இயக்குநர் க. மயில்வாகனன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ஆ. அழகிரிசாமி, பொதுப்பணித்துறை பொறியாளர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கே.சி. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka