ஞாயிறு, 21 டிசம்பர், 2014

காவிரியில் அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பேட்டி

காவிரியில் அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்க போவதாக விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் கூறினார்.
டெல்லியில் உண்ணாவிரதம்
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை அனுமதிக்க கூடாது, காவிரி நீர் பங்கீட்டு குழுவையும், காவிரி மேலாண்மை வாரியத்தையும் உடனே அமைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் கடந்த 15–ந் தேதி முதல் டெல்லியில் டெல்டா விவசாயிகள் 200 பேர் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன் தலைமையில் பாராளுமன்றம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். 3 நாள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோளின்படி 17–ந் தேதி விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
போராட்டத்தை தொடர்ந்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன், இயற்கை உழவர் இயக்க நிர்வாகி ஜெயராமன், தஞ்சை மாவட்ட தமிழக காவிரி பாதுகாப்பு சங்க நிர்வாகி சுந்தரவிமலநாதன், டெல்டா புலிகள் அமைப்பு நிர்வாகி கணேசமூர்த்தி, தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு நலச்சங்க நாகை மாவட்ட செயலாளர் கண்ணப்பன், கீழ்வேளூர் ராமதாஸ் உள்ளிட்ட 22 விவசாய சங்கங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் 200 பேர் டெல்லியில் இருந்து ரெயில் மூலமாக நேற்று சென்னை திரும்பினர். அதைதொடர்ந்து அங்கிருந்து பஸ்சில் மன்னார்குடி வந்தனர்.
உற்சாக வரவேற்பு
டெல்லியில் போராட்டத்தை முடித்து கொண்டு திரும்பிய விவசாயிகளுக்கு மன்னார்குடி பஸ்நிலையம் அருகே பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் ரெங்கநாதன், மன்னை வட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் அய்யப்பன், பொருளாளர் செந்தில்குமார், அரிமா சங்க தலைவர் ரெங்கராஜன், எல்.ஐ.சி. ஊழியர் சங்க நிர்வாகி சேதுராமன், தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், நடனபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டம் குறித்து மன்னார்குடியில் திருவாரூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
டெல்லியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கிய அரசியல் கட்சிகள், விவசாயிகள் சேவை அமைப்புகளுக்கு நன்றி. அடுத்த கட்ட நடவடிக்கையாக கர்நாடக அரசின் அணைகட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மன்னார்குடி தேரடியில் இருந்து உண்ணாரவிரத குழுவினர் ஊர்வலமாக பஸ்நிலையம் அழைத்துவரப்பட்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka