செவ்வாய், 22 நவம்பர், 2016

காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

காவிரி டெல்டா பகுதியை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தி திருவாரூரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திருவாரூர் மாவட்ட விவசாயிகள் நலச் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழு அமைக்க வேண்டும்.
காவிரி டெல்டாவில் சம்பா பயிர் பாதிப்பு காரணமாக விவசாயிகள் தற்கொலை மற்றும் உயிரிழப்புக்கு தமிழக அரசு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து, ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் சேதுராமன் தலைமை வகித்தார். இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

ஏ.டி.எம். மையத்துக்கு மாலை - நூதன போராட்டம்

முத்துப்பேட்டையில் ஏ.டி.எம். மையத்துக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் சார்பில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்த மத்திய அரசை கண்டித்து முத்துப்பேட்டையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் பாலகிருஷ்ணன், நகர தலைவர் ஜகபர் அலி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செய்தி தொடர்பாளர் முகைதீன்பிச்சை வரவேற்றார். முன்னதாக காங்கிரஸ் கட்சியினர் வங்கி வளாகத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வங்கி முன்பு நிறுத்தினர். அப்போது காங்கிரஸ் கட்சியினர் செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கையில் ஏந்தி மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

மாலை அணிவித்தனர்

ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பையன், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் இளங்கோவன், மாவட்ட செயலாளர் சுந்தரராமன், மாவட்ட அமைப்பு செயலாளர் ரெங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் நாசர் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் காங்கிரஸ் கட்சியினர் மாலையுடன் ஊர்வலமாக சென்று வங்கி அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் அங்கு சென்று மாலையை அகற்றினர்.

வியாழன், 3 நவம்பர், 2016

வெளிமாநில சாராயம் பதுக்கிய வாலிபர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலகொற்கையில் வெளிமாநில சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு
தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவத்தன்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெளிமாநில சாராயம் பதுக்கி வைத்திருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மேலகொற்கை ஏரி வாய்க்காலை சேர்ந்த முருகையன் மகன் கார்த்திபன் (வயது 23) என்பதும், புதுச்சேரி மாநில சாராயத்தை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திபனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 105 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

வட்டித் தொழில் செய்வோருக்கு கலெக்டர் எச்சரிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடு படுகிறவர்கள் அரசு விதிமுறையை மீறி வசூலிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உரிமம் பெறாமல் வட்டித் தொழில் செய்தல் மற்றும் தமிழ்நாடு வட்டிக்கு பணம் கொடுப்போர் சட்டம் 1957 பிரிவு 7-ன் படி அரசால் நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தைவிட கூடுதல் வட்டி வசூல் செய்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு மிகையான வட்டித் தொழில் செய்யும் நோக்கத்துடன் வட்டித் தொழில் செய்யும் நபர்கள் மீது மக்கள் காவல்துறையில் புகார் தெரிவிக்கலாம்.
அதாவது நாள்வட்டி, கந்துவட்டி, மீட்டர்வட்டி அல்லது தண்டல் மற்றும் மணிக்கணக்கு வட்டித் தொழில் செய்யும் நபர்கள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென எச்சரித்துள்ளார்.

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka