எல்லாப் பணிகளையும் இடைவிடாமல் தொடர்ந்து செய்ய மூளைக்குக்கு கணிசமான ஆக்கத்திறன் தேவை. உடல் பயன்படுத்தும் மொத்த
ஆக்ஸிஜனில் 20 சதவிகிதத்தை மூளை பயன்படுத்திக் கொள்கிறது. புத்தம் புதிதாகப் பிறந்த ஓர் ஆண் குழந்தையின் மூளையின் எடை அப்போது பிறந்த ஒரு பெண் குழந்தையின் எடையை விட சற்று அதிகமாகவும், அளவிலும் பெரியதாகவும் இருக்குமாம்.
தலையின் சுற்றளவும், பெண் குழந்தையின் தலையின் சுற்றளவைவிட 2 சதவிகிதம் அதிகமாக இருக்கும். பெண் குழந்தையின் மூளையை விட ஆண் குழந்தையின் மூளை 12-20 சதவிகிதம் பெரியதாக இருக்கும். அளவில் வித்தியாசம் இருக்கும் நிலையில், ஆணும் பெண்ணும் அவர்களின், மூளைச் செயல்பாட்டில், திறனில் வித்தியாசம் இருக்குமா என்றால், நிச்சயம் இருக்கும் என்பதுதான் பதில்.
மூளையை லத்தீன் மொழியில் ‘செரிபிரம்’ என்பர். மனிதனின் உடல் எடையில் 50-ல் ஒரு பங்கு எடை கொண்டது மூளை. வயது வந்த ஓர் ஆணின் மூளை 1360 கிராமும், பெண்ணின் மூளை 1230 கிராமும் எடை கொண்டது. பொதுவாக, ஆண் மூளை, பெண் மூளையை விட 11-12 சதவிகிதம் அதிக எடை கொண்டது. எல்லாஆண்களுடைய மூளையும் ஒன்று-போலவேதான் இயங்கும். அவர்களுடைய மூளையில் எத்தனையோ விதமான எண்ணங்கள், சிந்தனைகள் தோன்றினாலும், கடைசியில் இரண்டுவிதமான உணர்வுகளில் முடிகிறது. ஒன்று பயம், இன்னொன்று இன்பம். இத்தகைய அமைப்பில்-தான் ஆண் மூளை உள்ளது. ஜாதி, மத, அந்தஸ்து வேறுபாடின்றி அனைத்து ஆண் மூளைகளின் இயக்கமும் இன்பம், பயம் என்ற இந்த இரண்டைச் சார்ந்தே உள்ளது. அதாவது சம்பாதிப்பது, இனச் சேர்க்கை, பணம், பட்டம், பதவி இவற்றை அடைந்து அதில் ஏற்படக் கூடிய சந்தோஷத்தை நோக்கி இயங்குதல், அடுத்ததாக ஈட்டிய அத்தனை சுகபோகங்களையும் இழந்து விடுவோமோ என்ற பயத்தை நோக்கி இயங்குதல்.
எடையில் பெண்ணின் மூளையைவிட ஆணின் மூளை பெரியது என்றால், பெண்களைவிட ஆண்கள் புத்திசாலியாக இருப்பார்களோ?
பெண்களின் சீக்ரட் ஆஃப் சக்ஸஸ்
அன்று பள்ளியில் இருந்து வீட்டுக்குப் போகவே சித்தார்த்துக்குப் பிடிக்கவே இல்லை. வீட்டில் என்ன நடக்குமோ என்ற பயம். அதுக்குக் காரணம், அன்றுதான் அரையாண்டுத் தேர்வு முடிவுகள் வெளியாகிருந்தன. பத்தாவது படிக்கும் சித்தார்த், மிகவும் குறைவாக மார்க் வாங்கியிருந்தான். அதே நேரத்தில், அன்றைய தினமே 8-ம் வகுப்பில் படிக்கும் அவனுடைய தங்கை சுமதிக்கும் மதிப்பெண் பட்டியல் கொடுத்திருந்தார்கள். அவள்தான் வகுப்பிலேயே முதல் மதிப்பெண். இதைக்கேட்டதும், சித்தார்த்துக்கு இன்னும் பயம் அதிகமாகிவிட்டது.
இவன் நினைத்ததுபோலவே, வீட்டில் அப்பாவும் அம்மாவும் அவனை திட்டித் தீர்த்துவிட்டார்கள். சுமதிக்கு நாங்க சொல்லிக்கொடுக்கறதே இல்லை. அவளே படிச்சு எப்படி மார்க் எடுத்திருக்கா பாரு. நீயும் இருக்கியே. நானும் அம்மாவும் ஆபீஸ்ல இருந்து வந்து உனக்குப் பாடம் சொல்லிக்கொடுக்குறோம். ஸ்பெஷல் டியூஷன் வேற போற. அப்படி இருந்தும் இப்படி மார்க் வாங்கியிருக்கியே. நீயெல்லாம் எப்படிப் படிச்சி பாஸ் பண்ணப்போறியோ தெரியல. இந்த லட்சணத்துல, ஸ்டேட் ரேங்க் வாங்கிக் காட்டறேன்னு சவால் வேற என்று அப்பா திட்டுவதைத் தலை குனிந்து கேட்டுக்கொண்டிருந்தான் சித்தார்த். இதுபோன்ற சம்பவங்கள் வீட்டுக்கு வீடு நடப்பது உண்டு. ஒவ்வோர் ஆண்டும், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தைப் பார்த்தால்,
ஆண்களைவிட பெண்களே அதிக சதவிகிதத்தில் தேர்ச்சி பெற்றிருப்பதைப் பார்க்கலாம். ஆண் குழந்தைகள் பொறுப்பின்றி ஊர் சுற்றுவதால், தேர்ச்சி விகிதம் குறைவு என்று கூறினாலும், பெண்கள் அதிக மதிப்பெண் பெற இயற்கையும் அவர்களுக்கு உதவுகிறது என்றே சொல்லலாம். எப்படி?
மூளையை முன் மூளை, நடு மூளை, பின் மூளை என்று பிரித்திருக்கிறார்கள் எனப் பார்த்தோம். இதில், முன் மூளையை செரிபெரம் கார்டெக்ஸ் என்பார்கள். இப்பகுதியில்தான் பார்ப்பவை, படிப்பவை எல்லாம் நன்கு பதியத் தொடங்குகின்றன. பெண்களுக்கு இந்தப் பகுதி ஆண்களை விடவும் சற்று தடிமனாக இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சுலபமாகச் சொன்னால், தடிமனான காகிதத்தில் எழுதியது, மெல்லிய தாளில் எழுதியதைவிட அழுத்தமாகவும், அதிக நாளும் இருக்கும். அதுபோல், பெண்களின் ஞாபக சக்தியும் ஆண்களைவிட சற்று அதிகமே.
நான் பேச நினைப்பதெல்லாம்...
அதேபோல், வளவளவென்று பெண்கள் பேசிக்கொண்டிருப்பதற்கும் அந்த செரிபெரம் கார்டெக்ஸின் அதிகப்படியான தடிமன்தான் காரணம். ஆண்களால் பெண்களைப்போல் வார்த்தைகளை அதிகம் உபயோகப்படுத்த முடியாதாம். கிட்டத்தட்ட பெண்கள் ஒரு நாளில் பயன்படுத்தும் வார்த்தைகளில் பாதி அளவை மட்டுமே ஆண்கள் உபயோகப்படுத்துகிறார்கள். சரி, ஆண்-பெண் மூளைக்கு இடையே உள்ள சில முக்கியமான வித்தியாசங்களைப் பார்ப்போமா?
- ஆண்(கள்) மூளை, பெண்(கள்) மூளையைவிட அளவில் சற்று பெரிதுதான். ஆனாலும், வயது ஏற ஏற பெண் மூளையைவிட சுருங்கிவிடுகிறது.
- பெண் மூளை, குளுகோஸை அதிக அளவில் எரிப்பதால் உயர் வெப்ப நிலையில் இயங்குகிறது.
- சிந்திக்கும்போது பெண்களே அதிகளவு மூளைத் திறனை உபயோகிக்கின்றனர்.
- மூளையின் கார்டெக்ஸ் பகுதியில் இருக்கும் ஒரு பகுதி பெண் மூளையைவிட ஆணுக்கு சற்று அகன்று இருக்கும். இதனாலேயே, அறிவியல் மேதை, கணித மேதை என்று பல ஆண்கள் புகழ்பெற முடிந்தது என்கின்றனர் அறிவியலாளர்கள்.
- சாதாரணமாக ஓர் ஆணுக்கு 15 நிமிடத்துக்கு ஒருமுறை பாலுணர்வு தோன்றும். ஆனால், ஒரு பெண்ணுக்கோ ஒரு நாளில் ஒருமுறையோ அல்லது இரண்டு நாள்களுக்கு ஒருமுறையோதான் தோன்றுமாம்.
- பெண்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்போது,மூளையின் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தக்கூடிய நரம்புகள் தூண்டப்படுகிறதாம். இதனால்தான், பெண்- மணிகள் ஒலித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
- தொந்தரவு தரக்கூடிய சிறு ஒலியைக்கூட, ஆண் குழந்தைகளைவிட பிறந்த பெண் குழந்தைகள் எளிதில் கண்டுகொள்ளும். அதனால்தான், கணவனின் கடுமையான குறட்டைச் சத்தத்துக்கு இடையிலும் குழந்தையின் சிறு சிணுங்கலைக் கூட ஒரு பெண்ணால் கண்டுகொள்ள முடிகிறது.
- ஒரு பெண்ணை 20 விநாடிகள் கட்டிப்பிடித்திருந்தாலே, ஆக்ஸிடாஸின் என்ற ரசாயனப் பொருள் அவள் மூளையில் சுரந்த்துவிடும். அதனால், கட்டிக்கொண்டு இருந்தவரின் மீது அந்தப் பெண்ணுக்கு அதீத நம்பிக்கை வந்துவிடுமாம்.
- பெண்களைவிட ஆண்கள் மிகக் குறைந்த வார்த்தைப் பிரயோகங்களையே உபயோகப்படுத்துகிறார்கள் என்கின்றனர் நரம்பியல் நிபுணர்கள்.
- எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமான வித்தியாசம் இது. ஆராய்ச்சியாளர்களின் புருவத்தை உயர்த்த வைத்திருக்கும் சமீபத்திய கண்டுபிடிப்பு. அதாவது, ஆணுக்கு மூளையின் முன் பகுதியான செரிபெரம் கார்டெக்ஸில், நியூரான்கள் எனப்படும் நரம்பு செல்கள் அதிகமாக இருக்கின்றன.
- ஆனால், பெண்களுக்குக் குறைவாக இருக்கிறது. சரி, அதனால் என்ன என்று நீங்கள் கேட்கலாம். மூளை முழுவதும் கோடிக்கணக்கில் நியூரான்களின் நிறைந்திருக்கின்றன என்று ஏற்கெனவே பார்த்தோம். நியூரான்களின் உள்பகுதியில் கரு இருக்கும். வால் பகுதியில் ஆக்ஸான் எனப்படும் நரம்பிழைகள் கொத்துக் கொத்தாக இருக்கும். உடல் பகுதியில் இருந்தும் நரம்பிழைகள் கொத்தமல்லிக் கட்டுபோல் தொங்கிக் கொண்டிருக்கும். ஒரு கட்டு
நரம்பிழைகள், அதேபோன்ற இன்னொரு கட்டு நரம்பிழைகள் வழியாகத் தொடர்புகொண்டிருக்கும். இந்த நரம்பிழைகளில் ஏதேனும் பாதிப்போ, குறைபாடோ ஏற்பட்டால், நரம்புகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் பாதிக்கப்படும். இதனால், ஞாபக மறதி, நன்கு பரிச்சயமான நபர், இடம், மொழி போன்றவற்றில்கூட தடுமாற்றம் ஏற்படும். இது போன்ற பாதிப்புகளில் முதன்மையானது அல்ஸைமர் நோய் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். ஏற்கெனவே, பெண்களின் மூளையில் நியூரான்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்று பார்த்தோம். இந்த நிலையில், அவர்களுடைய மூளையில் நரம்பிழைகளில் தொடர்பு அறுபடும்போது பாதிப்பு அதிகமாக இருக்கும். அதனால்தான், ஆண்களைவிட பெண்களுக்கு அல்ஸைமர் நோயின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக