செவ்வாய், 3 ஜனவரி, 2017

கன்றுக்குட்டிக்கு 2 பேர் உரிமை கொண்டாடியதால் ரத்த பரிசோதனை

முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டை அருகே ஒரு கன்றுக்குட்டிக்கு 2 பேர் உரிமை கொண்டாடியதால் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ரத்த பரிசோதனையில் கண்டறிய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தகராறு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை தர்கா பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவர் தனது வீட்டில் ஏராளமான மாடுகளை வளர்த்து வருகிறார். இவருடைய பசு மாடு ஒன்று கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கன்றுக்குட்டி ஈன்றது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 27-ந் தேதி ஜாம்புவானோடை தெற்கு தெருவை சேர்ந்த ராஜரெத்தினம் என்பவர் மதியழகன் வீட்டிற்கு சென்றார். அப்போது அவர் அங்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த கன்றுக்குட்டியை பார்த்து “தனக்கு சொந்தமான கன்றுக்குட்டி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டது. இது தான் தனக்கு சொந்தமான கன்றுக்குட்டி“ என்று கூறியுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் முத்துப்பேட்டை போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். அதன் பேரில் 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

ரத்த பரிசோதனை

இதையடுத்து, கன்றுக்குட்டியையும், 2 பேரின் பசு மாடுகளையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரும்படியும், எந்த பசுவுடன் கன்றுக்குட்டி செல்கிறதோ அந்த பசுமாட்டின் உரிமையாளருக்கே அந்த கன்றுக்குட்டி சொந்தம் என்று தெரிவித்தனர். இதற்கு உடன்பட்ட அவர்கள் பசுமாடுகளையும், கன்றுக்குட்டியையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அப்போது மதியழகனுக்கு சொந்தமான பசுவுடன் கன்றுக்குட்டி சென்றது. இதை தொடர்ந்து மதியழகனிடம் கன்றுக்குட்டி ஒப்படைக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ராஜரெத்தினம் தரப்பினர், நேற்றுமுன்தினம் காலை மதியழகன் வீட்டிற்கு சென்று கன்றுக்குட்டியை தூக்கி சென்றதாக தெரிகிறது. இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் நிலை உருவானது.

இதுகுறித்து மதியழகன் மீண்டும் முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரில் அத்துமீறி எனது வீட்டில் புகுந்த ராஜரெத்தினம் தரப்பினர், தன்னிடம் தகராறு செய்து கன்றுக்குட்டியை தூக்கி சென்று விட்டதாக கூறியிருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் கன்றுக்குட்டியையும், பசுவையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். மேலும் கால்நடை மருத்துவக்குழுவினரால் கன்றுக்குட்டிக்குரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்து கண்டறிய போலீசார் முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka